[புதன்கிழமை, 29 ஏப்ரல் 2009] "இந்தியாவின் சில அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழர்களைப் பகடைக் காய்களாக்கி அரசியல் சூதாட்டம் நடத்துகின்றனர். ஆனால், இந்திரா காந்தி எந்த அனைத்துலக சட்டத்தை பின்பற்றி பங்களாதேசிற்கு விடுதலை வாங்கிக் கொடுத்தாரோ, அதே அனைத்துலக சட்டத்தை பின்பற்றி - அதே தர்ம நியாயங்களை பின்பற்றி - நான் சொல்வதை கேட்கும் மத்திய அரசு அமைந்தால், இலங்கைக்கு இந்தியப் படையை அனுப்பி அங்கே 'தனி ஈழம்' அமைக்க நடவடிக்கை எடுப்பேன்" என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல்லில் இன்று புதன்கிழமை நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஜெயலலிதா ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட, உண்ணாவிரத நாடகம் நடத்தி; தான் உண்ணாவிரதம் இருந்ததால், உடனே இலங்கை அரசு, போர் நிறுத்தம் என்று அறிவித்துவிட்டது; எனவே தனது உண்ணாவிரதத்திற்கு வெற்றி கிடைத்துவிட்டது என்று அறிவித்துவிட்டு, வந்த வேகத்தில் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு, வீடு திரும்பிவிட்டார் கருணாநிதி. ஆனால் உண்மையில் போர் நிறுத்தம் ஏற்பட்டதா? அப்படி அறிவிக்கவே இல்லை, என்று இலங்கை அரசு மறுப்பு வெளியிட்டுள்ளது. "போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது" என்று கருணாநிதி அறிவித்துவிட்டு, வீடு போய் சேருவதற்குள்ளாகவே, "போர் நிறுத்தம் செய்வதாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை" என்று இலங்கை அரசு திட்டவட்டமாக அறிக்கை வெளியிட்டது. இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இராணுவம் மேற்கொண்டிருக்கும் தாக்குதல் இடைவிடாது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இராணுவத்தின் தொடர் தாக்குதலில் எண்ணற்ற தமிழர்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள் என்று அங்கிருந்து வருகின்ற செய்திகள் கூறுகின்றன. முள்ளிவாய்க்கால் என்ற தமிழர் கிராமத்தில், நேற்று மட்டும், இலங்கை விமானப் படை 23 முறை வானத்தில் இருந்து குண்டு வீசியதாக இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன. முள்ளிவாய்க்காலை சுற்றியுள்ள தமிழர் பகுதிகள் மீது இலங்கை இராணுவத்தின் கடற்படை, பீரங்கிகள் பொருத்தப்பட்ட படகுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தி இருக்கிறது. Multi Barrel Rocket Launcher என்ற பல ரொக்கெட்டுகளை ஒரே நேரத்தில் வீசித் தாக்கும் கருவியைக் கொண்டு இராணுவத்தின் தரைப்படை, முள்ளிவாய்க்காலின் வடக்குப் பகுதியில் இருந்து தமிழர்களைத் தாக்கி இருக்கிறது. இந்தத் தாக்குதல்கள் எல்லாம் எந்த நேரத்தில் நடைபெற்றது தெரியுமா? தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி மெரினா கடற்கரையில் நேரடி ஒளிபரப்பு வசதியோடு உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றி முடித்த அந்த நேரத்தில். கருணாநிதி காலை உணவை முடித்துவிட்டு, மதிய உணவை உட்கொள்வதற்கு முன்பாக, இடைப்பட்ட மூன்று மணி நேரம், உண்ணாவிரதம் இருந்ததற்காக, கருணாநிதியின் தொண்டர்கள், ஊர் முழுவதும் பேருந்துகளை அடித்து, நொறுக்கி, கடைகளை சூறையாடி, பொதுமக்களை அச்சுறுத்தி, அராஜக ஆட்டம் போட்ட அந்த