[ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2009]
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது சிறிலங்கா படையினர் இன்று அதிகாலை நடத்திய அகோர எறிகணை, துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 294 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 432 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் பச்சைப்புல்மோட்டை பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3:15 மணி தொடக்கம் பகல் முழுவதும் சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, ஆர்பிஜி உந்துகணை மற்றும் தொலைதூர துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை அகோரமாக நடத்தினர்.
இப்பகுதியில் 45 நிமிட நேரத்தில் 300 எறிகணைகள் சிறிலங்கா படையினரால் ஏவப்பட்டன.
இவை அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய மக்கள் வாழ்விடங்கள் மீது வீழ்ந்து வெடித்துள்ளன.
வட்டுவாய்க்கால், மந்துவில் ஆகிய பகுதிகளில் இருந்தும் மக்கள் வாழ்விடங்களான முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால் பகுதிகள் நோக்கியும் சிறிலங்கா படையினர் தாக்குதல் நடத்தினர்.
இன்று பிற்பகல் 4:00 மணிவரை நடைபெற்ற மேற்படி தாக்குதல்களில் 294 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 432 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இத்தாக்குதல்களில் காயமடைந்தவர்களுக்கு அப்பகுதிகளில் உள்ள சகல மருத்துவ நிலையங்கள் உட்பட திலீபன் மருத்துவ சேவைப் பிரிவினராலும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதேவேளையில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையினால் பதுங்குகுழிகளுக்குள் நீர் நிரம்பியுள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்புத் தேட முடியாத அவல நிலையும் ஏற்பட்டுள்ளதாக வன்னியில் இருந்து 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
மாத்தளன் வீதிக்கு மேற்காக நிலைகொண்டுள்ள சிறிலங்கா படையினர் மாத்தளன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுவரப்படும் மக்களை நோக்கியும் துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதில் 6 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் படுகாயமடைந்துள்ளனர்.
அதேவேளையில் பாதுகாப்பு வலயத்தின் சகல பகுதிகளிலும் சிறிலங்கா படையினர் தொடர்ந்து எறிகணை, பீரங்கி, ஆர்பிஜி உந்துகணை மற்றும் சிறிலங்கா வான்படையினரின் எம்ஐ-24 ரக உலங்குவானூர்திகளின் பீரங்கித் தாக்குதல்களையும் நடத்தினர்.
இதனால், கடும் மழைக்கும் மத்தியில் மக்கள் பாதுகாப்புத் தேடி ஓடி அவலப்பட்டனர்.
இது இவ்வாறிருக்க தற்போதைய நிலை தொடர்பாக முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் து.வரதராஜா புதினத்துக்கு தகவல் தருகையில்:
சிறிலங்கா படையினரின் தாக்குதல்களில் படுகாயமடைந்த 700-க்கும் அதிகமான மக்களை மேலதிக சிகிச்சைக்காக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் கொண்டு செல்ல வேண்டிய நிலையில் உள்ளது.
கடும் மழையினால் நேற்று முன்நாள் கப்பலில் நோயாளர்களை ஏற்ற முடியாத நிலையில் கப்பல் திரும்பிச் சென்றுவிட்டது. நேற்றும் கப்பல் வரவில்லை. இந்நிலையில் தாக்குதல்களில் படுகாயமடைந்த மக்கள் மருத்துவமனையில் காத்திருக்கின்றனர்.
மாத்தளன் மருத்துவமனை பகுதியில் பெய்து கொண்டிருக்கும் மழை காரணமாக நெருக்கடி நிலமை ஏற்பட்டுள்ளது. விடுதி வசதிகள் இல்லாமையினால் நோயாளர்கள் மழையில் நனையும் இடர் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர் து.வரதராஜா மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளையில் தொடர்ச்சியான மழை காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் தொற்றுநோய்கள் கூடுதலாகப் பரவுவதற்கான சூழல் உள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி புதினத்திடம் கூறினார்.
இடம்பெயர்ந்த மக்கள் கூரை விரிப்புக்களின் கீழ் வாழ்ந்து வருவதனால் காற்றுடன் கூடிய மழை மக்களை பாதித்துள்ளது.
மாத்தளன் மருத்துவமனையும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளது.
'மக்கள் பாதுகாப்பு வலயம்' என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து நாள்தோறும் எறிகணை, துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களினால் நாள்தோறும் படுகாயமடையும் மக்களின் தொகை அதிகரித்து வருகின்றது என த.சத்தியமூர்த்தி விளக்கமளித்துள்ளார்.
Monday, April 13, 2009
'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது இன்றும் அகோர தாக்குதல்: 294 தமிழர்கள் பலி; 432 பேர் படுகாயம்
Monday, April 13, 2009
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.