Thursday, April 23, 2009

வன்னியில் தமிழர் கொலைகளை நிறுத்த இந்தியா வலியுறுத்து. நேற்றைய அவசர உயர் மட்டக் கூட்டத்தில் முடிவு

[வியாழக்கிழமை, 23 ஏப்ரல் 2009] வன்னியில் தமிழ்ப் பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அப்பாவித் தமிழர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுவது குறித்து இந்தியா கவலை அடைகின்றது. இவ்வாறு நேற்றிரவு புதுடில்லியில் நடைபெற்ற அரசாங்க உயர் மட்டத்தினரின் அவசர கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் தமிழ்ப் பொதுமக்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுவது குறித்து நாங்கள் மிகவும் மனவருத்தம் அடைகின்றோம். இந்தப் படுகொலைகள் கட்டாயம் நிறுத்தப்பட வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவசர கூட்டத்தின் பின்னர் தெரிவித்தார். இலங்கைப் பிரச்சினை தொடர்பாக விவாதிக்கவென அவசரக் கூட்டம் ஒன்று நேற்றிரவு இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாதுகாப்புத்துறை அமைச்சர் எல்.கே.அந்தோனி, தேசிய பாதுகாப்புத் துறை ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் ஆகியோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டது. எனினும் போரை நிறுத்துமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் எதிர்பார்க்கப்பட்டது போன்று ஆணித்தரமான முடிவு எதுவும் எடுக்கப்படாமை குறித்து தமிழக அரசியல் வட்டாரங்கள் மிகுந்த கவலை தெரிவித்தன. இது வெறும் தேர்தல் "ஸ்ரண்ட்"" என்று அவதானி ஒருவர் கருத்துத் தெரிவித்தார். இலங்கையில் நடைபெறும் போரை நிறுத்தக் கோரி தமிழக முதல்வர் கருணாநிதி இன்று வேலை நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தார். தமிழக எதிர்க்கட்சித் தலைவரான செல்வி ஜெயலலிதாவும் உடனடியாகப் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். இந்தப் பின்னணியிலேயே பிரதமர் தலைமையிலான அவசர கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் இலங்கை அரசை போரை நிறுத்தக் கோரும் அழுத்தம் அதிகரித்து வருவதையடுத்து அதனைத் தணிக்குமுகமாகவும் இலங்கையின் நிலைப்பாட்டை இந்தியாவுக்கு எடுத்துரைக்குமுகமாகவும் ஜனாதிபதியின் சகோதரரும், அவரது ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ விரைவில் இந்தியா செல்லவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தியா அழைத்துப் பேச்சு நடத்தி யிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.