[வியாழக்கிழமை, 17 செப்ரெம்பர் 2009] வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 30 தொடக்கம் 40 வரையிலானவர்கள் ஒவ்வொரு நாளும் காணாமல் போவதாகத் தெரிவித்திருக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர, இதுவரையில் 10 ஆயிரம் பேர் முகாம்களில் இருந்து காணாமல் போய் இருப்பதாகவும் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற மக்கள் கண்காணிப்புக் குழுவின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார். இங்கு உரையாற்றிய அவர் மேலும் முக்கியமாக தெரிவித்ததாவது: "நாட்டில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்களுக்கு என வேறு வேறாக சட்டம் இல்லை. எல்லாருக்கும் பொதுவாகவுள்ள சட்டத்தினால் ஒரு பகுதியினர் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 3 இலட்சம் பேர் பலாத்காரமாக முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இது இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம் இல்லை. என்னைப் பொறுத்தவரையில் இது பலாத்காரமாக மக்கள் அடைக்கப்பட்டுள்ள முகாம்களாகும். இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு வீடு உள்ளது.
பணம் மற்றும் தொழில் உள்ளது. இங்கு அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளனர். இவர்கள் தம்மை வெளியில் செல்ல இடமளிக்குமாறு கோருகின்றார்கள். இவர்களைப் பலாத்காரமாகத் தடுத்துவைப்பதனால்தான் இவர்கள் தப்பி ஓடுகின்றனர். எமது பிள்ளைகளுக்கு நிவாரணம் அளிப்பதற்கு நாம் கூட்டமைப்பாக ஒன்றிணைந்து அழுத்தம் கொடுப்போம். அந்த நிலைமைகளை வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்று விளக்குவோம். எமது மக்களை உள்ளே வைத்திருப்பதால் மக்கள் துன்பமும் வேதனையும் அடைந்திருக்கின்றார்கள். இதனால் நாடே வேதனைப்படுகின்றது.
பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் என்பவற்றைப் பயன்படுத்திக் கைது செய்யப்படும் இவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படாது சிறைச்சாலைகளில் அடைக்கப்படுகின்றனர். இவ்வாறான மனித உரிமை மீறல்கள் தொடர்பாகப் பேசினால் அவர்களுக்கும் அரசு பயங்கரவாத முத்திரை குத்துகின்றது. இவ்வாறுதான் திசநாயகத்துக்கு 20 வருட கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது." இவ்வாறு மங்கள சமரவீர தனது உரையில் தெரிவித்தார்.
Thursday, September 17, 2009
வவுனியா முகாம்களில் இருந்து 30 தொடக்கம் 40 வரையிலானவர்கள் நாளாந்தம் காணாமல் போகின்றனர்: மங்கள சமரவீர தகவல்
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.