நேரத்தில் தான், இலங்கையில் தமிழர்கள் இத்தகைய கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பகடைக் காய்கள் என்றைக்கு ஓயும் எங்கள் தமிழர் துயரம் என்று நாம் நினைக்காத நாளில்லை. வேண்டாத தெய்வமில்லை. இத்தகைய துயரமான சூழ்நிலையில், இந்தியாவில் இருக்கக்கூடிய அரசியல்வாதிகள் சிலர், தேர்தல் தோல்வி உறுதி என்று ஆகிவிட்ட நிலையில், இலங்கைத் தமிழர்களை பகடைக் காய்களாகப் பயன்படுத்தி, அரசியல் சூதாட்டத்தில் காய்கள் நகர்த்துகின்றனர். இந்தக் கயமையை நாம் அனைவரும் ஒட்டுமொத்தமாகக் கண்டிக்க வேண்டும். மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி, நாடாளுமன்றத் தேர்தலில் தனது கூட்டணி பெறப் போகின்ற அவமானகரமான தோல்வியை எண்ணி அஞ்சுகிறார். அதன் எதிரொலி தான் அண்ணா சமாதியில் உண்ணாவிரத நாடகம். தனது நாடகம் வெற்றி பெற்றுவிட்டதாக உலகுக்கு அறிவிக்க முயற்சித்து அதில் மீண்டும் தோல்வியுற்றிருக்கிறார் கருணாநிதி. உண்மை தோற்றதில்லை; பொய் ஒருபோதும் வென்றதில்லை என்பதற்கு இந்த ஒரு எடுத்துக்காட்டு போதும். "கெட்டிக்காரனின் பொய்யும், புரட்டும் எட்டு நாளில் தெரிந்துவிடும்" என்பது தமிழ்நாடே அறிந்த பழமொழி. தன்னை கெட்டிக்காரன் என்று நினைத்துக் கொண்டிருக்கும் கருணாநிதி, அரங்கேற்றிய பொய் நாடகம், புரட்டு வசனம் எட்டு மணி நேரம் கூட தாங்கவில்லை. வேடம் கலைந்தது. தமிழர்களின் வேதனை தொடர்கிறது. தமிழர் போராட்டங்கள் இலங்கைத் தமிழர்களின் துயரத்தைப் போக்க, சென்னையில் 13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தார்கள் பெண்கள். தென் ஆப்பிரிக்காவில், மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலை வரும் வரை உண்ணாவிரதம் இருக்கிறார் ஒரு தமிழர். பிரிட்டனில் உண்ணாவிரதம் இருந்தவரின் உயிர் ஊசலாடுகிறது. உலகெங்கும் தமிழர்கள் அறிவிக்கப்படாத உண்ணாவிரதங்களை தங்கள் வீடுகளில் மேற்கொண்டுள்ளனர். ஆனால், உலகத்திலேயே மிகக்குறுகிய நேரம், அதாவது 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்த ஒரே நபர் இந்தக் கருணாநிதி தான். தேவையான ஊட்டச் சத்துக்களைப் பெற்றுக்கொண்டு, ஊரை ஏமாற்ற உண்ணாவிரதம் உட்கார்ந்தார் கருணாநிதி. தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு ஆரம்பித்ததும் படுத்துக்கொண்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் எல்லாம், தங்கள் தொழில்களை ஒத்திவைத்தனர். முகத்தில் சோகம் வழிய வழிய கருணாநிதியை சுற்றி சுற்றி வந்து நாடகத்தை சுவாரஸ்யமாக்க முயற்சித்தனர். ஊட்டச்சத்துக்கான அடுத்தவேளை வந்தவுடன், உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் அலுவலகத்தில் இருந்து ஒரு தகவல் வந்ததாக நாடகத்தை அடுத்த காட்சிக்கு நகர்த்தினார்கள். இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று கருணாநிதி அறிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நாடகத்தில் தனது கதா பாத்திரத்திற்கு ஒதுக்கப்பட்ட வசனங்களை ஒப்பித்தார். நேரடி ஒளிபரப்பு முடிவடைந்தது. அடுத்த வேளை உணவுக்கு எல்லோரும் புறப்பட்டுச் சென்றார்கள். இலங்கைத் தமிழர்களின் துயரம் தீர்ந்தது. இனிமேல் இலங்கை ராணுவம் தமிழர்களை வாழ வைக்கும் பணிகளில் ஈடுபடும் என்று இலங்கை