Tuesday, May 12, 2009

முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் மீண்டும் அகோர எறிகணைத் தாக்குதல்: நோயாளர்கள் உட்பட 55 பேர் படுகொலை

[செவ்வாய்க்கிழமை, 12 மே 2009] முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் மீண்டும் இன்று காலை நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் நோயளார்கள் உட்பட 47 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 55 பேர் காயமடைந்துள்ளனர். 'மக்கள் பாதுகாப்பு வலய'மான முள்ளிவாய்க்காலில் தற்காலிகமாக இயங்கிவந்த முல்லைத்தீவு பொதுமருத்துவமனை மீது இன்று செவ்வாய்க்கிழமை காலை 8:00 மணியளவில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை அகோரமாக நடத்தியதாக வன்னியில் இருந்து 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார். இத்தாக்குதலில் நோயாளர்கள் உட்பட 47 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 55 பேர் காயமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மக்கள் வாழ்விடங்களை நோக்கி இன்று அதிகாலையில் இருந்து சிறிலங்கா படையினர் அகோரமாக எறிகணைத் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். மக்கள் தமது அன்றாட பணிகளை செய்ய முடியாத அளவுக்கு தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதல்கள் நடைபெறுவதால் பெருமளவிலான மக்கள் பதுங்குகுழிகளுக்குள்ளேயே இருப்பதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார். இம் மாதம் 2 ஆம் நாளில் முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் நோயாளர்கள் உட்பட 64 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் 87 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.