[வியாழக்கிழமை, 01 மே 2008,] தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்பவற்றினை உலக சமூகம் அங்கீகரிக்கும் வரை உறுதியோடு எமது தமிழீழத் தேசியத் தலைவருடன் இணைந்து போராடுவோம் என்று கிளிநொச்சி மே நாள் ஏற்பாட்டுக்குழு அறைகூவல் விடுத்துள்ளது. இது தொடர்பில் கிளிநொச்சி மே நாள் ஏற்பாட்டுக்குழு விடுத்துள்ள மே நாள் அறிக்கை: அடக்குமுறைக்கு எதிராக உலகத் தொழிலாளர்கள் அணிதிரண்டு உரிமைகளை வென்றெடுத்த உலகத் தொழிலாளர் நாளாகும். இந்த நாளில் நினைவு கூரும் உழைப்பாளர்களுடன் தமிழீழ உழைப்பாளர்களும் இணைந்து கரம் கோர்த்து சிறிலங்கா இனவாதத்திற்கு எதிராக மூர்க்கமுடன் போராட உறுதி எடுக்கும் நாளாக இன்றைய நாளைப் பிரகடனப்படுததுகின்றோம். சிக்காகோ நகரில் உலகத் தொழிலாளர்கள் ஒன்றுகூடி தமது 8 மணி நேர வேலைக்காக உரிமைப் பிரகடனம் செய்து 100 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையிலும், எமது தமிழீழ தொழிலாளர் வர்க்கம் மிக மோசமான நிலையில் புறந்தள்ளப்பட்டு- அவர்களின் வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு- தொழில் செய்யும் நிலையங்கள் பறித்தெடுக்கப்பட்டுள்ளதனை அனைத்துலக சமூகம் கண்டும் காணாதது போல் இருக்கும் நிலை வேதனைப்படக்கூடிய ஒன்றாகும். தமிழர்களின் விளை நிலங்கள் பறித்தெடுக்கப்பட்டுள்ளதும்- சுதந்திரமாக கடல் தொழிலில் ஈடுபட்டுள்ள கடல் தொழிலாளர்களின் தொழில் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டதும்- அன்றாடம் உழைக்கும் உழைப்பாளிகளின் வழிமுறைகள் இழுத்து மூடப்பட்டுள்ளதும்- நடமாடும் சுதந்திரங்கள் தடுக்கப்பட்டடுள்ளதனையும் அனைத்துலக சமூகத்தின் முன்னிலையில் வெளிக்கொணரும் ஒர் அடையாள நாளாக இந்த மே நாளினை வெளிப்படுத்த உழைக்கும் வர்க்கம் ஒன்றுகூடியுள்ளது. உலக சமூகம் நாகரிகத்தின் வளர்ச்சியில் உச்சம் பெற்றுள்ள இந்த நிலையில் சிறிலங்கா அரசும் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டுள்ள பிற்போக்குத் தனத்தை அனைத்துலக சமூகத்திற்கு பகிரங்கப்படுத்தும் நாளாக இந்த நாளை தமிழ்த் தொழிலாளர்கள் முன்னெடுக்கின்றனர். நாகரிகத்தில் மேம்பட்டுள்ள உலக சமூகத்தில் மனித உரிமைகள், மனித மதிப்பு, மனிதாபிமானம், சுய உரிமை என்பன நன்கு மதிக்கப்படும் ஒரு பண்பாடு உயர்ந்து வளரும் சூழலில் இன ரீதியான வன்மத்துடன் உரிமை வழங்க மறுத்துள்ள இனவாதிகளால் வழிநடத்தப்படும் ஒரு நாடாக சிறிலங்கா செயற்படுவதும்- அது போரின் மீது தீராத தாகத்துடன் லட்சக்கணக்கான தமிழ் மக்களை தமிழர்கள் என்பதற்காகவே இடம்பெயர வைத்தும்- இலங்கை முழுவதிலும் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதும் அவர்களின் உடலங்கள் அடையாளம் காணமுடியாத நிலையில் சிதைக்கப்பட்டு வீசப்படுவதும்- எல்லாவற்றக்கும் மேலாக ஆட்கள் காணாமல் போகச்செய்யும் படுகேவலமான அரசுக்கு எதிராக தமிழீழ தொழிலாளர் சமூகம் ஒன்றிணைந்து குரல் கொடுக்கும் நாளாக இன்றைய நாளைப் பிரகடனப்படுத்துகின்றோம். இலங்கையின் தென்பகுதி முழுவதிலும் தமிழர்கள் ஆயுதமுனையில் விரட்டப்படுவதும் கொள்ளையடிக்கப்படுவதும் தேசிய சட்ட நடவடிக்கையாக ஊக்கமளிக்கப்படுகின்றது. இராணுவ வன்பறிப்புக்குட்பட்டுள்ள தமிழர் தாயக பிரதேசங்களில் அவர்கள் அடிமைகளாக ஆயுதத்தால் மிரட்டப்படுவதுடன் அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளுமே இராணுவத்தினரால் அவதானிக்கப்பட்டு அச்சுறுத்தப்படுவதும் இன உறவுகள் இணைய முடியாதவாறு துண்டாடப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுமான உரிமை மறுப்பு நிகழ்ச்சி அரசினால் திட்மிட்டு நடத்தப்பட்டு வருகின்றது. துணை இராணுவக் குழுக்களை உருவாக்கி சகோதர மோதல்களையும் கொலைகளையும் திட்டமிட்டு நடத்திக்கொண்டு போலி ஜனநாயகத்தை நிறுவ முயலும் பேரினவாதத்தின் நடவடிக்கைகளை உயரக்கண்டிக்கும் நாளாக இந்த நாளை பிரகடனப்படுத்துகின்றோம். படு மோசமான பிற்போக்குவாத அரசின் இனப்படுகொலைக்கு எதிராகவும் அடக்கமுறைக்கு எதிராகவும் தீரமுடன் போராடும் தமிழீழ விடுதலைப் புலிகளுககு பின்னால் அணிதிரண்டுள்ள வீரத்தமிழர்களின் போராட்டத்தை நசுக்க ஒவ்வொரு நாளும் வானூர்திகள் மூலம் குண்டுகளை வீசி அப்பாவிப் பொதுமக்களை சாகடிப்பதுடன் ஆழ ஊடுருவும் படையினர் மூலம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் மாணவர்களையும் தொழிலாளர்களையும் கண்மூடித்தனமாக கிளைமோர்த் தாக்குதல் மூலம் படுகொலை செய்து வரும் நிகழ்வுகள் தொடர்கின்றன. எல்லைகளில் பாரிய முன்நகர்வுகளை மேற்கொண்டு லட்சக்கணக்கானோரை இடம்பெயரச் செய்து தமிழரின் பெறுமதிமிக்க சொத்துக்களை கண்மூடித்தனமான அழிப்புச் செய்து எமது வாழ்வு உரிமையை கேள்விக்குறியாக்கியுள்ள அவலத்தையும் உலக சமூகத்தின் கவனயீர்ப்புக்கு கொண்டு வரும் நாளாக இந்த ஆண்டு மே நாளை பிரகடனப்படுத்துகின்றோம். உரிமைகள் தானாகக் கிடைப்பதில்லை என்பதனையும் அதனை பெற நாம் எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயாராக வேண்டும் என்பதனையும் வெளிக்காட்டும் ஒரு நாளாகவே மே நாள் இருந்து வருகின்றது. இந்த நாளில் உலகத் தொழிலாளர்களுடன் ஒன்றிணைந்து தமிழீழ உழைப்பாளர்களும் உறுதியெடுத்துக் கொள்ளும் விடயங்களாக வாழ்வுரிமை மறுக்கப்பட்டு இராணுவ பலத்தினால் அடக்க முனையும் சிறிலங்கா அரசுக்கு எதிராக உறுதியுடன் இறுதிவரை போராடுவோம். தமிழர் தாயகம் - தேசியம்- தன்னாட்சி உரிமை என்பவற்றை உலக சமூகம் அங்கீகரிக்கும் வரை உறுதியோடு எம் தேசியத் தலைவருடன் இணைந்து போராடுவோம்! கண்டனங்களை மட்டும் வழங்கிக்கொண்டிருக்கும் உலக சமூகமே! நீங்கள் படுகொலைக்கு எதிராக உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள உறுதி எடுக்குமாறு வேண்டுகின்றோம்! போலித்தனமான துணை இராணுவக்குழுக்களின் மூலம் முலாம் பூசப்பட்ட ஜனநாயக செயற்பாடுகளை உலகம் நிராகரிக்குமாறு உங்களை வேண்டுகின்றோம்.! எமது சுதந்திர தாயகத்திற்கான தேசியக் கட்டமைப்பை உருவாக்கி தனியரசு நிலைக்கான நிர்வாகத்தை உருவாக்கிய நிலையில் எமது நாட்டினை அங்கீகரிக்க வருமாறு இன்றைய நாளில் தமிழர் தாயகத் தொழிலாளர்களாகிய நாம் ஒன்றிணைந்து அனைத்துலக சமூகத்திற்கு அறைகூவல் விடுக்கின்றோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Thursday, May 01, 2008
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.