Thursday, November 15, 2007

எதிரணிக்கு தாவும் 4 ஜாதிக ஹெல உறுமய பிக்குகள்.!!

[வியாழக்கிழமை, 15 நவம்பர் 2007] மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை ஆதரிக்கும் ஜாதிக ஹெல உறுமயவின் 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணிக்கு தாவ உள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜாதிக ஹெல உறுமயவின் அக்மீமன தயாரட்ண தேரர், அபரெக்கே புன்னானந்த தேரர், அளவேவ நந்தலோக தேரர், உதவத்த நந்த தேரர் ஆகியோர் எதிரணிக்கு தாவக்கூடும் என்று கூறப்படுகிறது. வரவு-செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பிற்கு முன்னதாக சிறப்பு அமைச்சரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தை மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளார். மகிந்த அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு வெற்றி பெறுவது அல்லது மகிந்த அரசாங்கம் நீடிப்பது என்பது தற்போது ஜே.வி.பி.யின் கைகளில் உள்ளதால் ஜே.வி.பி.யை உடைக்கவும் மகிந்த ராஜபக்ச தீவிர முனைப்பு காட்டுவதாகவும் தெரிகிறது. இந்நிலையில் சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் மகிந்த அரசாங்கம் வெற்றி பெற்றுக் காட்டட்டும் என்று சவால் விடுத்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் திச அத்தநாயக்க இது தொடர்பில் கூறியுள்ளதாவது: அரசாங்கத்திலிருந்து விஜயதாச ராஜபக்ச வெளியேறியிருப்பதானது மகிந்த அரசாங்கத்தின் வீழ்ச்சியின் தொடக்கமாகும். மகிந்த அரசாங்கத்தின் மக்கள் விரோத வரவு-செலவுத் திட்டத்தை எவரும் ஆதரிக்கப் போவதில்லை என்றார். ஆனால் "புலிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்காகவே பாதுகாப்பு அமைச்சுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" என்று மகிந்த அரசாங்கத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றில் நேற்று புதன்கிழமை இது தொடர்பில் அவர் பேசியதாவது: சிறிலங்காவின் பாதுகாப்புத் தேவையைக் கருத்தில் கொண்டே பாதுகாப்பு அமைச்சுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புலிகளின் பயங்கரவாதத்திற்கு மகிந்த முகம் கொடுத்து வருகின்றார். பயங்கரவாதத்தின் மத்தியில் நாட்டின் அபிவிருத்தி முன்னெடுக்கப்படுகின்றது. மக்களைப் பாதுகாக்கும் வகையில் வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது. எமது முப்படைகளும் பல வெற்றிகளை கண்டுள்ளன. சில பின்னடைவுகளை இராணுவத்தினர் எதிர்நோக்கிய போதும் சாதனை படைக்கும் வெற்றிகளை சாதித்துள்ளனர். நாட்டில் பிரிந்திருந்த கிழக்கு மாகாணத்தை இராணுவத்தினர் மீட்டனர். நாங்கள் எமது மக்களை, கிழக்கை மீட்டு பாதுகாத்துள்ளோம். பாதுகாப்பு அமைச்சராக இருந்து கொண்டு இத்தனை நடவடிக்கைகளையும் மகிந்த செய்து வருகின்றார் என்றார் அவர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.