[சனிக்கிழமை, 05 யூலை 2008] தமிழ் மக்கள் மீது சிங்கள அரசானது பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது என்ற உண்மைக்கு அருகில் உலக சமூகம் வந்துள்ளது என்று ஊகிக்க முடிகின்றது. அவ்வாறு உணர்ந்த அவர்கள் எமது உரிமைப்போரை புரிந்துகொள்ளும் நாள் தொலைவில் இல்லை என்று நம்பிக்கை வெளியிட்டு "விடுதலைப் புலிகள்" ஏட்டின் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை (04.07.08) வெளியான "விடுதலைப் புலிகள்" ஏட்டின் 141 ஆவது குரலில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சிறிலங்கா அரசைத் தனிமைப்படுத்தி, அரசியல் ரீதியாக மதிப்பிறக்கம் செய்ய முற்படும், அனைத்துலக அரசியல் சூழல் ஒன்று உருவாகி வருவதை அவதானிக்க முடிகின்றது. உலக மனித உரிமை அமைப்புகள் மற்றும் அனைத்துலகத் தொண்டு நிறுவனங்கள் தொடுக்கும் சரமாரியான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களால் சிங்கள அரசு திணறி வருகின்றது. மூதூர் தொண்டு நிறுவனப்பணியாளர்கள் படுகொலை தொடர்பான விசாரணைகளைப் பன்னாட்டு நீதிமன்றில் விசாரிக்க வேண்டும் என்ற பிரான்ஸ் நாட்டின் முயற்சி சிங்கள அரசைச் சிக்கலுக்குள் தள்ளியுள்ளது. ஏற்கனவே ஜ.நா சபைக்கான ஆசிய மனித உரிமைச்சபையிலிருந்து சிறிலங்கா நீக்கப்பட்டமை மற்றும் தகுதியிழந்த நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும் சேர்க்கப்பட்டமை போன்ற நிலைகளால் சிறிலங்கா அரசு தோல்வியடைந்த அரசாக உலக சமூகத்தின் முன்னால் உள்ளது. இவ்விதமாக, தமிழர் மீதான இனவெறி நடவடிக்கைகளுக்கு எதிராக உலக சமூகம் கண்டனங்கள் வெளியிட்டு - அரசியல் ரீதியான சில தண்டனைகளை வழங்கினாலும், சிங்கள அரசு தனது மூர்க்கத்தனத்தை நிறுத்தவில்லை. தன்னைக் கண்டிக்கும் உலக அமைப்புகளைத் திருப்பிக் கண்டிக்கும் அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது உலக சமூகத்தை கோபத்திற்குள்ளாக்கி வருகின்றது. போர் என்ற சாட்டில் சிங்கள அரசு செய்துவரும் தமிழ் இனக்கொலையை பல மேற்கு நாடுகளும் கேள்விக்குள்ளாக்கியுள்ளன. அதனால் சிறிலங்காவுடனான தமது ஆயுத தளபாட விற்பனைகளை நிறுத்தியும் உள்ளன. தமிழ் - சிங்கள இன முரண்பாட்டிற்கு போர் தீர்வாகாது என்றும் நிலைப்பாடு எடுத்துள்ளன. ஐரோப்பியக் கண்டத்தின் ஒரு டசினுக்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கிய ஜரோப்பிய யூனியன் சிறிலங்கா அரசின் இனக்கொலை நடவடிக்கைக்குக் காட்டமான பதிலடி கொடுக்கும் வகையில் சில எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றது. சிறிலங்காவிலிருந்து ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தைக்கப்பட்ட ஆடைகளுக்கான வரிச் சலுகை வசதிகளை இரத்துச் செய்யப்போவதாக ஐரோப்பிய யூனியன் மிரட்டியுள்ளது. உண்மையில், இந்த மிரட்டல் நடைமுறைக்கு வரும் நிலை தோன்றினால், அதை சிங்கள அரசுக்கு எதிரான ஒரு பொருண்மியத் தடையாகக் கணிக்கமுடியும். இந்த நடவடிக்கைக்காக ஐரோப்பிய யூனியன் விதித்த நிபந்தனைகள் எவற்றையும் ஏற்கவோ, நடைமுறைப்படுத்தவோ, சிறிலங்கா அரசு முன்வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை ஏற்க அல்லது நடைமுறைப்படுத்த: மேலும் சிலகால அவகாசத்தை ஐரோப்பிய யூனியன் வழங்கியுள்ளது. பொருண்மியத்தடை என்ற அரசியல் பரிமாணத்தைக் கொண்ட இந்த வரிச்சலுகை நிறுத்தத்தை ஐரோப்பிய யூனியன் நடைமுறைப்படுத்துமா, இல்லையா என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியது. ஆயினும் மனித உரிமைகளையும் - ஒரு சட்டபூர்வ அரசிற்கு இருக்கவேண்டிய தன்மைகளையும் காலில் போட்டு மிதித்தபடி உலக சமூகத்தை எள்ளி நகையாடும் சிங்கள அரசை, எவ்வளவு காலத்திற்கு உலகம் சகிக்கப்போகின்றது என்ற கேள்விக்கு உலகம் பதில் சொல்ல வேண்டும். சிங்கள