[வெள்ளிக்கிழமை, 22 மே 2009] வடபகுதியில் இறுதிக்கட்டப் போர் தீவிரமாக இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி அப்பாவி தமிழர்களை கொன்றது தொடர்பான ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் குற்றம் சாட்டியிருக்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா படையினருக்கும் இடையே, உச்சக்கட்ட போர் நடைபெற்று வந்தபோது, சிறிலங்கா படையினர் போர் மரபுகளை மீறும் வகையில் தடைசெய்யப்பட்ட பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தி அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக மனித உரிமைகள் அமைப்புக்கள் பலவும் குற்றம் சாட்டியிருந்தன. அத்துடன், சன நெரிசல் அதிகமாகவுள்ள பகுதிகளில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற தமது வாக்குறுதியை மீறும் வகையில் தொடச்சியாக ஆட்டிலறி எறிகணைகளையும், கொத்துக்குண்டுகளையும் சிறிலங்கா படையினர் பயன்படுத்தியதால் பாரிய உயிரிழப்புக்கள் ஏற்பட்டன. இவ்வாறான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதை உறுதி செய்யும் செய்மதி ஒளிப்படங்கள் தம்வசம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருந்தது. இந்த தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதுடன், ஏராளமானோர் படுகாயமடைந்தனர். கொல்லப்பட்டவர்களின் ஆயிரக்கணக்கான உடலங்கள் சிதறிக்கிடக்கின்றன. மருத்துவ வசதிகள் இருக்காமையாலும், மருத்துவமனை தாக்குதலில் அழிக்கப்பட்டமையாலும் படுகாயமடைந்த பலர் பராமரிப்போ சிகிச்சையோ இல்லாமல் மரணமடைந்தனர். போரின் இறுதி இரண்டு நாட்களிலும் அதாவது கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் பதுங்குகுழிகளுக்குள் உயர் பாதுகாப்புக்காக இருந்தவர்கள் பலர் அதற்குள் வைத்தே சுட்டுக்கொல்லப்பட்டு அல்லது குண்டு வீசிக் கொல்லப்பட்டு உடலங்கள் அனைத்தும் பதுங்குகுழிக்குள் வைத்தே மணலால் மூடப்பட்டது. இந்நிலையில் விடுதலைப் புலிகளுடனான சண்டை முடிந்துவிட்டதாகவும் அதன் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாகவும் சிறிலங்கா அரசு திங்கட்கிழமை அறிவித்தது. போர் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டிருப்பதால் பாதுகாப்பான சூழ்நிலை இருப்பதால், தமது பணியாளர்களை அப்பகுதிக்கு அனுப்ப பல்வேறு அனைத்துலக அமைப்புக்கள், அரசை வலியுறுத்தி வருகின்றன. நாளைய நாள் கொழும்பு செல்லவிருக்கும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூட 'பாதுகாப்பு வலயம்' என முன்னர் அறிவிக்கப்பட்ட போர்ப் பகுதிக்குச் செல்வதற்கு அனுமதி கேட்டுள்ளார். இந்நிலையில், போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தடயங்களை அழிக்கும் முயற்சியில் சிறிலங்கா இராணுவம் இப்போது தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. போர் பகுதியில் சிதறிக்கிடக்கும் உடலங்கள் அவசர அவசரமாக இராணுவத்தால் அகற்றப்பட்டு வருவதாகவும், தற்காலிகமாக இயங்கி வந்த மருத்துவமனை கட்டடங்களும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு வருவதாகவும், அமெரிக்காவின் இல்லினாஸ் பல்கலைக்கழக பேராசிரியர் பிரான்சிஸ் அண்டனி குற்றம் சாட்டியுள்ளார். இதன் மூலம் இழப்புக்களைக் குறைத்துக்காட்டுவதற்கும் பாரிய கனரக ஆயுதங்கள் பயன்படுத்தவில்லை எனக் காட்டிக்கொள்வதற்கும் சிறிலங்கா அரசாங்கம் முற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
Friday, May 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.