Wednesday, March 11, 2009

கடந்த 10 நாட்களில் 1,000-க்கும் அதிகமான தமிழர்கள் படுகாயம்; சிகிச்சையளிக்க மருந்து இல்லை: மருத்துவர் த.சத்தியமூர்த்தி

[புதன்கிழமை, 11 மார்ச் 2009] எறிகணைத் தாக்குதல்களால் கடந்த பத்து நாட்களில் ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் பொதுமக்கள் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள அதேநேரம் அவர்களுக்கு சிகிச்சையளிக்க மருந்துப்பொருட்களும் இல்லாத அவலநிலை நிலவுவதாக கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளரும் மருத்துவருமான த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். சிறிலங்கா படையினரின் கண்மூடித்தனமான தாக்குதல்களில் படுகாயமடையும் அப்பாவி பொதுமக்களுக்கு மாத்தளன் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவரான இவர், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பாகிய 'செய்தி அலைகள்' நிகழ்ச்சிக்கு நேர்காணல் வழங்கியுள்ளார். அந்த நேர்காணலில் கூறப்பட்ட முக்கியமான விடயங்கள் வருமாறு: தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் மக்களுக்கு எங்களிடமுள்ள வசதிகளை வைத்தே சிகிச்சை அளித்து வருகிறோம். எனினும் படுகாயமடைவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் எங்களால் இந்த சிகிச்சையை தொடர்ந்தும் வழங்க முடியாத நிலையே காணப்படுகிறது. காயமடையும் மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான அளவு மருந்துப் பொருட்கள் எங்களிடம் இல்லை. குறிப்பாக சத்திர சிகிச்சை மேற்கொள்ளத் தேவையான மயக்க மருந்துகள் எங்களிடம் கையிருப்பில் இல்லை. இது தொடர்பாக நாங்கள் பல தடவைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எடுத்துக்கூறியும் இதுவரை அந்த மருந்துப் பொருட்கள் எங்களுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதியில் வீழ்ந்து வெடிக்கும் எறிகணைகளாலேயே மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக அதிகளவான எறிகணைகள் வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் வீழ்ந்து வெடித்திருக்கின்றன. பொக்கணை மற்றும் புதுமாத்தளன் பகுதிகளிலும் எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததால் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். கடந்த ஒருமாத காலமாக எறிகணைகளில் காயமடைந்தவர்கள் இந்த மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றனர். குறிப்பாக கடுமையான காயமடைந்தவர்கள் அல்லது உயிர் போகும் தருணத்தில் இருப்பவர்களை அவர்களுடைய உறவினர்கள் இந்த மருத்துவமனைக்கு கொண்டு வருகின்றனர். அவ்வாறு கொண்டு வரப்படும் போது சிலர் வழியிலேயே இறந்து விடுகின்றனர். சிலர் சிகிச்சை பலனின்றி இறந்து விடுகின்றனர். மக்கள் இங்கு நெரிசலாக இருக்கின்ற காரணத்தால் எறிகணைத் தாக்குதல்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் இறக்கின்ற சூழல் காணப்படுகின்றது. அத்தகைய சந்தர்ப்பங்களில் அங்கிருங்கும் அயலவர்கள் அல்லது எஞ்சியிருப்போர் அந்தந்த இடங்களிலேயே அவர்களது உடலங்களை புதைத்து விடுகின்றனர். எனவே மருத்துவமனைக்கு குறைந்தளவிலான இறந்த உடலங்களே வந்து சேர்கின்றன. அதிகளவிலான மக்கள் படுகாயமடைந்த நிலையில் கொண்டு வரப்படுவதனால் அவர்களுக்கு இரத்தப் போக்கை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையே நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். சிலருக்கான சத்திர சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தொடர்ச்சியாக 24 மணிநேரமும் சத்திர சிகிச்சையை மேற்கொண்டாலும் காயமடையும் மக்கள் அனைவருக்கும் எங்களால் சத்திர சிகிச்சை மேற்கொள்ள முடியாது. மிகக்கடுமையாக காயமடைந்து இரத்தப் போக்கு ஏற்பட்டவர்களுக்கு எங்களால் சிகிச்சை அளிக்க முடியாத நிலை