Thursday, February 12, 2009

இலங்கையில் தமிழர்களின் நிலைமை கவலையளிக்கின்றது: நாடாளுமன்றத்தில் இந்திய அரச தலைவர்

[வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2009] இலங்கைக்குள் இடம்பெயர்ந்து அகதிகளாக வாழும் தமிழ் மக்களின் நிலைமை கவலை தருகின்றது என்று இந்திய அரச தலைவர் பிரதீபா பட்டீல் தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை அவர் உரையாற்றிய போது மேலும் கூறியுள்ளதாவது: இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் போரில் சிக்கி பெரும் துயரில் இருக்கும் நிலை இந்தியாவுக்கு கவலை தருகின்றது. இலங்கையின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, அனைத்து சமூகத்தினருக்கும் ஏற்ற அரசியல் தீர்வு காணப்படுவதை இந்தியா வரவேற்கின்றது. சிறிலங்கா அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் உடனடியாக சண்டையை விட்டு விட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும். இரு தரப்பும் தங்களது தாக்குதலை ஒரே சமயத்தில் நிறுத்தி விட்டால், பேச்சுவார்த்தை சாத்தியமாகும். சிறிலங்கா அரசாங்கம் தனது இராணுவ நடவடிக்கையை நிறுத்துவதாக அறிவிக்க வேண்டும். அதேசமயம், விடுதலைப் புலிகள் தங்களது ஆயுதங்களை கைவிட்டு விட்டு சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். இலங்கைக்குள் இடம்பெயர்ந்து அகதிகளாக வாழும் தமிழ் மக்களின் நிலைமை கவலை தருகின்றது. இராணுவ நடவடிக்கையாலும், சண்டையாலும் அவர்கள் பெரும் துயரில் மூழ்கியுள்ளனர் என்றார் அவர். இதற்கிடையே, இந்திய அரச தலைவர் உரையாற்றிக் கொண்டிருந்த போது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்களான பொள்ளாச்சி கிருஷ்ணனும், சிப்பிப்பாறை ரவிச்சந்திரனும் எழுந்து குரல் எழுப்பியதால் சபையில் சில விநாடிகள் அமளி ஏற்பட்டது. இருப்பினும் அவர்கள் அமைதியாக அவை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.