Monday, September 17, 2007

விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்குப் போவது அர்த்தமற்ற செயல் - கோட்டபாய ராஜபக்ச.!!

[திங்கட்கிழமை, 17 செப்ரெம்பர் 2007]

விடுதலைப் புலிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவது அர்த்தமற்ற செயல் என சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் முப்படையினருக்காக பெருமளவிலான நிதி ஒதுக்கீடும் ஆயுதக் கொள்வனவும் செய்யப்படும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அறிவித்துள்ளார்.

திருகோணமலை கடற்படைத் தளத்தில் இன்று திங்கட்கிழமை "புலிகளின் ஆயுதக்கப்பலை மூழ்கடித்தாதாக" கூறப்படும் சம்பவத்தில் பங்கேற்ற சிறிலங்கா கடற்படையினரை பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்நிகழ்வில் கோத்தபாய பேசியதாவது:

விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல் தொடர்பாக மாதக்கணக்கில் தகவல்களைப் பெற்ற பின்னரே நன்கு திட்டமிட்டு இந்த தாக்குதல்களை கடற்படையினர் நடத்தினர். சிறிலங்கா கடற்படை வரலாற்றில் கிடைக்காத இந்த வெற்றியை ஈட்டிய கடற்படையினருக்கு வாழ்த்துக்கள்.

இத்தகைய தாக்குதல்களை இரண்டு இன மக்களுக்கு இடையேயான மோதலாகவோ அல்லது ஒரு இனத்தை மற்றொரு இனம் தோற்கடிக்கும் தாக்குதலாகவோ பார்க்கக்கூடாது.

கடந்த பல தசாப்தங்களாக புலிகளுடன் போராடிக் கொண்டிருக்கிறோம். அந்த போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்காகவே இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல்களுக்கு செல்லும்போது தற்கொலைப் படகுகளையும் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே கடற்படையினருக்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும். அவர்களை சிறப்பிக்க வேண்டும்.

சிறிலங்கா கடற்படையினருக்கு இராணுவத்தினரும், வான்படையினரும், காவல்துறையினரும் துணை புரிகின்றனர். அவர்களுக்கும் பாராட்டப்பட வேண்டியவர்கள். நாட்டை பாதுகாக்கும் அவர்கள் தமது இறுதி இலக்கை அடையும் வரை அவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும். இரண்டொரு வெற்றிகள் அல்ல நூற்றுக்கு நூறு சதவீத வெற்றிகளே அவர்களின் இலக்கு.

விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் வன்னிக்குள் முடக்கிவிட்டோம். இந்த நிலையில் முப்படையினரின் திட்டமிட்ட செயற்பாடுகளில் எந்தவித மாற்றமும் இருக்காது. அவர்கள் தமது இலக்கை அடைந்து கொள்வர். இது குறித்து எவரும் சந்தேகம் கொள்ளவோ அல்லது தடம் புரளவோ தேவை இல்லை. ஏனெனில் முப்படையினருக்கு நூற்றுக்கு நூறு சதவிகித வெற்றி தேவை.

முப்படையினருக்கும் தேவையானவற்றை செய்து தருவதற்கு மகிந்தவும், அரசாங்கமும் ஒருபோதும் பின்நிற்கவில்லை. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக எதிர்காலத்திலும் பெருமளவு நிதி ஒதுக்கப்படும். நாட்டில் பொருளாதார பிரச்சினை மற்றும் பல தடைகள் இருந்த போதும் முப்படையினருக்கு தேவையான மேலும் பல ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் இக்போதும் தயாராகவே உள்ளது. இல்லை என்று அரசு ஒருபோதும் கூறவில்லை. அதனால்தான் இத்தகைய வெற்றிகளை முப்படையனராலும் பெறமுடிகிறது.

பல தசாப்தங்களாக தொடரும் பயங்கரவாத்தை அடுத்த தலைமுறைக்கும் விட்டுவைப்பதா? அதற்கு இந்த அரசாங்கம் தயாரில்லை. புலிகளை தோற்கடித்து பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளியிட அரசாங்கம் தயாராக இருக்கிறது.

பயங்கரவாதத்தை தோற்கடிக்காமல் அரசியல் தீர்வுத்திட்டத்தை முன்வைப்பதில் பயனில்லை என்றார் அவர்.

இந்நிகழ்ச்சியில் நிமல் சிறிபால டி சில்வா, டக்ளஸ் தேவானந்தா, மிலிந்த மொறகொட உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

திருகோணமலைக்கு அரச தரப்பு பிரதிநிதிகள் செல்வதனை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வானத்தில் உலங்குவானூர்திகள் வட்டமிட்படியே இருந்தன. கடலிலும் கடற்படைக் கப்பல்கள் சுற்றுக்காவல் பணியை தீவிரப்படுத்தியிருந்தன.

இந்த பாராட்டு விழாவில் கடற்படையினரின் கப்பல்கள் கடலில் தரித்து நிற்க அவற்றிற்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரச உயர்நிலையினர் மரியாதை செலுத்தினர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.