Thursday, July 17, 2008

ஏறாவூர் ஈ.பி.டி.பி. முகாம் புதைகுழியில் உடலம்

[வியாழக்கிழமை, 17 யூலை 2008] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூரில் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப் படைக்குழுவான ஈ.பி.டி.பியின் அலுவலக வளாகத்தில் கடத்தப்பட்ட ஒருவரின் உடலம் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏறாவூரில் உள்ள ஈ.பி.டி.பியின் அலுவலக வளாகத்தின் பின்பக்கமாகவுள்ள ஓரிடத்தில் இந்த உடலம் புதைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்களால் தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஈ.பி.டி.பியின் அலுவலக வளாகத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதிக்கு காவல்துறையினர் சென்றபோது அங்கே புதைக்கப்பட்ட ஒருவரின் தலைப்பகுதி புதைகுழிக்கு வெளியே தெரிந்துகொண்டிருந்ததால் இது குறித்து உடனடியாக காவல்துறை மேலிடத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளின் உத்தரவின் பிரகாரம் மாவட்ட நீதிபதிக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதுடன் நீதிபதி முன்னிலையில் புதைகுழியை தோண்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. இன்று வியாழக்கிழமை பிற்பகல் வரை புதைகுழி தோண்டப்படவில்லை என்றும் இன்று மாலை புதைகுழி தோண்டப்படலாம் என்றும் மட்டக்களப்பு மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புதைகுழிக்கு வெளியே தெரியும் தலைப்பகுதி மட்டக்களப்பில் அண்மையில் கடத்தப்பட்ட ஒருவரினது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனை காவல்துறையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர். கடத்தப்பட்ட ஒருவரின் உடலம் ஈ.பி.டி.பியின் அலுவலக வளாகத்தில் புதைக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

1 comment:

  1. இன்னும் எத்தனை புதைகுழிகளோ ?

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.