Monday, May 25, 2009

ஐ.நா.வில் இலங்கை அரசின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடாது: டி. ராஜா

[ திங்கட்கிழமை, 25 மே 2009] இலங்கை உள்விவகாரங்களில் சர்வதேச நாடுகள் தலையிடுவதை தடை செய்யும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியச் செயலர் டி. ராஜா வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறிப்பட்டு வருவது குறித்தும் அப்பாவி மக்கள் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டு வருவதும் குறித்தும் விவாதிப்பதற்காக ஐ.நா. சபையின் மனித உரிமை அமைப்புக் கூட்டம் நாளை கூடுகிறது. இலங்கையில் மனித உரிமைகள் மீறல் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். போர் குற்றங்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள் கோரியதை அடுத்து இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் இலங்கை அரசு சார்பில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. சர்வதேச நாடுகள் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு இத் தீர்மானம் தடை விதிக்கிறது. இந்தத் தீர்மானத்துக்கு சீனா, ரஷியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடாது என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தத் தீர்மானத்தை ஆதரித்தால் இலங்கை தமிழர் நலனை கைவிடுவதற்கு இணையாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியச் செயலர் டி. ராஜா வலியுறுத்தியுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று சொல்லிக் கொண்டு இலங்கை அரசு செய்த போர் குற்றங்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும். இலங்கையில் தமிழர்கள் ஒட்டு மொத்தமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அப்பாவிகள், மக்கள் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். எனவே தீர்மானத்தை ஆதரித்தால் இதுவரை செய்த எல்லாவற்றுக்கும் இந்தியா உடந்தையாக இருந்ததாகவே கருதப்படும். இறுதிக் கட்ட போரில் ஏராளமான அளவில் இரசாயன ஆயுதங்களும் கொத்து வெடிகுண்டுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. போர் நடைபெற்ற இடங்களுக்கும் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கும் ஐ.நா. பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆய்வு செய்ய அனுமதிக்கப்படவில்லை என்று ராஜா கூறினார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.