[சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2009] தென்னாபிரிக்காவின் டேர்பன் நகரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன் இரண்டாவது நாளாகவும் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றார். சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக நிரந்தரமான போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் - அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்களின் மேற்பார்வையுடன் உடனடியாக பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படவேண்டும் - சிறிலங்கா அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் தடுப்பு முகாம்களுக்கு அனைத்து அமைப்புக்குளும் அனுமதிக்கப்பட வேண்டும் - ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே அவர் இந்த உண்ணாநிலைப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றார். டேர்பன் நகரில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் நடைபெறும் தனது உண்ணாநிலைப் போராட்டம் தொடர்பாக அவர் தெரிவிக்கையில்: என்னுடைய கோரிக்கைகளை அனைத்துலக சமூகம் பரிசீலிக்கும் வரைக்கும் இந்தப் போராட்டத்தைத் தொடர்வேன். எமது மக்கள் அனுபவிக்கும் சொல்லெணாத் துன்பங்களுடன் ஒப்பிடுகையில் நான் தற்போது அனுபவிக்கும் வேதனை ஒன்றும் மிகையானதல்ல. அத்துடன் இத்தகைய போராட்டத்தில் உலகத் தமிழர்களும் ஒன்று திரண்டு செயற்பட வேண்டும். ஈழத்தில் தமிழ் மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். உணவுக்காக மட்டுமல்லாமல், சுயகௌரவம், சமாதானம் மற்றும் விடுதலைக்காக அவர்கள் ஏங்கிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் வறுமையின் காரணமாக ஏங்கவில்லை. மாறாக, அவர்களுடைய தாயக பூமி மற்றும் அவர்களுடைய சுதந்திரம் மீண்டும் மீண்டும் கொள்ளையடிக்கப்படுவதால் அவர்கள் ஏங்கிக்கொண்டிருக்கின்றனர். சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களின் அபிலாசைகளைத் தீர்ப்பதற்கு அரசியல் வழிமுறைகைளைத் தேர்ந்தெடுக்காமல் இராணுவ வழிமுறைகளில் நாட்டம் கொண்டிருப்பதானது எம்மைப் போன்றவர்களையும் தற்போது மாற்று வழிகளில் ஈடுபட நிர்ப்பந்தித்துள்ளது. ஆகவேதான் நான் தற்போது உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். என்னுடைய கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவதற்கு ஏற்றவகையில், தென்னாபிரிக்க அரசியல் தலைவர்களான நெல்சன் மண்டேலா, ஜக்கப் சூமா மற்றும் மதகுருத் தலைவர் டெஸ்மன் டுற்று ஆகியோர் செயற்படவேண்டும் என்றார் அவர்.
Saturday, April 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.