Wednesday, August 22, 2007

தொடரும் போராட்டம்: கொழும்பில் மாணவர்கள் மீது மீண்டும் கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு

[புதன்கிழமை, 22 ஓகஸ்ட் 2007] சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இன்று தடைகளை மீறி அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் இல்லத்தை நோக்கிச் சென்ற சிறிலங்காவின் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியுள்ளனர். கொழும்பு "லிப்டன்" சுற்றுவட்டத்தில் இன்று புதன்கிழமை பிற்பகல் 12:30 மணியளவில் கூடிய 2,000-க்கும் அதிகமான அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் அங்கிருந்து "லிப்டன்" சுற்றுவட்டத்தின் ஊடாக மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகை நோக்கிப் பேரணியாக நகர்ந்தனர். பேரணியில் கலந்துகொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் மகிந்த அரசாங்கத்தின் புதிய கல்வி நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்ததுடன் பல்கலைக்கழகங்களுக்கு போதிய வசதிகளை ஏற்படுத்தித் தருமாறும் முழக்கங்களை எழுப்பினர். அலரி மாளிகையை மாணவர்கள் நெருங்குவதற்கு முன்பாகவே கொள்ளுப்பிட்டிச் சந்தியில் முட்கம்பிகளையும் இரும்புக்கேடர்களையும் போட்டு வீதித்தடைகளை ஏற்படுத்திய சிறிலங்கா இராணுவத்தினரும், காவல்துறையினரும் மாணவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால், பிற்பகல் 1:45 மணியளவில் பாதுகாப்பு தரப்பினர் போட்ட வீதித்தடைகளை உடைத்துக்கொண்டு அலரி மாளிகை நோக்கி பல்கலைக்கழக மாணவர்கள் செல்ல முற்பட்ட போது இருதரப்புக்கும் இடையே கடும் முறுகல் ஏற்பட்டது. திடீரென பல்கலைக்கழக மாணவர்களை நோக்கி காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசி, அழுக்கு நீரையும் பாய்ச்சினர். பதிலுக்கு இராணுவத்தினர் வீசிய கண்ணீர்ப் புகைக்குண்டுகளை பொறுக்கி எடுத்து அவற்றை பாதுகாப்புத் தரப்பினர் மீது மாணவர்கள் வீசினர். எனினும், மாணவர்களை நோக்கி சரமாரியான கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசப்பட்டதால் மாணவர்கள் "லிபர்ட்டி" பிளாசா கட்டடம் அமைந்துள்ள பகுதியை நோக்கி நகர்ந்தனர். அப்பகுதியில் நின்றவாறு முழக்கங்களை எழுப்பி கொள்ளுப்பிட்டிச் சந்தியில் காலி வீதிக்கு குறுக்காக வீதியில் அமர்ந்திருந்தவாறு ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 2,000 மாணவர்கள் கலந்து கொண்டிருப்பதால் காலி வீதியுடனான போக்குவரத்து தடைப்பட்டு பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் குறித்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் பீடத் தலைவர் டுமிந்த நாமக் கூறுகையில், "பல்கலைக்கழகங்களுக்குரிய வசதிகளை ஏற்படுத்தித் தருவதாக மகிந்த அரசாங்கம் உறுதியளித்திருந்தது. ஆனால் இன்னமும் வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. மேலும் மகிந்த அரசாங்கத்தின் புதிய கல்வி நடைமுறைகளால் முதலாம் ஆண்டு மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. இந்த விடயங்களை அலரி மாளிகைக்குச் சென்று மகிந்தவிடம் வலியுறுத்தவே இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளோம்" என்றார் அவர். கொழும்பில் அண்மைக்காலமாக மகிந்த அரசாங்கத்துக்கு எதிராக மாணவர்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தென்னிலங்கை மாணவர்களின் இந்தப் போராட்டத்தை ஒடுக்க சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் அழுக்கு நீரைப் பாய்ச்சியும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி : புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.