இராணுவத்தின் அறிவிக்கப்படாத செய்தியாளராக மாறினார் கருணாநிதி. வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள், Internet, SMS - இவையெல்லாம் நொடிக்கு நொடி உலகெங்கும் இருந்து செய்திகளை பரப்புகின்ற இந்த 21ஆம் நூற்றாண்டில், ஓடாத ரயில் முன் தலை வைத்துப் படுத்தவரின் அந்தக் கால நாடகம் எடுபடவில்லை. போர் நிறுத்தம் போர் நிறுத்தம் இல்லை என்று இலங்கை அரசு திட்டவட்டமாகக் கூறுகிறது. இலங்கை அதிபர் செயலகத்தில் இருந்து போர் நிறுத்தம் என்ற ஒரு அறிவிப்பு வந்ததாக பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் கூறப்படுவது தவறான செய்தி என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறி இருக்கிறது. இலங்கையில் தமிழர் பகுதிகளில் தாக்குதல் தொடர்கிறது. ப.சிதம்பரம் இயக்கத்தில் கருணாநிதி நடிப்பில் அரங்கேற்றப்பட்ட உண்ணாவிரத நாடகம் நடைபெற்ற சில மணி நேரத்திலேயே, இலங்கை இராணுவத்தின் முப்படைகளும் தமிழர்கள் மீது தாக்குதலைத் தொடர்ந்தன. இரட்டைவாய்க்கால், வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் போன்ற இடங்களில், 272 தமிழ் உயிர்கள் பலியாயின. நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமுற்றனர். இது எல்லா பத்திரிகைகளிலும் ஏப்ரல் 28 ஆம் நாள் காலையில், முதல் பக்க செய்தியாக வெளிவந்துள்ளது. உண்மை இப்படி இருக்க, கருணாநிதி, சிதம்பரம் போன்றவர்கள் தங்கள் முயற்சியால் போர் நிறுத்தமே ஏற்பட்டுவிட்டதாக நாடகம் ஆடுகிறார்களே! அதை நாம் நம்ப வேண்டும் என்றும் சொல்லுகிறார்களே! அதற்கு பொய் சாட்சி கூற தில்லியில் இருந்து தொலைபேசியில் செய்தி வந்தது என்று சொல்லுகிறார்களே! இவர்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? தமிழ்நாடு என்றால் அவ்வளவு இளக்காரமாக நினைத்துவிட்டார்களா? தமிழக மக்கள் இவர்களுக்கு, அவ்வளவு கேவலமாகப் போய்விட்டார்களா? நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, பொய்யிலும், புரட்டிலும் ஈடுபட்டிருக்கும், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியினரின் இத்தகைய மோசடி நடவடிக்கைகள், தேர்தல் களத்தில் அவர்களுக்கு எந்தப் பயனையும் தராது. ஆனால், இவர்களது இத்தகைய மனிதாபிமானமற்ற, நகைப்புக்குரிய ஏமாற்று வேலைகளால், அண்டை நாடு என்ற பொறுப்பிலும், சொந்த சகோதரர்கள் என்ற கடமையிலும், இலங்கைத் தமிழர்களுக்கு செய்திருக்க வேண்டிய அடிப்படை உதவிகளை இந்தியா செய்யவில்லை. அதற்குக் காரணம், நாடகம் ஆடுவதிலும், அரசியல் ஆதாயம் தேடுவதிலும் காட்டுகின்ற அக்கறையை, தமிழர்களின் துயரத்தைப் போக்குவதில் காட்டவில்லை என்பது தான். திமுக-காங்கிரசின் கவனம் எல்லாம், தங்கள் சுய லாபத்திற்காக, இலங்கைத் தமிழர் பிரச்சினையை பயன்படுத்துவதில் தான் இருக்கிறது. ஆட்சியில், அதிகாரத்தில், செயல்பட வேண்டிய இடத்தில் இருக்கின்றவர்கள் செய்யக்கூடிய பணிகளை நிறைவேற்றுவதில், அவர்களுக்கு சிறிதளவும் அக்கறை இல்லை. திமுக-விற்கும், காங்கிரசுக்கும், எல்லாமே அரசியல் தான். பதவி, பணம், அந்தஸ்து என்பதை நோக்கித் தான், அவர்களுடைய நாடகங்கள் எல்லாம் என்று, தமிழக மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டின் விளைவாக வரப் போவது தான், அவர்களுடைய