Wednesday, June 18, 2008

மன்னார் நகர படைக்காவலரண் மீது புலிகள் துணிகரத் தாக்குதல்: ஒருவர் பலி- காவல்துறையினர் இருவர் காயம்

[புதன்கிழமை, 18 யூன் 2008,] மன்னார் நகருக்கு அண்மையில் உள்ள சிறிலங்காப் படையினரின் காவலரண் மீது விடுதலைப் புலிகள் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இரண்டு காவல்துறையினர் படுகாயமடைந்துள்ளனர். பாதுகாப்பு அதிகம் உள்ள மன்னார் பொது விளையாட்டு மைதானத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த படையினரின் காவலரண் மீதே இத்துணிகரத் தாக்குதல் இன்று புதன்கிழமை அதிகாலை 2:10 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது. "இத்தாக்குதலுக்கு புலிகள் கைக்குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து இன்று காலை முதல் மன்னார் நகரம் முழுவதும் சுற்றிவளைக்கப்பட்டு தப்பியோடிய புலிகளைத் தேடும் பணி நடைபெறுகின்றது" என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். புலிகளின் கைக்குண்டுத் தாக்குதலையடுத்து படையினர் அச்சத்தால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடமாக இடைவிடாத துப்பாக்கிச் சூட்டை நடத்தினர். இதனால் மன்னார் நகரம் இன்று அதிகாலை பெரும் பரபரப்பானது. படையினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டினால் அப்பகுதியில் இருந்த மக்களின் வீடுகளில் துப்பாக்கி வேட்டுக்கள் துளைத்துள்ளன. அத்துடன் பல வீடுகளின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியுள்ளன. இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட படைத்தரப்பைச் சேர்ந்தவரின் சடலம் மன்னார் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 2 காவல்துறையினரும் மன்னார் மருத்துவமனையில் இருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.