Wednesday, April 29, 2009

"சிறிலங்கா அரசுடன் நடத்திய பேச்சுக்கள் தோல்வி": பிரித்தானியா, பிரான்ஸ் பெரும் ஏமாற்றம்

[புதன்கிழமை, 29 ஏப்ரல் 2009] வன்னிப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டுள்ள தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கும் போர்ப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவிப் பொருட்களை அனுப்புவதற்கான அனுமதியைப் பெறுவதற்காகவும் தாம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததுள்ளது என பிரித்தானியாவின் வெளிவிவகாரச் செயலாளரும் பிரான்சின் அமைச்சரும் அறிவித்துள்ளனர். சிறிலங்காவுக்கான ஒருநாள் பயணத்தினை மேற்கொண்டு இன்று புதன்கிழமை காலை கொழும்பை சென்றடைந்த பிரித்தானியாவின் வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மிலிபான்ட் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் போர்னாட் குஞ்சர் ஆகியோர் இன்று காலை வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவைச் சந்தித்த பின்னர் வவுனியாவுக்குச் சென்று இடம்பெயர்ந்தவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்களைப் பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து சிறப்பு உலங்குவானூர்தியில் கொழும்பு திரும்பிய அவர்கள், சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேசினார்கள். இதனையடுத்து கொழும்பில் இன்று மாலை ஊடகவியலாளர்களிடம் பேசினார்கள். "நாம் மிகவும் கடுமையாக முயற்சித்தோம்... நாம் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டோம், நாம் வற்புறுத்தினோம்... ஆனால் இதனை (போரை நிறுத்துவது) அனுமதிப்பதா இல்லையா என்பது எமது நண்பரின் கைகளில்தான் உள்ளது" என சிறிலங்கா அரசுடன் நடத்திய பேச்சுக்களின் போது ஏற்பட்ட தோல்வியை பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குஞ்சர் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய போது தெரிவித்தார். "சிறிலங்கா அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் எந்தவிதமான பலனையும் தராமல் முடிவடைந்திருக்கின்றது" எனக் குறிப்பிடும் பிரித்தானியாவின் வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மிலிபான்ட், "போர் நிறுத்தத்தை அனைத்துலக சமூகம் கோரியது பொதுமக்களைப் பாதுகாப்பதற்காகவே தவிர தமிழ்ப் புலிகளுக்கு உதவுவதற்காகவல்ல" என்பதைத் தாம் சிறிலங்கா அரசுக்கு விளக்கியதாகவும் கூறினார். "போரை நிறுத்துவதற்கான தருணம் இப்போது வந்துவிட்டது" எனத் தெரிவித்த மிலிபான்ட், "சிறிலங்கா படையினரின் முன்னேற்றம் குறிப்பிடத்தக்க ஒன்றுதான். ஆனால், சமாதானத்தை ஏற்படுத்துவதும் போரில் வெல்வதைப் போல முக்கியமானதுதான்" எனவும் சுட்டிக்காட்டினார். இதேவேளையில் இன்று பகல் வவுனியாவுக்குச் சென்ற பிரித்தானியாவின் வெளிவிவகாரச் செயலாளரும் பிரான்சின் அமைச்சரும் இடம்பெயர்ந்த மக்களுக்காக அங்கு அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குச் சென்று முகாம் நிலைமைகளை நேரில் பார்வையிட்டதுடன், முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மக்களின் அவலங்களையும் கேட்டறிந்து கொண்டனர். இதன்பின்னர் இன்று மாலை அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை பிரித்தானியாவின் வெளிவிவகாரச் செயலாளரும் பிரான்சின் அமைச்சரும் சந்தித்துப் பேசினார்கள். இதில் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோகன்ன, அரச தலைவரின் மேலதிக செயலாளர் காமினி செனரத், சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் மற்றும் பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் போன்றோரும் கலந்துகொண்டனர். அரச தலைவர் இன்று கொழும்பில் இருக்கவில்லை என்பதால் தென்பகுதியில் உள்ள எம்பிலிப்பிட்டியவுக்குச் சென்றே அவரைச் சந்தித்தார்கள். இன்று மாலை கொழும்பில் எதிர்க்கட்சித் தலைர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர்களான இரா.சம்பந்தன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரையும் சந்திததுப் பேசினார்கள். நாளை அதிகாலையில் பிரித்தானியாவின் வெளிவிவகாரச் செயலாளரும் பிரான்சின் அமைச்சரும் கொழும்பில் இருந்து புறப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.