தேர்தல் தோல்வி; மக்களின் தேர்தல் வெற்றி. இலங்கைத் தமிழர் மீது உண்மையான அக்கறை கொண்ட புதிய ஆட்சி அடுத்து மலரப் போகிறது. அதற்கான முன் அறிவிப்பு தான் இங்கே அலைகடலெனக் கூடியிருக்கும் மக்கள் கூட்டம். ஈழத் தமிழர் நலன் காக்க, மோசடி அரசியல்வாதிகளின் முகத்திரைகளைக் கிழிக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கே வாக்களியுங்கள். எனது கரத்தை வலுப்படுத்துங்கள். நாம் அமைக்கப் போகும் புதிய மத்திய அரசு, தமிழர் உரிமைகளை காப்பாற்றும் அரசாக அமைவது உறுதி, உறுதி, உறுதி. சர்வதேச சட்டம் காங்கிரஸ் தேய்ந்து கொண்டே வருகிறது என்பதற்கு அடையாளமாகத் தான் அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் பேசுகின்ற பேச்சுக்கள் எல்லாம் அமைந்து இருக்கின்றன. அந்த அளவிற்கு வரலாறு தெரியாதவர்களும், விவரம் புரியாதவர்களும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களாக இருக்கின்றார்கள். எங்களுடைய சொல்லைக் கேட்கும் புதிய மத்திய அரசு அமைந்தால், தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று அண்மையில் சொல்லி இருந்தேன். இதற்கு ஒரு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர், "இந்த அம்மாவுக்கு சர்வதேச சட்டம் (International Law) தெரியவில்லை. எப்படி இலங்கையில் தனி ஈழம் அமைக்க முடியும்? இலங்கை என்ன இந்தியாவின் மாவட்டமா? காலனியா?" என்று வினவியிருக்கிறார். இதிலிருந்து இவர் தான், விவரம் புரியாத ஒரு மனிதர் என்பது தெரிகிறது. இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக இருந்த போது, கிழக்கு பாகிஸ்தான் மீது படையெடுத்து பங்களாதேசுக்கு விடுதலை வாங்கித் தரவில்லையா! இந்திரா காந்திக்கு சர்வதேச சட்டம் புரியவில்லை என்று சொல்கிறாரா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்? 1971 ஆம் ஆண்டு இந்திய - பாகிஸ்தான் போரை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மறந்துவிட்டார் போலும்! இனவெறியை தடுப்பதற்காகத் தான் இந்தப் போரை இந்திரா காந்தி நடத்தினார் என்பதை இந்தத் தருணத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பிறகு, இந்திரா காந்தியின் மகன் ராஜிவ் காந்தி இந்திய நாட்டின் பிரதமாக இருந்த போது, இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பவில்லையா? அவருக்கும் சர்வதேச சட்டம் புரியவில்லை என்று சொல்கிறாரா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்? இந்திரா காந்தி எந்த சர்வதேச சட்டத்தை பின்பற்றி, பங்களாதேசிற்கு விடுதலை வாங்கிக் கொடுத்தாரோ, ராஜீவ் காந்தி எந்த சர்வதேச சட்டத்தை பின்பற்றி இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பினாரோ; அதே சர்வதேச சட்டத்தை பின்பற்றித் தான், அதே தர்ம நியாயங்களை பின்பற்றித் தான், நான் சொல்வதை கேட்கும் மத்திய அரசு அமைந்தால், இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி அங்கே தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று நான் சொல்கிறேன். தேசத் துரோகம் இலங்கையில் தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று நான் சொன்னது தேசத் துரோகச் செயல் என்று மற்றொரு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அண்மையில் கருத்து