[திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009] [ பி.பி.சி ] இலங்கையில் உடனடியாக போரை நிறுத்தக் கோரி, இன்று திங்கட்கிழமை காலை திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கிய தமிழக முதல்வர் கருணாநிதி, தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்துவதாக இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையில், தனது உண்ணாவிரத்தைத முடித்துக் கொள்வதாக அறிவித்தார். இதையடுத்து, கருணாநிதியின் சுமார் ஏழு மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது. இன்று காலை சுமார் 5.45 மணிக்கு, சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு வந்த அவர், தனது சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே, இலங்கையில் போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார். முன்னறிவிப்பு ஏதுமின்றி அவர் உண்ணாவிரதத்தில் இறங்கியது, குடும்பத்தினரையும், கட்சியினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தனது மகள் கனிமொழி, தயாநிதி மாறன் எம்.பி. உள்ளிட்டோருடன் அவர் அங்கு வந்தார். அதன் பிறகுதான், தகவல் தெரிந்து, குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும், கட்சிப் பிரதிநிதிகளும் அங்கு விரைந்து வந்தார்கள். தொண்டர்களும் பெருமளவில் கூடினார்கள். அப்போது அவர்கள் மத்தியில் உரையாறறிய கருணாநிதி, ``தமிழ்நாட்டு மக்கள் சார்பாக, ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க நான் உண்ணாவிரதம் இருக்கிறேன். நேற்று வரை, மகிழ்ச்சி தரும் வகையில் போர் நிறுத்தம் பற்றிய தகவல் வரும் என்று எதிர்பார்த்திருந்தேன். விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் அறிவித்த பிறகும், சிங்கள அரசு, போரை நிறுத்த முடியாது என்று அறிவித்துள்ளதாக பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகள் வாயிலாகவும் அறிந்தேன். ராஜபக்ஷ உயிர் பலி வாங்குவதில் என்னையும் நான் பலியாக்கிக் கொள்கிறேன். இலங்கைத் தமிழர்களுக்கா நான் என்னையே அர்ப்பணித்து உயிரைக் கொடுக்க முன்வந்துள்ளேன்’’ என்றார் கருணாநிதி. அதே நேரத்தில், அமைச்சர்கள், தொண்டர்கள் யாரும் தன்னோடு சேர்த்து உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என்றும் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார். பிரதமர் பேச்சு பிரதமர் மன்மோகன் சிங், கருணாநிதியைத் தொடர்பு கொண்டு, போர் நிறுத்தம் ஏற்பட அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவாதக் கூறியதாக தயாநிதி மாறன் தெரிவித்தார். அதே நேரத்தில், உண்ணாவிரதத்தைத் கைவிடுமாறு பிரதமர் கோரிய போதிலும், கருணாநிதி தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக தயாநிதி மாறன் தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், கருணாநிதியுடன் தொடர்பு கொண்டு உடல்நலனைக் கவனித்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்ததாக திமுகவினர் தெரிவித்துள்ளனர். கருணாநிதியின் உண்ணாவிரததை அடுத்து, சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் திமுகவினர் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும், திமுகவினர் பல இடங்களில் உண்ணாவிரததத்தில் ஈடுபட்டனர். இலங்கை அரசு அறிவிப்பு இதனிடையே, இலங்கை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாக்குதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்திருப்பதாக இலங்கை அரசு முடிவு செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனரக பீரங்கிகள், தாக்குதல் விமானங்கள், ஏவுகணைகள் உள்பட, பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிணையாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை மீட்கும் நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படைகள் ஈடுபடும் என்றும், சிவிலியன்களைக் காப்பாற்றுவதற்கு அதிகபட்ச முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் இலங்கை ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
Monday, April 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.