Sunday, September 20, 2009

ஈழப் போராட்டங்களை திசை திருப்பவே உலகத் தமிழ் மாநாட்டை கருணாநிதி அறிவித்திருக்கிறார்: இயக்குனர் சீமான்.

[ஞாயிற்றுக்கிழமை, 20 செப்ரெம்பர் 2009]

ஈழப் போராட்டங்களை திசை திருப்பவே உலகத் தமிழ் மாநாட்டை தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்திருக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார் நாம் தமிழர் இயக்கத் தலைவர், இயக்குநர் சீமான்.

புதுக்கோட்டையில், இன்றும் நாம் தமிழர் இயக்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய போது:

கோவையில் உலகத்தமிழ் மாநாடு நடத்தப்போவதாக கலைஞர் அறிவித்திருக்கிறார். மகிழ்ச்சிதான். ஆனால் இந்த மாநாடு ஏன் காலம் கடந்து நடக்கிறது. ஒன்று மட்டும் புரிகிறது. ஈழ போராட்டங்களை திசை திருப்பத்தான்....

மக்களின் போராட்ட குணங்களை மாற்றத்தான் உலகத்தமிழ் மாநாடு நடக்கிறது. ஆனால் என்ன செய்தாலும் எங்கள் போராட்ட குணத்தை மாற்ற முடியாது. தேசிய இனத்தின் அடக்குமுறைக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தைத்தான் பிரபாகரன் நடத்திவந்தார். அதைத்தான் நாங்களும் செய்து வருகிறோம்.

இனி போராடி பலனில்லை என்று சில அமைப்புகள் கொஞ்சம் அமைதி காக்கின்றன. ஆனால் நாம் தமிழர் இயக்கம் அமைதியாக இருக்காது. பொதுவாக நேற்று வரை நடந்து வந்த ஈழ போராட்டத்தில் இப்போது சிறிது இடைவெளி இருக்கு. இன்னும் நான்கு மாதங்கள் அல்லது நான்கு வருடங்களில் ஈழ போராட்டம் முன்பை விட பெரிய அளவில் வெடிக்கும்.

தனித்தமிழ் ஈழம் தான் தீர்வு; அந்த தீர்வை நோக்கி போராட்டம் தொடரும். இனி நாங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை. இரத்தம், கண்ணீர், மண்ணையும் இழந்துவிட்டோம். அதனால் எங்களால் இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் இனி இழக்கப்போவது சிங்களன் தான். சிங்களன் தான் இழக்க வேண்டும்.

மும்பை தாக்குதல் சம்பவத்தால் பாகிஸ்தான் எதிரி நாடாகிவிட்டது இந்தியாவுக்கு. அதனால் அங்கே கிரிகெட் விளையாட வீரர்களை அனுப்பவில்லை. இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்தார்கள் சிங்களர்கள். அதை மறந்துவிட்டு, மறைத்துவிட்டு இலங்கைக்கு கிரிக்கெட் விளையாட இந்தியா வீரர்களை அனுப்புகிறது.

பாகிஸ்தான் எதிரி நாடு; இலங்கை மட்டும் நட்பு நாடா? ஏன் இந்த பிரிவினை என்றார் சீமான். பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு சீமான் பதிலளிக்கையில், வரும் மே-17ல் இந்த இயக்கத்தின் சார்பில் நடக்கும் மாநாட்டில் நாம் தமிழர் இயக்க கட்சியின் சின்னம் மற்றும் கொடி அறிமுகப்படுத்தபடும் என்றார்.

பாரதிராஜா ஏன் உங்கள் ஈழ ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கவில்லை என்ற கேள்விக்கு, பாரதிராஜாவிற்கு சில வேலைகள் இருப்பதால் அவர் நாம் தமிழர் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கி இருக்கிறார். அவருக்கு இருக்கும் பணிகள் முடிவடைந்ததும் பங்கேற்பார் என்று நம்புகிறேன் என்றார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.