[திங்கட்கிழமை, 11 மே 2009] நோர்வேயில் நாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்ட 'வட்டுக்கோட்டை தீர்மானத்தின்' மீதான மீள் வாக்குப் பதிவில் 98.95 விழுக்காடு வாக்காளர்கள், இலங்கைத் தீவின் வடக்கு - கிழக்கு இணைந்த பாரம்பரிய தாயகப் பிரதேசங்களை உள்ளடக்கிய சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசே தீர்வென்று தமது அவாவை வெளிப்படுத்தியுள்ளனர். தமிழ் மக்கள் செறிந்து வாழும் நோர்வேயின் நகரங்களில் இந்த வாக்குப்பதிவு நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:00 மணியில் இருந்து இரவு 7:00 மணி வரை நடத்தப்பட்டது. தலைநகர் ஒஸ்லோவில் வாக்களித்தோர் தொகையின் சராசரி 89.8 விழுக்காடு எனவும், நோர்வே தழுவிய ரீதியில் வாக்களித்தோர் தொகையின் சராசரி 80 விழுக்காடு எனவும் வாக்குப்பதிவு ஏற்பாடுகளை முன்னெடுத்த 'ஊத்துறூப்' பல்லின பண்பாட்டு வார இதழ் தெரிவித்துள்ளது. இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வாக்குப்பதிவு முடிவுகளை 'ஊத்துறூப்' இதழ் வெளியிட்டுள்ளது. 5 ஆயிரத்து 633 வாக்குகள் மொத்தமாக பதிவாகியுள்ளன. இவற்றில் 5 ஆயிரத்து 574 பேர் தமிழீழத் தனியரசுக்கு ஆதரவாகவும், 50 வாக்குகள் எதிராகவும், 9 வாக்குகள் செல்லாத வாக்குகளாகவும் பதிவாகியுள்ளதாக 'ஊத்துறூப்' தெரிவித்துள்ளது. நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் 3 வாக்குச் சாவடிகளிலும், பர்கன், துறொண்ட்ஹைம், ஸ்தவாங்கர் ஆகிய பெருநகரங்கள் மற்றும் லோறன்ஸ்கூக், ஓலசுண்ட், மொல்ட, புளூறோ, துறொம்சோ, நூர்பியூர்ட் ஐட், நார்வீக், வோ (Bø) ஆகிய ஏனைய பிரதேசங்களிலுமாக மொத்தம் 14 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுகள் இடம்பெற்றன. பிரதேசங்களின் அமைவிட அடிப்படையில் இவ்வாறாக அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்கக்கூடிய நடைமுறை வசதியுடனும், அதேவேளை வாக்குரிமையுடையவர்களின் எண்ணிக்கை அடிப்படையிலும், வாக்காளர் தொகை 7 ஆயிரம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த 7 ஆயிரம் பேரில் 5 ஆயிரத்து 633 பேர் வாக்களித்துள்ளனர் என்பதோடு, இவர்களில் 5 ஆயிரத்து 574 பேர் தமிழீழத் தனியரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். நோர்வே முழுவதிலும் வாக்குரிமையுடைய, அதாவது 18 வயதும், அதற்கு மேற்பட்டவர்களுமாக 8 ஆயிரத்து 767 ஈழத் தமிழர்கள் உள்ளதாக நோர்வேயின் மத்திய கருத்தாய்வு நிறுவனத்தின் (SSB) தரவுகள் தெரிவிக்கின்றன. நோர்வேயில் நடைபெறுகின்ற நாடாளுமன்ற, மாநகர- மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் கூட, வாக்களிப்பில் பங்கேற்கின்ற மக்கள், ஏறத்தாழ 60 விழுக்காடுகளாகவே பதிவாகி வந்துள்ளன. தமிழீழத்திற்கான ஆணையைப் பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்குப்பதிவில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமான நோர்வே தமிழ் வாக்காளர்கள் வாக்களித்தமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என 'ஊத்துறூப்' இதழ் ஆசிரியர் மயூரன் விவேகானந்தன் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையையும், வடக்கு - கிழக்கு இணைந்த பாரம்பரிய தாயகத்தின் சுதந்திரத்தையும் இறைமையையும் வலியுறுத்தி, அவற்றின் அடிப்படையில் தமிழீழத் தனியரசு உருவாக்கப்படுவதே தமிழ் மக்களின் அரசியல் அவாக்களை நிறைவேற்றும் நிரந்தரத் தீர்வு என 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீதான மீள் வாக்கெடுப்பு இதுவாகும். 1976 ஆம் ஆண்டு ஜனநாயக முறையில் வெளிக்கொணரப்பட்டதும், 1977 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்களின் மிகப் பெருவாரியான வாக்குகளுடன் தமிழர் தரப்பை வெற்றியீட்டச் செய்த மக்கள் ஆணை இதுவாகும். 1977 ஆம் ஆண்டிற்குப் பின்னர், தமிழ் மக்கள் தமது அரசியல் அவாக்களை ஜனநாயக வழிமுறைகளில் வெளிப்படுத்த முடியாதவாறு, 1979 ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் சட்டமும், பின்னர் 1983 கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்பின் 6 ஆவது திருத்தச்சட்டமும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக பிரயோகிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கதாகும். அந்த வகையில், நோர்வேயில் நடைபெற்ற இந்த தேர்தல் மூலம், 33 ஆண்டுகளுக்குப் பின்னர், முழுமையான ஜனநாயக வழிமுறை மூலம் தமது அரசியல் வேணவாவினை வெளிப்படுத்துகின்ற வாய்ப்பு ஈழத் தமிழ் மக்களுக்கு எட்டியுள்ளதாக நோர்வே தமிழர்களால் கருதப்படுகின்றது. இந்த தேர்தலானது பல வழிகளில் முக்கியத்துவம் பெறுவதாக சமூக அரசியல் ஆய்வாளரும் பேராசிரியருமான கிறிஸ்தியான ஸ்தொக்க 'ஊத்துறூப்' இதழுக்கு வழங்கிய நேர்காணலில் கருத்துத் தெரிவித்துள்ளார். ஏனைய நாடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியிலும் இவ்வாறான தேர்தல்களை நடத்துவதற்குரிய உந்துசக்தியை இத்தேர்தல் வழங்கும். இதன் மூலம் தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையை (சுயநிர்ணய உரிமை) அங்கீகரிக்க கோரி, அனைத்துலக சமூகத்தை நோக்கிய அழுத்தங்கள் முன்வைக்கப்படும் என்று ஸ்தொக்க தெரிவித்துள்ளார். கிறிஸ்தியான் ஸ்தொக்க கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கைத் தீவின் இனப்பிணக்கு தொடர்பாக ஆய்வுசெய்து வருபவர் என்பது குறிப்பிடத்துக்கது. அவர் மேலும் தெரிவிக்கையில், பல்வேறு நாடுகளில் இருந்து புலம்பெயர் தமிழர்களால் இந்த கோரிக்கை எழுப்பப்படும் பட்சத்தில், சிறிலங்கா அரசாங்கத்தை நோக்கியும் அழுத்தங்களுக்கு இட்டுச்செல்லும் வாய்ப்பு உள்ளது என்றார்.
Monday, May 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.