அரசானது தமிழ் மக்கள் மீது அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது என்ற உண்மைக்கு அருகில் உலக சமூகம் வந்துள்ளது என்று ஊகிக்க முடிகின்றது. கடந்த ஒரு வருடகாலமாக சிங்கள அரசின் இன அழிப்பு நடவடிக்கைகள் உலக சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளன. பல்வேறுவிதமான கண்டனங்களுக்கும், எச்சரிக்கைகளுக்கும் சிங்கள அரசு உள்ளாகி வருகின்றது. எனினும், உலக அமைப்புகள் குற்றம் சாட்டுவது போல, தான் மனித உரிமை மீறல்களைச் செய்யவில்லை என்று சிறிலங்கா அரசு கூறுகின்றது. ஐரோப்பிய யூனியனின் நிபந்தனைகளை ஏற்கப்போவதில்லை என்றும்: சவால் விடுகின்றது. அனைத்துலக நீதிமன்றின் முன் சிறிலங்கா அரசுக்கெதிராக வழக்குகள் போடப்பட்டால் ஒரு போதும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படாது: என்றும் அது பிரகடனம் செய்துள்ளது. உலகின் எந்த ஒரு நாடும் தமது போர் நடவடிக்கைகளை விமர்சிக்க முடியாது. அது தமது உள்நாட்டு விவகாரம் என்றும் சிறிலங்கா அரசு கடும்போக்கு நிலைப்பாடெடுத்து வருகின்றது. உண்மையில், ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் ஒரு சட்டபூர்வ அரசு என்ற நிலைப்பாட்டிலிருந்து சிறிலங்கா அரசு தன்னை விடுவித்துக்கொள்ள முயல்வது போலுள்ளது. ஐ.நா சாசனங்களுக்குக் கட்டுப்படவும் சிங்கள அரசு மறுக்கின்றது. எல்லாவற்றையும் சவாலுக்குட்படுத்தி - உலக சமூகத்தை கோபத்திற்குள்ளாக்கி வருகின்றது. தமிழருக்கு எதிரான இன அழிப்புப்போருக்கு எதிராகக் கருத்துக்கள் வெளியிடும் இராஜதந்திரிகள் - அமைப்புக்கள் மீது கடும் சொற்கள் கொண்டு பதில் விமர்சனம் செய்வதில் சிங்களத் தலைவர்களும் சிங்கள ஊடகவியலாளர்களும் குறியாக உள்ளனர். தமிழ்மக்களுக்கு எதிரான போர் தொடர்பாக - மனித உரிமை மீறல்கள் தொடர்பாக - உலக அமைப்புகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு சிங்கள அரசு பதில் கூறும்போது, அது தன்னையும் அறியாமல் தமிழருக்கெதிரான தனது இனவெறிக்கொள்கையை வெளிப்படுத்தி வருகின்றது. சிறிலங்காவுக்கெதிரான வரிச்சலுகை நிறுத்த நடவடிக்கையை ஐரோப்பிய யூனியன் விதித்தால், ஒரு இலட்சம் சிங்களவரின் வேலை வாய்ப்புகள் பறிபோகும். அதனால், சில இலட்சம் சிங்கள மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள் என்று சிங்கள அமைச்சர்கள் விளக்கமளிக்கின்றனர். ஆனால், தமிழர் மீது அது தொடுத்த போரில் பல இலட்சம் பேர் கொண்ட ஒரு தேசிய இனம் இன அழிப்பு என்ற அவலத்தை எதிர்கொள்வதைப்பற்றி சிறிலங்கா தலைவர்கள் கவலைப்படவில்லை. ஒரு தேசிய இனத்தின் (தமிழ்) மனித உரிமையைக் கருத்தில் எடுக்கவில்லை. ஆனால், ஒரு இலட்சம் சிங்களவர்களின் நலன்களை அது தூக்கிப்பிடிக்கின்றது. இது சிங்கள அரசின் அப்பட்டமான இனவெறிக் கொள்கையை நிரூபிக்கின்றது. தமிழருக்கு ஒரு நீதி சிங்களவருக்கு வேறொரு நீதி என்று நிலைப்பாடெடுத்து, சிங்களவருக்கு நீதி வழங்கி - நியாயம் செய்ய வேண்டியதை தனது கடமையாக எடுத்துக்கொண்டு தமிழரை இன அழிப்புச் செய்வதை அரச கொள்கையாக வெளிப்படுத்தியுள்ளது. சிறிலங்கா அரசின் இந்த இனவெறிக்கொள்கையையும் - இனவெறி நடவடிக்கைகளையும் படிப்படியாக உலக சமூகம் அறிந்து வருவதை அதன் எதிர்செயற்பாடுகள் வாயிலாகக் காணக்கூடியதாக உள்ளது. அதன் விளைவாகவே சிறிலங்கா அரசின் அரசியல் மதிப்பு அனைத்துலக நாடுகள் - அமைப்புகள் மத்தியில் தற்போது வீழ்ச்சியடைந்து வருகின்றது. ஒருபுறம் அரசியல் மதிப்பிறக்கம் - மறுபுறம் ஆயுத பொருண்மிய உதவிகளில் முடக்கம் என்று சிங்கள அரசுக்கு எதிரான உணர்வுகளையும் உலக சமூகம் வெளிக்காட்டி வருகின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Saturday, July 05, 2008
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.