Saturday, September 19, 2009

மனித உரிமை மீறல்கள் குறித்த உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்: சிறிலங்காவுக்கு ஐ.நா. உறுதியாகத் தெரிவிப்பு

[சனிக்கிழமை, 19 செப்ரெம்பர் 2009]

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது சிறிலங்காப் படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற, சுயாதீனமான விசாரணை ஒன்று முழுமையாக நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கொழும்பு அரசுக்கு உறுதியாகக் கூறியுள்ளது.

உண்மையைக் கண்டறியும் விசாரணை ஒன்று நாடு முழுவதும் நடத்தப்பட வேண்டும் என்றும் பதில் கூறும் பொறுப்பு சிறிலங்கா அரசுக்கு இருக்கின்றது என்றும் தான் கருதுவதாக ஐ.நா. இன்று சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஐ.நா.வின் அரசியல் பொதுச் செயலாளர் லைன் பாஸ்கோவேவின் சிறிலங்கா பயணத்தின்போது ஐ.நா.வின் உறுதியான இந்த நிலைப்பாடு அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக, அவர் கொழும்பில் இருந்து புறப்பட்ட பின்னர் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை கூறுகின்றது.

"அந்த நடவடிக்கைகள் (உண்மையைக் கண்டறிவது) சுயாதீனமாகவும் பக்கச்சார்பற்ற விதத்திலும் அமைந்திருப்பது அவசியம்" என பாஸ்கோவே அரச தலைவரிடம் கண்டிப்பாக வலியுறுத்தி இருக்கிறார்.

போரின்போது பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் அது குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தலைமையிலான அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி தொடர்ச்சியாகக் கோரி வருகின்றது. ஆனால், போரில் ஒரு பொதுமகன் கூட படையினரால் கொல்லப்படவில்லை என்று கூறி அந்தக் குற்றச்சாட்டுக்களை சிறிலங்கா அரசு மறுத்து வருகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் கொண்டு வரப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான பிரேரணையைக் கூட அண்மையில் சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளின் உதவியுடன் சிறிலங்கா தோற்கடித்திருந்தது.

"கடந்த காலத்துடன் மோதுவது சிக்கலானது" எனத் தெரிவிக்கும் ஐ.நா. அறிக்கை, "விடயங்களைக் கிளறுவது சினமூட்டுவதாக இருந்தாலும் பிற்காலத்திற்கு அது மிகப் பெறுமதி வாய்ந்ததாக இருக்கும்" எனவும் கூறி உள்ளது.

இனங்களுக்கு இடையிலான கருத்து இணக்கம் சிறிலங்காவின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமானது எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

"உலகில் பல இடங்களில் மோதல்களின் பின்னரான நிலைமைகளை ஐ.நா. கையாண்டுள்ளது. பதில் கூறக் கடமைப்பட்டுள்ள பிரச்சினைகளைக் கையாள்வதற்கான வழிவகைகளைத் தேடுவது, அமைதியை ஏற்படுத்துவதற்கும் முன்நோக்கி நகர்வதற்கும் அவசியமாக இருந்துள்ளது என்பதையும் தெரிந்து வைத்துள்ளது" என அறிக்கை மேலும் குறிப்பிடுகிறது.

போர் முடிந்ததாக சிறிங்கா அரசு அறிவித்தபோது, இறுதிக் கட்ட மோதல்களின்போது சுமார் 7 ஆயிரம் பொதுமக்கள் உயிரிழந்தனர் என ஐ.நா. கணக்கிட்டிருந்தது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.