Friday, April 24, 2009

செஞ்சிலுவைச் சங்க கப்பலைத் தடுத்த கடற்படை: 10 நோயாளர்கள் கரையில் உயிரிழப்பு

[வியாழக்கிழமை, 23 ஏப்ரல் 2009] முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து கடும் நோயாளர்களை ஏற்றிச் செல்வதற்காக இன்று வந்த அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பலை சிறிலங்கா கடற்படைப் படகுகள் சுற்றிவளைத்து கரைக்குச் செல்லவிடாது தடுத்ததால் நோயாளர்களை ஏற்றும் பணி மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டதுடன், இந்த இழுபறியில் நோயாளர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று வியாழக்கிழமை காலை 6:00 மணிக்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக்குழுவின் 'கிறீன் ஓசின்' கப்பல் முள்ளிவாய்க்கால் நோக்கி நோயாளரை ஏற்றிச் செல்வதற்காக வந்தபோதே கடற்படையினரின் தலையீட்டையடுத்து பிரச்சினைகள் தொடங்கியதாக புதினத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவித்தார். சிறிலங்கா கடற்படையின் டோறா மற்றும் கூகர் படகுகள் செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பலை நோக்கியும், நோயாளர்களை ஏற்றிவருவதற்குத் தயாராகவிருந்த மீன்பிடிப்படகுகளை நோக்கியும் பீரங்கித்தாக்குதலை நடத்தியுள்ளன. இந்த திடீர்த்தாக்குதலால் செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் கப்பல் அச்சத்தால் ஆழ்கடலுக்கு சென்றது. அப்போது செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் கப்பலை நெருங்கிய சிறிலங்கா கடற்படையினர் தாம் தாக்குதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாகவும், கப்பலை கரைக்குக் கொண்டுசெல்ல வேண்டாம் என்றும் எச்சரித்தனர். மீறிப்போனால் கப்பலுடன் தாமும் வருவோம் என்று கடற்படையினர் தெரிவித்தனர். இதனையடுத்து நிலைமைகளை சுமூகமாக்கும் நோக்கத்துடன் செஞ்சிலுவைச் சங்கக் குழுவினர் உயர்மட்டத்தினருடன் கதைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத அதேவேளையில், கப்பலில் பயணிப்பதற்காக நூற்றுக்கணக்கான நோயாளர்கள் கரையில் காத்து நின்றனர். இவர்களில் சிலர் செஞ்சிலுவைச் சங்க கப்பலில் ஏற்றப்படுவதற்காக மீன்பிடிப் படகுகளிலும் ஏற்றப்பட்டிருந்தனர். இந்நிலையில் முறுகல் நிலை தொடர்ந்து கொண்டிருந்தமையால் பிற்பகல் 3:00 மணிக்கு கடற்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் அண்ணாத்துரை நோயாளரை ஏற்றிச் செல்வதற்காக வந்த கப்பலை கரைக்கு ஒரு கிலோமீற்றர் தொலைவுக்கு வரும்படியும் கடற்படைக்கு அதில் இருந்து 3 கிலோமீற்றருக்கு தள்ளி நிற்கவேண்டும் எனவும் தகவல் தெரிவித்தார். அதன்பின் செஞ்சிலுவைக் சங்க கப்பல் கரைக்கு வந்து 526 நோயாளர்களை ஏற்றியவாறு மாலை 6:00 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டது. இதேவேளையில் காலையிலேயே நோயாளர்கள் கப்பலில் கொண்டு செல்வதற்காக கரைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தனர். மீன்பிடிப் படகுகளிலும் சிலர் ஏற்றப்பட்டனர். தொடர்ந்து கரையோர வெயிலில் கிடத்தப்பட்டிருந்த அவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இப்போது ஆபத்து நிலையில் 1,200 பேர் மருத்துவமனையில் உள்ளதாக புதினத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.