Thursday, August 23, 2007

பட்ஜெட்டின் போது அரசை கவிழ்க்க ரணில், மங்கள கூட்டுச் சதித் திட்டம்

[வியாழக்கிழமை, 23 ஓகஸ்ட் 2007]

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஆட்சியை கவிழ்ப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவும் மங்கள சமரவீரவும் கூட்டுச்சதியொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்திருக்கும் அரசாங்கம் இந்தச் சதியை பட்ஜட் விவாதத்தில் மேடையேற்றத் தயாராகி வருவதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

எதிரணிக் கட்சிகள் கூறுபட்டிருப்பதால் அவர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறப் போவதில்லையெனவும் அரசு தரப்பு குறிப்பிட்டிருக்கின்றது.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது அமைச்சர்கள் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தனவும் இக்குற்றச்சாட்டைச் சுமத்தினர்.

அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே இங்கு கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது;

ரணிலும் மங்களவும் பகல் கனவு கண்டு கொண்டிருக்கின்றனர். இந்த அரசை அதன் பதவிக்காலம் முடியும் வரை எவராலும் அசைக்க முடியாது.

ஆட்சியை கவிழ்ப்பதற்கு ஜே.வி.பி., ஐ.தே.க.வுடன் ஒருபோதும் துணைபோகப் போவதில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பட்ஜட் காலத்தில் விலகி நிற்பார்களேயொழிய எதிர்த்து வாக்களிக்கப் போவதில்லை. எதிரணியில் தம்முடன் 107 பேர் இருப்பதாகக் கூறும் மங்கள அவர்கள் யாரென பட்டியல் போட்டுக் காட்ட முடியுமா எனக் கேட்கின்றேன்.

ரணிலுக்கும் மங்களவுக்கும் ஒரு சவால் விடுக்கின்றேன். அதிகம் தேவையில்லை பட்ஜட் காலத்தில் ஆளும் தரப்பிலிருந்து ஒரு உறுப்பினரை தம்பக்கம் எடுத்துக்காட்டட்டும் பார்க்கலாம். ஆளும் தரப்பில் இருக்கும் ஒரு உறுப்பினரேனும் இந்த அரசு கவிழ்வதற்கு துணை போகப்போவதில்லை. ரணில்- மங்களவின் கனவு கனவாகவே முடியும். ஒருபோதும் நனவாக மாட்டாது.

அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது;

2008 பட்ஜட்டை ஆட்சி கவிழ்ப்புக்கு பயன்படுத்த ரணிலும் மங்களவும் திட்டமிடுகின்றார்கள். அவர்களுக்கு வாய்ப்பளிக்கின்றோம். முடிந்தால் சாதித்துக்காட்டட்டும். ஜே.வி.பி. எந்தப் பக்கத்தில் இருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து அரசைக் கவிழ்க்க ஒருநாளும் துணை போகமாட்டாது. அப்படிப்போனால் அது ஜே.வி.பி.யின் அரசியல் தற்கொலைக்கு வழி வகுத்துவிடும் என்பதை அவர்கள் நன்கு புரிந்துகொண்டுள்ளனர்.

யார் என்ன செய்தாலும் இந்த ஆட்சியை அதன் பதவிக் காலம் முடியும்வரை எதுவும் செய்ய முடியாது. நாட்டு மக்கள் அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதுமில்லை. 2008 பட்ஜட்டை தோற்கடிக்கும் திட்டம் ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.