Thursday, February 12, 2009

இலங்கை விவகாரம்: முன்னாள் பாதுகாப்பு செயலாளர் பிரித்தானியாவால் நியமிப்பு

[வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2009] இலங்கையின் தற்போதைய நிலைமைகளை ஆராய்வதுடன், அங்கு நிலவும் மனித அவலங்கள் குறித்து கவனம் செலுத்துமாறு பிரித்தானியாவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளரான டெஸ் பிறவுணை பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுண் பணித்துள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்ற அலுவல்களுக்கான செயற்பாட்டுக் குழுவிடம் பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுண் தெரிவித்துள்ளதாவது: இலங்கைக்கான சிறப்பு பிரதிநிதியாக செயற்படுமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளரான டெஸ் பிறவுனை நான் கேட்டுள்ளேன். இலங்கை விவகாரங்களில் கவனம் செலுத்தி, அங்கு ஒரு அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு ஏதுவான சூழல் குறித்து ஆராயுமாறும், அங்கு தற்போது மோசமடைந்து செல்லும் மனித அவலம் குறித்து கவனிக்குமாறும் அவரைக் கேட்டுக் கொண்டுள்ளேன். நான் அழுத்திச் சொல்ல விரும்பும் முக்கிய விடயம் என்னவெனில், போரில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் போர் நிறுத்தத்தினை நடைமுறைப்படுத்தி, அரசியல் தீர்வை முயற்சிக்காத வரையில், படிப்படியாக மீண்டும் அங்கு முன்னர் நிலவிய நிலைமைக்கே நாடு செல்லும் என்பதே. டேஸ் பிறவுண், சிறிலங்காவில் உள்ள அரச தரப்பு பிரதிநிதிகள், வெளிநாட்டு அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட, வெளிநாட்டு பிரதிநிதிகளுடனும், அங்கு வாழும் அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைகளுடனும் பேச்சுக்களை நடத்தி, சுமூகமான சூழலுக்கான வாய்ப்புக்களை ஆராய்வார் என்றார் அவர். முன்னாள் பாதுகாப்பு செயலாளரான டெஸ் பிறவுண், கடந்த வருடம் ஒக்ரோபரில் பிரித்தானியா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பதவி மாற்றங்களின்போது அந்நாட்டின் பாதுகாப்பு செயலாளர் பதவியை இழந்தவர். ஸ்கொட்லான்ட் பகுதியைப் பிரதிநிதித்துவப் படுத்தும் இவர், அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமா பதவியேற்றபோது, அந்நிகழ்வில் கலந்துகொள்வதற்கு பிரத்தியேகமாக இங்கிலாந்தில் இருந்து அழைக்கப்பட்ட ஒரு சில முக்கிய நபர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.