[புதன்கிழமை, 18 பெப்ரவரி 2009] "மக்கள்" தொலைக்காட்சிக்கு இலங்கையில் இராணுவத்தினர் விதித்துள்ள தடை, உலகளவில் கருத்து சுதந்திரத்திற்கும், ஊடக சுதந்திரத்திற்கும் மிகப்பெரிய கரும்புள்ளி என ""மக்கள்"" தொலைக்காட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக "மக்கள்" தொலைக்காட்சியின் முதன்மைச் செயலாளர் அ.சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "மக்கள்" தொலைக்காட்சி தொடங்கப்பட்டதிலிருந்து எல்லா விதத்திலும் நடுநிலையாக செயல்பட்டு வருவதை, பலவிதமான ஆய்வுகளும், அமைப்புக்களும் பாராட்டியுள்ளன. ஊடக நெறியை மீறாமல் உலகத் தமிழர்களின் குரலாக இன்று வரை ஒலித்துக்கொண்டிருக்கின்றோம். இந்நிலையில், இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலை தொடர்பான உண்மை நிலையை மட்டும் விருப்பு வெறுப்பின்றி தொடர்ந்து எடுத்துரைப்பதால், சிறிலங்கா இராணுவம் "மக்கள்" தொலைக்காட்சியை அந்நாட்டில் ஒளிபரப்ப முழுவதுமாக தடை விதித்துள்ளது. "மக்கள்" தொலைக்காட்சிக்கு இலங்கையில் இராணுவத்தினர் விதித்துள்ள தடை, உலகளவில் கருத்து சுதந்திரத்திற்கும், ஊடக சுதந்திரத்திற்கும் மிகப்பெரிய கரும்புள்ளி. ஊடக சுதந்திரத்தின் குரல் வளையை நெரித்துவரும் சிறிலங்கா அரசின் சர்வாதிகார நடவடிக்கையையே இந்த செயல் காட்டுகிறது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை செய்தியாக வெளியிட்ட பத்திரிகையாளர்கள் சிலர் படுகொலை செய்யப்பட்டனர். இனப்படுகொலை செய்திகளை வெளியிட்டதற்காக பி.பி.சி. உள்ளிட்ட பல வெளிநாட்டு ஊடகங்களுக்கும் இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசு ஜனநாயக பாதையைவிட்டு தடம்மாறி சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு ஊடகங்கள் மீதான தாக்குதல்களும் அதனைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் "மக்கள்" தொலைக்காட்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையும் ஒரு சான்றாகும். இலங்கையில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் "மக்கள்" தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பக்கூடாது என அங்குள்ள கம்பிவட இயக்குநர்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசின் இந்த அடக்குமுறைக்கு எதிராக அரசியல் தலைவர்களும், சக ஊடகவியலாளர்களும், பொதுமக்களும் தங்கள் கண்டனக் கணைகளை பதிவு செய்ய வேண்டும். தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் "மக்கள்" தொலைக்காட்சிக்கும், ஊடக நெறியைக் காப்பாற்றப்படுவதற்கும் துணை நிற்குமாறு அன்புடன் வேண்டுகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wednesday, February 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.