Tuesday, December 04, 2007

தென்னிலங்கையில் தமிழர்கள் கைது: கி.வீரமணி கண்டனம்

[செவ்வாய்க்கிழமை, 04 டிசெம்பர் 2007]


தென்னிலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டமைக்கு (தமிழ்நாடு) திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் தமிழ் இனப் படுகொலைகளும், தமிழர்களை காடு, வனாந்தரங்களுக்கு சிங்கள இராணுவம் விரட்டி, பசி, பட்டினியால் சாகும் நிலையை ஏற்படுத்தும் கொடுமைகளும், அதன் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வெகுமூர்த்தன்யமாக நடைபெற்று வருகின்றன.

அக்கொடுமைகளுக்குச் சிகரம் போல நவம்பர் 30 ஆம் நாள் முதல் டிசம்பர் 2 ஆம் நாள் வரை சுமார் 3000-க்கும் மேற்பட்ட, தலைநகர் கொழும்பில் வாழும் தமிழர்கள் எவ்விதக் காரணமுமின்றி, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இப்படிப்பட்ட செய்திகளைக் கேட்டு நம் உள்ளம் வேதனைத் தீயில் வெந்து கொண்டிருக்கிறது. உலகிலேயே தமிழினம் ஒன்றுதான் நாதியற்ற இனமாகி வரும் இரங்கத்தக்க நிலை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் தொடர்ந்தபடி உள்ளது. என்னே கொடுமை!!

முன்பு ஒருமுறை சில மாதங்களுக்கு முன் இதேபோல சம்பவம் நடந்து, உலகின் பல்வேறு அமைப்புக்களும் கண்டனம் தெரிவித்ததோடு, இலங்கையின் உச்சநீதிமன்றமும் கூட கண்டித்தது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கூட கண்டனக்குரல் எழுப்பப்பட்டது. பிறகுதான் தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த கோரத்தாண்டவம் மீண்டும் இலங்கை அரசால் அரங்கேற்றப்பட்டு, அதன் தலைநகர் வாழ் தமிழர்களைக் கைது செய்வது இப்பொழுதும் தொடர்கிறது.

கொழும்பு வாழ் தமிழர்கள் செய்த குற்றம் அவர்கள் தமிழர்களாக இருப்பதுதானா?

இதை வன்மையாகக் கண்டிப்பதுடன், இதற்கு மத்திய அரசு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து அவர்களைக் காப்பாற்ற முன்வரவேண்டும்.

மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் மத்திய அரசின்- குறிப்பாக, பிரதமரின் கவனத்திற்கு, முன்பு மலேசியத் தமிழர்கள் பிரச்சினையில் கடிதம் மூலம் சுட்டிக்காட்டியது போல் சுட்டிக்காட்டி, போதிய நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்த வேண்டும் என்றும் அவர்களை உரிமையுடன் வேண்டிக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.