Friday, August 24, 2007

அரசு ஒருபோதும் பயங்கரவாதிகள் போன்று செயற்பட முடியாது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கூறுகிறார்

[வெள்ளிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2007]

ஜனநாயகமான முறையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒருபோதும் பயங்கரவாதிகள் போன்று செயற்படமுடியாது. பயங்கரவாதிகளுடன் மோதலில் ஈடுபடுகின்றோம் என்பதற்காக அரசாங்கம் பயங்கரவாதத்தில் ஈடுபடக்கூடாது.

சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமற் போனோர் குறித்து சிறிலங்காவிற்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் சந்திரிகாவை அவரது இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை சந்தித்துப் பேசினர்.

இச்சந்திப்பு ஒரு மணி நேரம் நடைபெற்றது. சந்திப்பின் முடிவில் ஊடகவியலாளர்களிடம் சந்திரிகா கூறியதாவது:

எனது ஆட்சிக்காலத்திலும் சில மனித உரிமை மீறல்கள் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டது. ஆனால் அந்த முறைப்பாடுகளுக்கு அரசின் தலைவர் என்ற ரீதியிலும் முப்படைகளின் தளபதி என்ற வகையிலும் உரிய நடவடிக்கைகளை உடனடியாகவே நான் மேற்கொண்டேன்.

ஆனால் தற்போதைய அரசாங்கம் பயங்கரவாதிகளை தோற்கடிக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக கூறிக்கொண்டு தெருச்சண்டியர் போன்று செயற்படுகிறது.

பொறுப்புள்ள அரசாங்கத்துக்கு தெளிவான கொள்கை இருக்க வேண்டும். இந்த அரசிடம் அதனை சிறிதளவும் காண முடியவில்லை. கடந்த காலங்களிலும் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தது உண்மை. ஆனால், அவை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு தவறு செய்தோர் தண்டிக்கப்பட்டனர். ஆனால், இன்று மோசமான மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்ந்தால் அனைத்துலகம் ரீதியாக மோசமான விளைவை சிறிலங்கா எதிர்கொள்ள நேரிடும்.

சிறிலங்காவில் நிகழும் மனித உரிமை மீறல்களை எனது அனுபவத்துடன் கூடிய செல்வாக்கைப் பயன்படுத்தி அனைத்துலகத்தின் முன்கொண்டு செல்ல என்னால் முடியும். அதற்கு நான் ஒருபோதும் பின்நிற்க போவதில்லை என்றார் அவர்..

1 comment:

  1. முதலில் அவா செய்து காட்டி இருக்கவேனும்,

    ஊருக்குத்தான் உபதேசம் உணக்கு இல்லையடி கண்ணே

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.