காணப்படுகிறது. நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்பொதே அவர்கள் இறக்கும் ஒரு அவல நிலை காணப்படுகின்றது. சிகிச்சை பலனின்றி பலர் இறக்கும் நிலையே இங்குள்ளது. இது துரதிர்ஸ்டவசமானது. தற்போது காயமடைந்த நிலையில் 500-க்கும் அதிகமானவர்கள் இங்குள்ளனர். அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் கப்பல் வந்தால் இவர்களை நாங்கள் மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைப்போம். இல்லையேல் கடுமையான காயமடைந்தவர்களில் ஒரு சிலர் இறக்கக்கூடும். இந்த சூழ்நிலையை சமாளிப்பதற்கு நாங்கள் கேட்கும் உதவிகளை அரசாங்கம் உடனடியாக எங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும். இல்லையேல் மேற்கூறிய நிலை ஏற்படுவதை தடுக்க முடியாது. அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் இருதரப்புகளுடன் கலந்துரையாடி காயமடைந்த மக்களை ஏற்றிச் செல்லும் என்று நினைக்கிறேன். அதில் எதுவித சிக்கலும் இருக்கப் போவதில்லை. காலநிலை சீரின்மை காரணமாகவே அந்த கப்பல் சேவை இறுதியாக தடைப்பட்டிருந்தது. கடந்த முதலாம் நாள் முதல் 10 நாட்களுக்குள் 1,000-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். இவ்வளவு எண்ணிக்கையான மக்கள் காயமடைந்த நிலையில் கொண்டு வரப்படுவார்கள் என்பதை நாங்கள் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. எனினும் நாங்கள் எமது சேவையை வழங்குகின்றோம். எங்களால் முடிந்தவரை எங்களிடமுள்ள வளங்களைப் பயன்படுத்தி நாங்கள் இவர்களுக்கு மருத்துவ சேவையை வழங்கி வருகின்றோம். இங்கு கடுமையாக மழை பெய்து கொண்டிருப்பதால் மருத்துவமனையின் தற்காலிகக் கட்டடங்களில் நீர் புகுந்துள்ளது. காயமடைந்த மக்கள் இதனால் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அதனைவிட இடம்பெயர்ந்துள்ள மக்களும் மழை வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான எறிகணைத் தாக்குதல்களுக்கும் மழை வெள்ளத்திற்கும் இடையிலான ஒரு சூழ்நிலையிலேயே நாங்கள் பணியாற்றுகின்றோம். மருத்துவமனைக்கு அருகாமையிலும் எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கின்றன. மருந்து தட்டுப்பாடு நிலவுகின்றது. பதற்றமான ஒரு நிலை. பல நூற்றுக்கணக்கில் காயமடைந்தவர்கள் இருப்பதால் சரியான சிகிச்சையை வழங்க முடியாதுள்ளது. கடந்த முதலாம் நாள் முதல் 7 ஆம் நாள் வரையிலான காலப்பகுதியில் காயமடைந்த 700-க்கும் அதிகமானோரில் 137 சிறுவர்களும் அடங்குகின்றனர். அவர்களில் 32 சிறுவர்கள் இறந்துள்ளனர். கடந்த பத்து நாட்களில் மட்டும் 50-க்கும் அதிகமான சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 200-க்கும் அதிகமான சிறுவர்கள் காயமடைந்துள்ளனர். இதைவிட மழை வெள்ளம், வயிற்றோட்டம், போசாக்கின்மை போன்றவற்றாலும் சிறுவர்கள் இறந்து கொண்டிருக்கின்றனர். இப்படி பல நூற்றுக்கணக்கான சிறுவர்கள் மடியக்கக்கூடிய அவல நிலையை நாங்கள் அடைந்திருக்கின்றோம். 24 மணிநேரமும் மருத்துவமனையில் இறந்த உடலங்கள் இருந்த வண்ணமே இருக்கின்றன. உறவினர்கள் 24 மணிநேரமும் அங்கிருந்து அழுது குழறியபடியே உள்ளனர். 24 மணிநேரமும் அது மரண வீடாகவே காட்சி தருகிறது. மருத்துவமனையின் பிற பகுதிகளிலும் உறவினர்களின் ஒப்பாரியே கேட்கிறது. இத்தகைய சூழ்நிலையில் மருத்துவமனை பணியாளர்கள் கல் நெஞ்சம் படைத்தவர்களாகவே கடமையாற்ற வேண்டியுள்ளது. இரண்டு மாதத்திற்கு முன்னரே எங்களிடமிருந்த மருந்து கையிருப்புகள் முடிந்துவிட்டன. அதன் பின்னர் எங்களிடம் கையில் கிடைப்பதை வைத்தே சிகிச்சையளித்து வருகிறோம். சம்பந்தப்பட்ட அமைச்சு மற்றும் உயரதிகாரிகளுக்கு இது குறித்த தெளிவாக கூறியிருக்கிறோம். இது மருத்துவமனை என்று கூறப்படினும் இங்கு மருத்துவமனைக்குரிய எந்த கட்டமைப்பும் இல்லை என்றார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.