[சனிக்கிழமை, 02 மே 2009] வன்னியில் பொதுமக்கள் செறிவாக வசிக்கும் பாதுகாப்பு வலயத்தின் மீது சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களையும் வானூர்தித் தாக்குதல்களையும் நடத்தியுள்ளார்கள் என்பதற்கு ஆதாரமாக ஐக்கிய நாடுகள் சபையால் வெளியிடப்பட்ட செய்மதி ஒளிப்படங்களை சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது. பயிற்சிக்கும் ஆய்வுக்குமான ஐ.நா. நிறுவனம் (The UN Institute for Training and Research) UNOSAT என்ற அதன் செய்மதித் திட்டத்தைப் பயன்படுத்தி இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட ஒளிப்படங்களை ஆதாரமாக வைத்தே அனைத்துலக தொலைக்காட்சி நிறுவனங்கள் பலவும் ஊடகங்களும் இது பற்றிய செய்திகளை வெளியிட்டிருந்தன. ஆனால், "இந்த ஒளிப்படங்கள் விஞ்ஞான ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடியவையல்ல" எனத் தெரிவித்திருக்கும் பாதுகாப்பு அமைச்சு, களத்தில் நிலைமைகளைப் பார்வையிடுவதன் மூலமாக மட்டுமே அங்கு கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதா என்பதனை உறுதிப்படுத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றது. "இந்த ஒளிப்படங்கள் தொடர்பாகத் தெரிவிக்கப்படும் கருத்துக்களின் முடிவு விஞ்ஞான ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல" என பாதுகாப்பு அமைச்சு இன்று சனிக்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றது. இதற்கு முன்னர் இந்த ஒளிப்படங்களை வெளியிட்டமை தொடர்பாக கொழும்பில் உள்ள ஐ.நா. தூதுவர், அனர்த்த முகாமைத்துவ, மனித உரிமைகள் விவகார அமைச்சரினால் அழைக்கப்பட்டு விளக்கம் கோரப்பட்டிருந்தார். இரகசியமான இந்த ஒளிப்படங்களை ஐ.நா. எதற்காக ஊடகங்களுக்கு கசிய விட்டது எனவும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். பெப்ரவரி 15 ஆம் நாளுக்கும் ஏப்ரல் 19 ஆம் நாளுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பாதுகாப்பு வலயத்திற்குள் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட எறிகணை மற்றும் வானூர்திக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான ஆதாரங்களை இந்த ஒளிப்படங்கள் வெளிப்படுத்தியிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. "குண்டு விழுந்ததாகக் குறிப்பிடப்படும் இடங்களில் பாரிய வெடிப்புக்கள் அல்லது குழிகள் காணப்படுகின்றன. குறிப்பிட்ட குண்டுவெடிப்புக்கள் இடம்பெற்ற நேரத்தையும் இந்த ஒளிப்படங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. அதனால், யாருமே அவற்றை ஒப்பிட்டுச் சரிபார்த்து உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்" எனக் கூறுகின்றார் UNO SAT இல் வரைபடப் பிரிவின் தலைவரான இன்னர் ஜோறோ. "இவ்வாறான குழிகள் வான்படையின் தாக்குதலினால் மட்டுமே ஏற்படக்கூடியது" எனவும் அவர் அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியோன்றில் இன்னர் ஜோறோ திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றார். பொதுமக்கள் செறிவாக வசிக்கும் பகுதிகளின் மீது தாக்குதலை நடத்தும் போது கனரக ஆயுதங்களை தாம் பயன்படுத்துவதில்லை என சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாகவே மறுதலித்து வந்திருக்கின்றது.
Saturday, May 02, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.