Monday, May 25, 2009

தாயகத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து அயர்லாந்தில் ஒன்றுகூடல் இடம்பெற்றது

[திங்கட்கிழமை, 25 மே 2009] அயர்லாந்து தலைநகர் டப்ளின் ( Dublin) இல் நேற்று பிற்பகல் 24.05.2009, ஞாயிற்றுக்கிழமை மாலை 2.00 மணியளவில் இலங்கையில் சிங்கள அரசினால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்களையும், எமது தாயக விடிவிற்காக கடைசிவரை போராடி உயிர் நீத்த மாவீரர்களையும் நினைவுகூறும் முகமாக ஒன்றுகூடல் இடம்பெற்றது. இந்த நிகழ்வை இலங்கை சமாதானத்திற்கான அயர்லாந்தின் அமைப்பின்( Irish Forum for Peace in Sri Lanka) முக்கிய உறுப்பினரான Dr. Jude Lal தலமை தாங்கி நடாத்தினார். இவர் தனது உரையில் தாயகத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையை விபரித்துக் கூறினார். முதலில் தாயகத்தில் இன்னுயிர் நீத்த எமது தாயக உறவுகளை நினைவு கூர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து வன்னியில் பாதுகாப்பு வலயத்தில் இருந்து தொலைபேசி ஊடாக அயர்லாந்தில் வாழும் தங்கள் உறவுகளான திரு. தி.சதீஷ், திரு. நா.சண், திரு.க.வரன், திரு. வீ.கமலநாதன், திரு. ந.விவேகானந்தன், திரு. ச.ரஜனிகாந், திருமதி. ச.சுபாஜினி மற்றும் திரு. சோ.காண்டீபன் ஆகியோர் வன்னியில் உள்ள உறவுகள் கூறிய தகவல்களை யாவருடனும் பகிர்ந்தனர். இதன் பின் தாயகத்தில் உயிர் நீத்த அனைவருக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டோர் அனைவரும் மலர்கொண்டு தமது வணக்கத்தை உணர்வுடன் செலுத்தினர்.   இதனைத் தொடர்ந்து அயர்லாந்து தமிழர் அமைப்பின் ( Irish Tamil Forum ) உறுப்பினர் திரு சோ. காண்டீபன், இன்று அகதிகளாக இடம் பெயர்ந்து வவுனியாவில் முகாம்களில் உள்ள மக்களைப் பற்றி எடுத்துக் கூறியதுடன், அவர்களின் இன்றைய உடனடித்தேவையையும் விபரித்துக் கூறினார். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட அயர்லாந்து இன மக்கள் தாங்கள் எந்த வழியில் தமிழ் மக்களை காக்க உதவமுடியும் என கூறியதுடன். அதற்கான நடவடிக்கைகளையும் எடுப்பதாகக் கூறினர். இவர்களைத் தொடர்ந்து Roots Organaisation அமைப்பின் ஊடகப்பேச்சாளர் தம்மால் ஆன சகல உதவிகளையும் செய்வதாக கூறினர். இந் நிகழ்வின் போது இடம் பெயர்ந்த தமிழ் மக்களின் உடனடித்தேவையை விபரித்து துண்டுப்பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டது. இந்த ஒன்றுகூடல் நிகழ்வை இலங்கை சமாதானத்திற்கான அயர்லாந்தின் அமைப்பும்( Irish Forum for Peace in Sri Lanka), அயர்லாந்து தமிழர் அமைப்பும் ( Irish Tamil Forum ) ஒழுங்கு செய்திருந்தனர். இந்தஒன்று கூடலில் பலதரப்பட்ட வயதினரும் மற்றும் பல்லின சமூகத்தினரும் கலந்து கொண்டனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.