Tuesday, August 21, 2007

குடாநாட்டிலிருந்து படையினர் செறிவான பல்குழல் வெடிகணைத் தாக்குதல்

[செவ்வாய்க்கிழமை, 21 ஓகஸ்ட் 2007]


யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து இன்று காலை முதல் சிறிலங்காப் படையினர் செறிவான பல்குழல் வெடிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை படையினர் அவசர, அவசரமாக பல்குழல் வெடிகணை செலுத்திகளை யாழ். முற்றவெளி விளையாட்டு மைதானத்துக்கு நகர்த்தி இந்த செறிவான வெடிகணைத் தாக்குதல்களை நடத்தினர்.

பலாலியிலிருந்து இன்று காலை இரண்டு பல்குழல் வெடிகணை செலுத்திகள் யாழ். முற்றவெளியில் பொது மைதானத்துக்கு படையினரால் கொண்டு செல்லப்பட்டன. அங்கு வைத்து வெடிகணைத் தாக்குதலை படையினர் நடத்தியுள்ளனர்.

வெடிகணைத் தாக்குதலை படையினர் நடத்திவிட்டு உடனடியாக அங்கிருந்து அதனைப் பின்னகர்த்துவதும் அதன் பின்னர் முன்னகர்த்தி தாக்குதல் நடத்துவதுமாக பல மணி நேரம் வெடிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது

இதனால் யாழ். போதனா மருத்துவமனை அமைந்துள்ள பகுதியும், யாழ். நகரமும் அதிர்ந்த வண்ணமிருந்தது.

தொடர்ச்சியான தாக்குதலை படையினர் கடற்பகுதி மற்றும் யாழிலிருந்து தென்கிழக்குப் பகுதி நோக்கி நடத்தினர்.

அதேவேளை நகரை அண்டிய பகுதியிலிருந்தும் கோப்பாய் வெளிப்பகுதியிலிருந்து படையினர் முகமாலைப் பகுதியை நோக்கியும் எறிகணைத் தாக்குதல் மற்றும் பல்குழல் வெடிகணைத் தாக்குதலையும் நடத்தியுள்ளனர். இதனால் யாழ். முழுவதும் அதிர்ந்துள்ளது.

இதனிடையே யாழ். தீவகத்துக்கான போக்குவரத்து இன்று காலை முதல் படையினரால் தடை செய்யப்பட்டுள்ளது.

யாழ். நகரிலிருந்து தீவகத்துக்குச் செல்லும் பண்ணை நுழைவாசல் பாதை படையினரால் மூடப்பட்டுள்ளது.

தீவகத்துக்கான போக்குவரத்து இன்று படையினாரால் முற்றாக தடைசெய்யப்பட்டு பண்ணை மற்றும் முற்றவெளிப்பகுதியில் படையினரின் தொலைவீச்சு பல்குழல் வெடிகணை செலுத்திகள் நிறுத்தப்பட்டு வெடிகணைத் தாக்குதல்கள் படையினரால் நடத்தப்பட்டதால் பாதை தடை செய்யப்பட்டது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.