Monday, August 06, 2007

கூட்டு கட்சிகளுக்கு மகிந்த அவசர அழைப்பு- எதிர்க்கட்சிகளும் ஆலோசனை

[திங்கட்கிழமை, 6 ஓகஸ்ட் 2007]


சிறிலங்கா அரசாங்கத்தில் இணைந்துள்ள கூட்டுக் கட்சிகளின் தலைவர்களை இன்று திங்கட்கிழமை மாலை சந்திப்பதற்கான அவசர அழைப்பை மகிந்த ராஜபக்ச விடுத்துள்ளார்.

சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து இச்சந்திப்பில் விரிவாக ஆராயப்படும் என்று மகிந்தவின் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சிகளுக்கு துணைபோகக் கூடாது என்று கூட்டுக் கட்சித் தலைவர்களிடம் மகிந்த வலியுறுத்துவார் என்றும் கூறப்படுகிறது. மேலும் நாளை தொடங்க உள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் எதிர்க்கட்சி வரிசையில் ஆளும் தரப்பினர் சென்று அமர்ந்துவிடக்கூடாது என்பதை வலியுறுத்துவதாகவே இச்சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிகிறது.

மகிந்த அரசாங்கத்துடன் இணைந்துள்ள அனைத்துக்கட்சிகளின் தலைவர்களுக்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சிக்கும் இந்த அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து இ.தொ.காவினரை தொடர்புகொண்டு கேட்டபோது மகிந்த அழைத்தால் நாங்கள் செல்வோம் என்று சூட்சுமமாக தெரிவித்தனர். இந்த சந்திப்பிற்கு இ.தொ.காவினரும் செல்வர் என்று கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே இன்றுமாலை ஆளும் தரப்பின் நாடாளுமன்றக் குழுக்கூட்டமும் நடைபெற உள்ளது. இந்தக்கூட்டத்திலும் மகிந்த கலந்து கொள்கிறார்.

அதேபோல் எதிர்க்கட்சியும் இன்றுமாலை நாடாளுமன்றக்குழுக்கூட்டத்தை கூட்டி நாளைய நாடாளுமன்ற அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைகள் குறித்து விவாதிக்கவிருப்பதாக அக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஹெல உறுமய வாகனம் விவகாரம் குறித்தும் புலிகளுடன் சிறிலங்கா அரசாங்கம் ஒப்பந்தம் செய்து கொண்டதாக கூறப்படுவது குறித்தும் நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதற்கான பிரேரணைகள் தயாரிக்கப்படுவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆராயப்படக் கூடும் எனத் தெரிகிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.