Sunday, November 11, 2007

பரம்பரைப் பகையாளி ஜெயலலிதாவை அரிசியலில் இருந்து ஓரங்கட்டுங்கள்: கனடாவிலிருந்து தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்

[ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2007]

தமிழினத்தின் பரம்பரைப் பகையாளியான ஜெயலலிதாவை அரிசியலில் இருந்து ஓரங்கட்டுங்கள் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு கனடாவிலிருந்து தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் வேண்டுகொள் விடுத்துள்ளது.

தமிழ்ப் படைப்பாளிகள் கழகத்தின் தலைவர் நக்கீரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட 6 போராளிகளைக் கோழைத்தனமாக சிங்கள அரசின் வான் படை குண்டு போட்டுக் படுகொலை செய்தது உலகம் வாழ் தமிழ் மக்களை அதிர்ச்சிக்கும் ஆழ்ந்த கவலைக்கும் உள்ளாக்கியுள்ளது.

விடுதலைப் புலிகளின் அமைதி முகமாக விளங்கிய பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் சாகடிக்கப்பட்டதன் மூலம் சிங்கள அரசு அமைதிப் பேச்சு வார்த்தைக்கான கதவைச் சிக்காராக மூடியுள்ளது. அமைதி வழியில் இனச் சிக்கலுக்குத் தீர்வு காணலாம் என்ற தமிழர் தரப்பின் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் சிதறிடித்துள்ளது.

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் கோழைத்தனமாகக் குண்டுவீசிக் கொல்லப்பட்டதைக் கண்டித்து பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். ருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், சு.ப.வீரபாண்டியன் தலைமையிலான திராவிடர் இயக்க தமிழர் பேரவை உட்பட பல கட்சித் தலைவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

"போர் தர்மங்களை மீறியே தமிழ்ச்செல்வன் படுகொலை" செய்யப்பட்டார் என்று இந்திய நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி விடுத்த இரங்கல் கவிதையில் "எப்போதும் சிரித்திடும் முகம் எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்!" எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

மொத்தத்தில் இனத்தாலும் மொழியாலும் உணர்வாலும் ஈழத்தமிழர்களோடு தாய், சேய் தொப்புள் கொடி உறவு கொண்டுள்ள தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. கொடூர சிங்கள பெளத்த இனவாத சிறிலங்கா அரசுக்கு எதிரான எதிர்ப்பலைகள் தமிழகத்தில் வீசுகின்றன.

ஆனால் ஒரே ஒரு எதிர்ப்புக் குரல் மட்டும் கேட்கிறது. அது யாருடைய குரல்? எந்த இனத்தின் குரல்? தமிழ் மக்களுக்கும் அந்தக் குரலுக்கும் என்ன உறவு?

இம் என்றால் இருநூறும் அம் என்றால் ஆயிரமும் என அறிக்கை விடும் ஜெயலலிதா, கலைஞர் இரங்கல் கவிதை வெளியிட்டதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கும் இடையில் இருந்த இரகசியத் தொடர்பு அம்பலமாகிவிட்டது என்றும் இந்திய அரசமைப்புக்கும் தேசியப் பாதுகாப்புக்கும் விசுவாசமாகச் செயற்படுவோம் என உறுதி எடுத்து பதவியேற்ற கலைஞரின் அரசு, இந்தியாவில் தடை செய்யப்பட்ட புலிகள் இயக்கத்தின் தலைவர் ஒருவரின் சாவுக்கு இரங்கல் தெரிவித்ததன் மூலம் தேசிய பாதுகாப்புக்கு விரோதமாகச் செயற்பட்டதால் திமுக அரசை கலைக்க வேண்டும் என்றும் வாயிலும் வயிற்றிலும் அடித்து குய்யோ முறையோ என ஒப்பாரி வைத்துள்ளார்.

ஜெயலலலிதாவின் ஒப்பாரிக்குப் பதில் அளிக்கு முகமாக "இலங்கையிலே கொல்லப்பட்டது ஒரு தமிழன். என் உடலில் ஓடுவது தமிழ் இரத்தம். அதனால்தான் நான் இரங்கல் தெரிவித்தேன்" என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

இதற்குப் பதில் அளித்த ஜெயலலிதா "மைசூரில் பிறந்தாலும் நான் தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவள். எனது உடம்பிலும் தமிழ் இரத்தம் தான் ஓடுகிறது" எனக் கூறியுள்ளார்.

தனது உடம்பிலும் தமிழ் குருதிதான் ஓடுகிறது என்று ஜெயலலிதா சொல்வது உண்மையானால் கலைஞர் கருணாநிதி, தமிழ்ச்செல்வனுக்கு தமிழன் என்ற முறையில் இரங்கல் தெரிவித்ததற்கு எதிராக ஏன் உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும்? இராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என ஏன் உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும்? ஒரு நூற்றாண்டு காலத்துக்கும் மேலாகப் போராடிப் பெற்ற சேது கால்வாய்த் திட்டத்தை இராமர் பேரைச் சொல்லி முடக்க நினைப்பது ஏன்?

சேது கால்வாய்த் திட்டத்துக்கு எதிராக இராமர் பேரைச் சொல்லிக் கொண்டு அணிதிரளும் ஜெயலலிதா, தொண்டரில்லாத கட்சித் தலைவர் சுப்பிரமணியசுவாமி, கோமாளிப் பத்திரிகையாளர் சோ, இந்து இராம் போன்ற தமிழ்ப் பகைவர்களே பிரிகேடியர் தமிழ்ச்செல்வனுக்கு கலைஞர் கருணாநிதி இரங்கல் தெரிவித்ததை எதிர்க்கிறது!

இது தற்செயலானது அல்ல- தமிழினத்துக்கு எதிரான பரம்பரை வரலாற்றுப் பகையைக் காட்டுகிறது!

தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கக்கூடாது அவர்களோடு பேசக்கூடாது பேசினால் தேசத் துரோகம் எனக் கொக்கரிக்கும் ஜெயலலிதா தீவிரவாதிகளை ஒடுக்கப் பொடாச் சட்டம் கொண்டு வந்த பிரதமர் வாஜ்பாய்தான் மகா நாகாலாந்து என்ற பெயரில் தனிநாடு கேட்டு ஆயுதம் தாங்கிப் போராடிய தீவிரவாதிகளோடு பேச்சு நடத்த பத்மனாபய்யா என்ற அதிகாரியை தீவிரவாதிகளிடம் அனுப்பியது? நாகாலாந்து தீவிரவாதிகளின் இயக்கம் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கம்தானே?

உண்மை என்னவென்றால் தமிழினத்தின் பகைவர்கள் தமிழின எழுச்சியை அடக்கவும், அதன் ஊடாகத் தமக்கு அரசியல் இலாபம் தேடவும் கங்கணம் கட்டிச் செயற்படத் தொடங்கியுள்ளார்கள்.

தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமிழினத்தின் எழுச்சியை வேரோடும் வேரொடு மண்ணோடும் சாய்க்கக் கங்கணம் கட்டி நிற்கும் தமிழ்ப் பகைவர்களை இனம் காண வேண்டும். இனம் கண்டு அவர்களை அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும். குறிப்பாக ஜெயலலிதாவை அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.