தெரிவித்து இருந்தார். இந்தியாவை துண்டாட நினைப்பது தான் தேசத் துரோகச் செயலே தவிர, இலங்கையில் தனி ஈழம் அமைப்பேன் என்று சொல்வது தேசத் துரோகச் செயல் அல்ல என்று நான் தெளிவுபடுத்தினேன். உச்ச நீதிமன்ற தீர்ப்பை முற்றிலுமாக புறக்கணித்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் மதிக்காமல், இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவை தாரை வார்த்தது தான் தேசத் துரோகச் செயல்! இதைச் செய்தது காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும் தான். இதிலிருந்து யார் தேசத் துரோகி என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கபடச் சதி இப்போது ஒரு முக்கியமான விடயத்தை சொல்லப் போகிறேன். கவனமாக கேளுங்கள். கருணாநிதி - ராஜபக்சவின் சதித் திட்டத்தைப் பற்றி கிடைத்த தகவலை, நான் உங்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கருணாநிதி ராஜபக்சவுடன் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து எனக்கு தகவல்கள் வந்துள்ளன. அதாவது கருணாநிதி ராஜபக்சவுடன் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். "இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு மிகவும் சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. தனி ஈழம் அமைப்பேன் என்று அவர் தெரிவித்து விட்டதால், ஜெயலலிதாவுக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது. நாளைக்கு அவர் சொல்கிறபடி கேட்கும் மத்திய அரசு அமைந்து விட்டால், இலங்கைக்கு இராணுவத்தை அனுப்புவார் ஜெயலலிதா. ஜெயலலிதா சொன்னால் செய்து விடுவார். அவர் உறுதியான முடிவை எடுக்கக் கூடியவர். பிறகு உங்களுக்குத் தான் பிரச்சினை. எனவே அப்படி நடக்காமல் இருக்க நான் சொல்வதை கேளுங்கள். தேர்தல் நடக்கும் நாளான மே மாதம் 13 ஆம் நாள் வரை உண்மையாகவே போர் நிறுத்தம் செய்யுங்கள். அப்பொழுது தான் நான் வெற்றி பெற முடியும். நான் வெற்றி பெற்று என்னுடைய தயவில் மீண்டும் மத்திய அரசு அமைந்தால், நீங்கள் இலங்கைத் தமிழர்களை உங்கள் விருப்பம் போல் எளிதாக ஒழித்துக் கட்டிவிடலாம். நீங்கள் எனக்கு உதவினால், நான் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன். "எனவே, உங்களுக்குப் பிரச்சினை வராமல் தடுக்க, மே மாதம் 13 ஆம் நாள் வரை, போர் நடத்தாமல் பொறுத்து இருங்கள். இங்கே தேர்தல் முடிந்த உடன், உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்" என்று கருணாநிதி ராஜபக்சவிடம் பேசி இருப்பதாக நம்பகமான தகவல்கள் வந்துள்ளன. தன் பதவி பறிபோகிறது என்றால் எதையும் துணிவுடன் செய்வார் கருணாநிதி. கருணாநிதியின் தன்னலம் குறித்து நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எனவே, வருகின்ற தேர்தலில் தமிழினத் துரோகி கருணாநிதிக்கு மீண்டும் எழுந்திருக்க முடியாதபடி மறுபடியும் தலைதூக்க முடியாதபடி நீங்கள் சம்மட்டி அடி கொடுக்க வேண்டும் என்று உங்களை எல்லாம் இரு கரம் கூப்பி, வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். செய்வீர்களா?... நீங்கள் செய்வீர்களா?... என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Wednesday, April 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.