Sunday, February 15, 2009

இந்திய, பிரித்தானிய நாடுகளின் போக்கில் மாற்றம் வர புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களே காரணம்: கொழும்பு ஊடகம்

[ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2009] சிறிலங்காவின் எதிர்ப்பையும் மீறி அண்மையில் சிறப்பு பிரதிநிதியை பிரித்தானியா நியமித்ததற்கும் இந்திய அரச தலைவரின் உரையில் காணப்பட்ட மாற்றத்திற்கும் உலகு எங்கும் வாழும் தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டங்களே காரணம் என கொழும்பு ஆங்கில வார ஏடு ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: இலங்கையில் இடம்பெற்று வரும் உள்நாட்டுப் போரினை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான அரசியல் வழிமுறைகளை ஆராய்வதற்கும், அங்கு போரினால் துன்பப்படும் மக்களின் மனிதாபிமான தேவைகளை கண்டறிவதற்கும் என பிரித்தானியா சிறப்புத் தூதுவர் ஒருவரை கடந்த வாரம் நியமித்தது. இதற்கு சிறிலங்கா அரசு அதிகப்படியான எதிர்ப்புக்களை காட்டி வருகின்ற போதும் பிரித்தானியா தனது போக்கில் இருந்து பின்வாங்குவதாக இல்லை. பிரித்தானியா சிறிலங்காவுக்கு சிறப்புத் தூதுவரை விரைவில் அனுப்பவும் திட்டமிட்டுள்ளது. அதனையும் சிறிலங்கா அரசு எதிர்த்து வருகின்றது. பிரித்தானியாவின் இந்த மாற்றத்திற்கு பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்கள் அந்த அரசுக்கு கொடுத்து வரும் அழுத்தமே காரணம் என கொழும்பு அரசு நம்புகின்றது. அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு ஆதரவாக பிரித்தானியாவின் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கெய்த் வாஸ் செயற்பட்டு வருகின்றார். இவருக்கு பிரித்தானியாவில் வாழும் ஆசிய மக்களில் 16 ஆயிரம் பேரின் வாக்கு பலம் உள்ளது. இலங்கையில் இடம்பெற்று வரும் போரை நிறுத்தக் கோரி அண்மையில் பிரித்தானியாவில் மிகப்பெரும் பேரணி ஒன்றும் இடம்பெற்றிருந்தது. பிரித்தானியாவின் பிரதமர் கோடன் பிறவுண், இந்திய அரச தலைவர் பிரதீபா பட்டேல் ஆகியோர் இலங்கை தொடர்பான விவகாரங்களை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளனர். போர் நிறுத்தப்பட வேண்டும் எனவும் விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசும் பேச்சுக்களில் ஈடுபட வேண்டும் எனவும் தெரிவித்த இந்திய அரச தலைவர், விடுதலைப் புலிகள் விரும்பினால் ஆயுதங்களை கைவிடலாம் என தெரிவித்தது இந்தியாவின் போக்கில் ஏற்பட்ட மாற்றமாகவே சிறிலங்கா அரசு பார்க்கின்றது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.