Wednesday, April 29, 2009

ஈழத் தமிழர்களுக்கு எதிராக இன்றைய இந்திய அரசு செயற்படுகின்றது: பா.நடேசன் குற்றச்சாட்டு

[புதன்கிழமை, 29 ஏப்ரல் 2009] தமிழ்மக்கள் மீதான சிறிலங்கா அரசின் இன அழிப்பு நடவடிக்கைக்கு தொடர்ந்து இராணுவ உதவிகளையும் இராஜதந்திர ஆதரவையும் வழங்கி, இன்றைய இந்திய அரசு ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வருவது கண்டு தாம் ஏமாற்றமும் கவலையும் அடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். 'த ஸ்ரேற்ஸ்மன்' இதழின் வெளிவிவகாரங்களுக்கான ஆசிரியர் சிம்ரன் சோதிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தற்போதைய இந்திய மத்திய அரசின் நிலைப்பாடுகளும், செயற்பாடுகளும் எமக்கு ஏமாற்றத்தையே தருகின்றன. இந்தியாவின் உண்மையான நண்பர்கள் யார் என்பதை அடையாளம் காண்பதில் - இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவின் இயற்கையான கூட்டாளிகள் யார் என்பதை அறிவதில் இன்றைய இந்திய அரசு தவறி விட்டது; அது ஈழத் தமிழர்கள் தான். அவர்கள் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர். இதனை கண்டு நாம் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம். போரை நிறுத்தி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை காணும் முயற்சிகள் எதனையும் இந்தியா மேற்கொள்ளவில்லை. கடந்த சனிக்கிழமை சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் நான்கு தடவைகள் மக்கள் செறிவாக வாழும் பாதுகாப்பு வலயத்தின் மீது குண்டுத் தாக்குதல்களை நிகழ்த்தின. பீரங்கி தாக்குதல்களும் கடுமையாகத் தொடர்கின்றன. இந்திய அதிகாரிகளின் கொழும்பு பயணத்தின் பின்னரே இவ்வாறான தாக்குதல்கள் உக்கிர நிலையை எட்டியுள்ளன. விடுதலைப் புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தவில்லை, இராணுவத்தினரே படையெடுப்பினை மேற்கொள்ளும் போது மக்களை மனித கேடயங்களாக முன்னால் நகர்த்தி முன்னேறுகின்றனர். தமிழ் மக்கள் மீது பல வழிகளிலும் மேற்கொள்ளப்படும் இன அழிப்புக்களின் உண்மைத் தன்மையை அனைத்துலக சமூகம் இப்போது மெதுவாக உணரத் தொடங்கியுள்ளது. தமது மண்ணில் சுதந்திரமாக வாழ்ந்து, தமது தாயகத்தை தாமே அளும் நியாயமான அரசியல் அவாக்கள் எமது மக்களுக்க உள்ளன. அந்த அரசியல் அவாக்களை வென்றெடுப்பதற்கு விடுதலைப் புலிகளையே அவர்கள் தமது பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டுள்ளனர். தமிழ் மக்களின் அரசியல் அவாவுக்கான போராட்டம் அவற்றை அவர்கள் அடையாதவரை முடிவுக்கு வராது. எனவே, இங்கு தமிழ் மக்கள் மனிதப்பேரவலம் ஒன்றை சந்தித்துள்ள இன்றைய வேளையில், உலக சமூகம் உடனடியாத் தலையிட்டு அவர்களைக் காக்க வேண்டும் என்றார் அவர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.