Tuesday, April 28, 2009

ஒன்றரை லட்சம் மக்கள் மீது அகோரமான பீரங்கிக் குண்டு மழை: 5,000 குண்டுகள் வீழ்ந்து வெடித்ததில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இன்று கோரக்கொலை

[செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2009] முல்லைத்தீவு மக்கள் பாதுகாப்பு வலய பகுதி நோக்கி நேற்று மாலையில் இருந்து இன்று பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் நடத்திய அகோரமான பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கோரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 1,374-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால், சாளம்பன், ஒற்றைப்பனையடி மற்றும் ஐ.பி.சி வீதி ஆகிய பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் நேற்று திங்கட்கிழமை மாலை 6:00 மணி தொடக்கம் இன்று பிற்பகல் 1:00 மணிவரை ஆட்லெறி, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் கனரக துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை அகோரமாக நடத்தினர். 2,600 வரையான குறுந்தூர பல்குழல் பீரங்கி குண்டுகள் 1,000 வரையான ஆட்லெறி நெடுந்தூர பீரங்கி குண்டுகள் 2,500 வரையான இடைத்ததூர மோட்டார் பீரங்கி குண்டுகள் ஆகியன நேற்று மாலை 6:00 மணியில் இருந்து இன்று பிற்பகல் 1:00 மணிவரை சிறிலங்கா படையினரால் மக்கள் வாழ்விடங்களை நோக்கி வீசப்பட்டன. அத்துடன், சிறிலங்கா வான்படையும் இன்று பிற்பகல் 1:00 மணியளவில் கிளஸ்டர் ரக குண்டுத்தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதல்களில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 1,374-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். முள்ளிவாய்க்காலில் இயங்கிவரும் முல்லைத்தீவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்கள் சிலரும் படுகொலை ஆனவர்களுக்குள் அடங்குவர். மருத்துவமனை சூழலை நோக்கி சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களிலும் 18 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். முள்ளிவாய்க்காலில் இயங்கிவரும் முல்லைத்தீவு மருத்துவமனையில் 428 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். நட்டாங்கண்டல் மருத்துவமனையில் 618 பேர் சிகிச்சை பெற்றுச் சென்றனர். திலீபன் மருத்துவமனையில் 328 பேர் சிகிச்சை பெற்றுச் சென்றனர். மக்கள் வாழ்ந்த குடியிருப்பு பகுதிகள் அனைத்தும் பிணக்காடாக காட்சியளிப்பதாகவும் அப்பகுதி முழுவதும் ஒரே சாவு ஓலமும் அவலக்குரலும் கேட்பதாகவும் புதினத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.