Tuesday, December 04, 2007

ஆயிரக்கணக்கான தமிழர்கள் கைது: அனைத்துலக மன்னிப்புச் சபை கண்டனம்.!!

[செவ்வாய்க்கிழமை, 04 டிசெம்பர் 2007]


சிறிலங்கா காவல்துறையினரால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டமைக்கு அனைத்துலக மன்னிப்புச் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

அனைத்துலக் மன்னிப்புச் சபையின் கண்டன அறிக்கை:

கொழும்பில் நவம்பர் 28 ஆம் நாள், நடந்த தற்கொலைத் தாக்குதல்களுக்குக் காரணமானவர்கள் என்று கூறி சிறிலங்கா காவல்துறையினரால் 1,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இனப்பாகுபாட்டின் அடிப்படையில் அவசரகாலச் சட்டங்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த கைது குறித்து நாம் ஆழ்ந்த கவலை கொள்கிறோம்.

பேரூந்துகளில் தமிழர்கள் ஏற்றப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் 50 பெண்கள் உட்ட 400-க்கும் மேற்பட்டோர் காலி அருகே உள்ள பூசா முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. பூசா தடுப்பு முகாமில் பெருந்தொகையானோர் தடுத்து வைக்கப்படுவதால் அவர்களுக்குரிய அடிப்படை வசதிகள்கள் அங்கு கிடைக்காது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கத்துக்கு உரிமை உள்ளபோதும் இத்தககைய அடிப்படை உரிமை மீறல்களை ஒருபோதும் மேற்கொள்ளக்கூடாது.

அவசரகாலச் சட்டத்தின் கீழ் "சந்தேகத்துக்குரிய"வர்கள் என்பதற்காகவே அனைவருமே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எவர் மீதும் எந்த ஒரு முறையான குற்றச்சாட்டும் இல்லை.

அதேபோல் தடுத்து வைத்தல் தொடர்பான உத்தரவுகள் தெளிவற்றதாக இருப்பதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்துக்காக ஜூலை 2006 ஆம் ஆண்டு அரச தலைவர் வழிகாட்டுதல் ஆணைக்கு முரணாக இது உள்ளது. கைது செய்யப்பட்டோர் அல்லது தடுத்து வைக்கப்பட்டோர் குறித்து 48 மணி நேரத்துக்குள் அவர்களின் குடும்பத்தாருக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று அப்போது கூறப்பட்டிருந்தது.

கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை உடனடியாக சிறிலங்கா அரசாங்கம் விடுவிக்க வேண்டும். அனைத்துலக மனிதாபிமானச் சட்டம் மற்றும் தரங்களுக்கு ஏற்ற வகையில் அவசரகால சட்டத்தை மறுபரிசீலனைக்குட்படுத்த வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.