[புதன்கிழமை, 25 யூலை 2007] திருகோணமலை மாவட்டம் மூதூர், சம்பூர் பிரதேசங்களை அதிஉயர் பாதுகாப்பு வலயமாக சிறிலங்கா அரசாங்கம் பிரகடனப்படுத்தியதைக் கண்டித்து தமிழர் தாயகம் முழுவதும் இன்று புதன்கிழமை முழு அளவில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. பாடசாலைகள், சிறிலங்கா அரசாங்க திணைக்களங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் ஆகியன இயங்கவில்லை. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. போக்குவரத்துக்களும் தடைப்பட்டன. யாழ்ப்பாணம் யாழ். நகரப்பகுதிகளில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பல்கலைக்கழக சுற்றாடலிலும் பலாலி வீதியிலும் பெருமளவிலான சிறிலங்கா இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். நகரப்பகுதி பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லாததால் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டன. சிறிலங்கா அரச பேரூந்துகள் மட்டும் சேவையில் ஈடுபட்டன. இருப்பினும் அவையும் மட்டுப்படுத்தப்பட்ட சேவையையே மேற்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிராமப்பகுதி கடைகளின் உரிமையாளர்களை மிரட்டி கடைகளை திறக்குமாறு சிறிலங்கா இராணுவத்தினர் ஒலிபெருக்கியில் அறிவித்தல் விடுத்தனர். யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தகர்கள் பலர் துப்பாக்கிமுனையில் இராணுவத்தினரால் மிரட்டப்பட்டுள்ளனர். சங்கானையில் காலை 9.00 மணி வரை அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டு இருந்த போதிலும் இராணுவத்தினர் வீடுகளுக்குச் சென்று வர்த்தகர்களை அழைத்து வந்து கடைகளை திறந்து மாலை வரை பூட்டக்கூடாது என அச்சுறுத்தி விட்டும் சென்றுள்ளனர். இருப்பினும் பெருமளவில் யாழ். நகரப் பகுதியில் கடைகள் பூட்டப்பட்டுக் காணப்பட்டன. யாழ். குடாநாட்டில் வழமைக்கு மாறாக மக்கள் நடமாட்டமும் குறைவாக காணப்பட்டது. கிளிநொச்சி- முல்லைத்தீவு கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் முழுமையான பணிப் புறக்கணிப்பு கடைப்பிடிக்கப்பட்டது. கடைகள் மூடப்பட்டதுடன் போக்குவரத்தும் நடைபெறவில்லை. வீதிகளிலும் கடைகளிலும் கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டன. வவுனியா வவுனியாவில் நகரப்பகுதி கடைகள் திறக்கப்படவில்லை. பாடசாலைகள், வங்கிகள், சிறிலங்கா அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் அலுவலகங்கள் ஆகியன இயங்கவில்லை. அனைத்து வீதிகளும் வெறிச்சோடிக் கிடந்தன. மக்கள் வீடுகளில் முடங்கியிருந்த போதும், நண்பகல் மூடப்பட்ட கடைகளைத் திறக்க வலியுறுத்தி ஒலிப்பெருக்கி மூலமாக சிறிலங்கா காவல்துறையினர் அறிவித்தல்களை விடுத்த வண்ணம் இருந்தனர். எனினும் அங்கு கடைகள் திறக்கப்படவில்லை. ஓமந்தை சோதனைச் சாவடி வழமை போல திறக்கப்பட்டிருந்தது. எனினும் மக்கள் போக்குவரத்து குறைவாக இருந்ததாக வவுனியா செய்திகள் தெரிவிக்கின்றன. மன்னார் மன்னாரில் போக்குவரத்துச் சேவைகள் எதுவுமே இயக்கப்படவில்லை. சிறிலங்கா அரசாங்கம் மற்றும் தனியார் ஊழியர்கள் அனைவருமே பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிலங்குளம் பாதை போக்குவரத்துக்காக திறக்கப்பட்டிருந்தது. பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லாததால் இன்று நடைபெறவிருந்த இரண்டாம் தவணைத் தேர்வுகள் எதிர்வரும் சனிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டன. திருகோணமலை சிறிலங்கா ஆக்கிரமிப்பில் உள்ள திருகோணமலையில் பெரும்பாலான பகுதிகளில் இராணுவத்தினரின் அச்சுறுத்தலுக்குப் பயந்து இன்றைய நாளில் கடைகள் திறக்கப்படடிருந்தன. எனினும் புறநகர்ப்பகுதியில் இருந்த தமிழ் மக்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டதாக திருகோணமலை செய்திகள் தெரிவிக்கின்றன. பாடசாலைகளுக்கு போதிய மாணவர் செல்லாததால் ஆசிரியர்கள் கையொப்பமிட்டுச் சென்றனர். மட்டக்களப்பு மட்டக்களப்பில் தமிழ்ப் பிரதேசங்களில் முழுமையான பணிப்புறக்கணிப்பு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. பெருமளவு சிறிலங்கா இராணுவத்தினரும் சிறிலங்கா காவல்துறையினரும் வீதிகளில் குவிக்கப்பட்டிருந்தனர். சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரின் அச்சுறுத்தல் இருந்தபோதும் பொதுமக்கள் முழு அளவில் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
Wednesday, July 25, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.