[வியாழக்கிழமை, 15 நவம்பர் 2007] ஆளும் தரப்பிலிருந்து எதிர்க்கட்சித் தரப்புக்கு மாறிய பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ தமது நிலைப்பாட்டை விளக்கும் செய்தியாளர் மாநாடொன்றை இன்று வியாழக்கிழமை காலை பாராளுமன்ற கட்டிடத்தில் நடத்தவிருக்கின்றார். அரச நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவின் தலைவரான விஜேதாஸ ராஜபக்ஷ சமர்ப்பித்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசதுறை அதிகாரிகளின் ஊழல், மோசடி, துஷ்பிரயோகங்கள் குறித்த அறிக்கை தொடர்பில் அண்மைக்காலமாக எழுந்த பிரச்சினை காரணமாக நெருக்கடி நிலை அதிகரித்து வந்த நிலையில், தற்போதைய அரசியல் குழப்ப நிலைக்கு மத்தியில் விஜேதாஸ ராஜபக்ஷ நேற்று புதன்கிழமை எதிர்க்கட்சித் தரப்புக்கு மாறினார். இதற்கு முன்னர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு மேற்படி பாராளுமன்றக் குழுவின் கூட்டம் கூடிய வேளையில் தம்மைச் செயற்பட விடாது தடுக்கும் முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டதையடுத்து அவர் கூட்டத்தை விட்டு வெளியேறியதாகவும் அதன் பின்னர் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் கூட்டம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இச் சம்பவத்தின் பின்னர் நேற்று முன்தினமிரவு விஜேதாஸ ராஜபக்ஷ முன்னாள் அமைச்சரும் சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு அமைப்பாளருமான மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகியோருடன் நீண்ட நேரம் கலந்துரையாடியதாகவும் தெரிய வருகிறது. இச் சந்திப்பின் பின்னரே அரசு தரப்பிலிருந்து வெளியேறி எதிர்த் தரப்புக்கு மாறும் முடிவை எடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று அவரால் நடத்தப்படும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது பலதரப்பட்ட விடயங்களுடன் இவ்வளவு காலமும் மூடி மறைக்கப்பட்ட சில விடயங்களையும் பகிரங்கப்படுத்தவிருப்பதாகவும் தெரிய வருகின்றது. இதேவேளை, இன்றைய செய்தியாளர் மாநாட்டின்போது ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான அர்ஜூன ரணதுங்கவும் எதிர்த்தரப்புக்கு மாறி ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொள்ளலாமென அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது. இது இவ்விதமிருக்க வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு இடம்பெறக் கூடிய இம்மாதம் 19 ஆம் திகதி திங்கட்கிழமைக்கிடையில் ஆளும் தரப்பிலிருந்து மேலும் பலர் எதிர்த்தரப்புக்கு மாறலாம் என நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் சில அமைச்சர்களும் பிரதியமைச்சர்களும் உள்ளடங்குவர் எனத் தெரிய வருகிறது. அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவிகளை வகித்து வரும் கரு ஜயசூரிய அணியிலிருந்தும் சிலர் மீண்டும் திரும்பி வர விருப்பதாகவும் அறிய வருகின்றது. இன்று வியாழக்கிழமை காலையில் பாராளுமன்றம் கூடும்போது யாரும் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் நிகழக் கூடுமென தம்மை அடையாளம் காட்ட விரும்பாத ஒரு பிரதியமைச்சர் தெரிவித்தார்.
Thursday, November 15, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.