Monday, April 27, 2009

முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதப் போராட்டம் உச்சகட்ட நாடகம் என்று மதிமுக ‌பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

[திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009] முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதப் போராட்டம் உச்சகட்ட நாடகம் என்று மதிமுக ‌பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். ஊட்டி அருகே கூடலூரில் ‌செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில் கருணாநிதி இதுவரை நடத்திய நாடகங்களில் இந்த உண்ணாவிரதம் தான் உச்சகட்ட நாடகம் என்றார். அவர் மேலும் கூறுயைில், கருணாநிதி அவரது குடும்பத்துக்காக காங்கிரசு‌டன் சேர்ந்து தமிழினத்திற்கு துரோகம் இழைத்து விட்டார். போரை நிறுத்த வேண்டும் என சிறிலங்கா அரசுக்கு மத்திய அரசு ஏதாவது உத்தரவு அனுப்பியதற்கான ஆதாரம் ஒன்றை காட்டினாலும், நான் தீவிர அரசியலில் இருந்து விலகி விடுகிறேன். கடந்த இருண்டு நாட்களாக சிறிலங்கா இராணுவம் ரசாயண குண்டுகளை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது. கடந்த 5 ஆண்டு காலமாக சிறிலங்காவிற்கு இந்தியா இராணுவ உதவி அளித்து வருகிறது. அதைத் தடுக்க கருணாநிதி என்ன செய்தார். இப்போது ஏன் இந்த திடீர் உண்ணாவிரதம்?. இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழக மக்களை உலுக்கிப் போட்டுள்ளது. இதன் காரணமாக திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழகத்தில் மிகப் பெரிய அடி விழும், படு தோல்வியைச் சந்திப்பார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், திமுக அரசும் இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்து விட்டனர், காக்கத் தவறி விட்டனர் என்ற உணர்வு தமிழக மக்கள் மனதில் விஸ்வரூபம் எடுத்து வியாபித்துள்ளது. இது தேர்தலில் எதிரொலிக்கும். கடந்த ஆறு மாதங்களாக இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாவும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் பெருத்த அமைதி காத்து வருகின்றனர். இந்தப் பிரச்சினை தொடர்பாக 14 பேர் இதுவரை உயிர் நீத்தும் கூட அவர்களது மவுனம் கலையவில்லை. சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரத்திற்கு எதிராக பிரசாரம் செய்த 50 மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இது கண்டனத்துக்குரியது என்றார் வைகோ. இதேவேளை, இன்று காலை சிறிலங்கா அரசு போரை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக முதல்வர் கருணாநிதி இன்று காலை ஆறு மணி முதல் சென்னை அண்ணா நினைவிடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். கலைஞரின் உண்ணாவிரத்தை அறிந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், உலக தமிழர்கள் பலர் உடல் நலத்தை கருத்தில்கொண்டு உண்ணாவிரத்தை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். அத்துடன் மருத்தவர்கள் வந்து அவரது உடல்நிலையைப் பரிசோதித்து தமது கவலையை வெளியிட்டனர். இந்நிலையில் 9 மணிக்கு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு பேசிய கலைஞர், இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு விட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உறுதியான தகவலை கொடுத்துள்ளதால் இத்துடன் உண்ணாவிரத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார். தமிழக முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ள போதும் சிறீலங்கா அரசு போர் நிறுத்தம் எதனையும் இதுவரை அறிவிக்கவில்லை என்பதுடன் கனரக ஆயுதங்களைப் பாவிக்காமல் தாக்குதலை நடத்தி வருவதாக அறிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.