Tuesday, October 28, 2008

கொழும்பிலும் மன்னாரிலும் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுத்தாக்குதல்

[செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2008] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியில் உள்ள அனல் மின் உற்பத்தி நிலையம் மீதும், மன்னார் மாவட்டத்தில் உள்ள தள்ளாடி சிறிலங்கா படைத்தளம் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன என்று சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளதாவது: தள்ளாடி சிறிலங்கா படைத்தளம் மீது இன்று செவ்வாய்க்கிழமை இரவு 10:50 நிமிடத்துக்கு விடுதலைப் புலிகளின் வானூர்தி ஒன்று குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. அதேநேரம், கொழும்பின் புறநகர்ப்பகுதியான களனி திசவில் அமைந்துள்ள அனல் மின் உற்பத்தி நிலையம் மீதும் இன்றிரவு 11:30 நிமிடமளவில் விடுதலைப் புலிகளின் வானூர்தி குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளது. விடுதலைப் புலிகளின் வானூர்திக்கு எதிராக சிறிலங்கா படையினர் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் வானூர்தி தாக்குதலினால் களனி திச அனல் மின் உற்பத்தி நிலையம் தீப்பற்றி எரிவதாகவும் அதனை அணைப்பதற்கு தீயணைப்பு படையினர் விரைந்து சென்று கொண்டிருப்பதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தள்ளாடி படைத்தளம் மீதும் களனி திச அனல் மின் உற்பத்தி நிலையம் மீதும் தலா இரு குண்டுகளை விடுதலைப் புலிகளின் வானூர்திகள் வீசியதாக பிறிதொரு கொழும்பு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. வானூர்தி தாக்குதல் தொடர்பில் விடுதலைப் புலிகள் அதிகாரபுபூர்வமாக இதுவரை எதனையும் தெரிவிக்கவில்லை.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.