Tuesday, August 21, 2007

பலாலி- காங்கேசன்துறை படைத்தளங்களை நோக்கி விடுதலைப் புலிகள் எறிகணை வீச்சு

[செவ்வாய்க்கிழமை, 21 ஓகஸ்ட் 2007]


யாழ்ப்பாணக் குடாநாட்டில் சிறிலங்கா இராணுவத்தினர் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலைத் தொடர்ந்து யாழ். குடா நாட்டுக்கான வானூர்தி சேவையை சிறிலங்கா அரசாங்கம் இடைநிறுத்தம் செய்துள்ளது.

குடாநாட்டில் உள்ள சிறிலங்க இராணுவத்தினரின் காங்கேசன்துறை, மயிலிட்டி மற்றும் பலாலிப் படைத்தளப் பகுதிகளை நோக்கி தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஏவிய ஆட்டிலெறி எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன.

இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணிக்குப் பின்னர் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஏவிய 130 மில்லி மீற்றர் ரக 13 எறிகணைகளே வீழ்ந்து வெடித்துள்ளதாக சிறிலங்காப் படைத்தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது.

இத்தாக்குதல் சம்பவத்தில் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

எனினும் படையினர் தமது தரப்பில் சேதங்கள் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

வானூர்தி சேவை இடைநிறுத்தம்

இதனிடையே குடாநாட்டுக்கான வானூர்திப் போக்குவரத்தை காலவரையறையின்றி இடைநிறுத்தி வைக்குமாறு குடாநாட்டுக்கு வானூர்தி போக்குவரத்துச் சேவைகளை நடத்தும் நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இருந்து இந்த அறிவித்தல் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்த வானூர்திப் போக்குவரத்து நிறுவன அதிகாரி ஒருவர், மீண்டும் எப்போது சேவைகளை தொடங்குவது என்பது குறித்தும் தமக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறினார்.

பாதுகாப்பு அமைச்சின் இந்த அறிவிப்பால் கொழும்பில் இருந்து இன்று குடாநாட்டுக்குச் செல்லவிருந்த பயணிகள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பினர். அதேபோல் குடாநாட்டில் இருந்து கொழும்பு செல்லவிருந்த பயணிகளும் கட்டுவனில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சின் பயண அனுமதி கிடைக்காத காரணத்தாலேயே வானூர்திப் போக்குவரத்தை மேற்கொள்ள முடியவில்லை என்று மற்றொரு வானூர்திச் சேவை நிறுவன அதிகாரி தெரிவித்தார்.

நாளை புதன்கிழமையும் பயணிகளை வரவேண்டாம் என்று அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வானூர்தி ஒடுபாதையில் ஏதேனும் சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று வானூர்திச் சேவை நிறுவன உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்த போதும், அதனை பாதுகாப்புத் தரப்பினர் உறுதிப்படுத்த மறுத்து விட்டனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.