Wednesday, July 25, 2007

இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டோருக்கு 25 மில்லியன் டொலர் நிதி உதவி: ஐரோப்பிய ஒன்றியம்.

[புதன்கிழமை, 25 யூலை 2007]


இலங்கை இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டோருக்கு 25 மில்லியன் டொலர் மனிதாபிமான நிதி உதவி வழங்க உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்ரியத்தின் நிதி ஆணையாளர் லூய்ஸ் மைக்கேல் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இலங்கை வன்முறைகள் அதிகரித்து வருவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் ஆழ்ந்த கவலை கொள்கிறது. இனப்பிரச்சினையால் அனைத்துலக மனிதாபிமான விதிகள் மீறப்பட்டுள்ளன.

இந்த இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட, தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் வாழும் அகதிகள் உட்பட அனைவருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த மனிதாபிமான நிதி உதவி வழங்கப்படும்.

சுத்தமான குடிநீர், வாழ்விடம், உணவு, அடிப்படை மருத்துவ வசதி, கல்வி மற்றும் கழிப்பிட வசதிகளுக்கு இந்நிதி உதவி பயன்படும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்காளிகளாகச் செயற்பட்டு வரும் ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்கள், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினூடே இந்தத் திட்டங்கள் செயற்படுத்தப்படும்.
உதவி வழங்கும் நிறுவனங்கள், பாதிக்கப்பட்டோரை முழுப் பாதுகாப்புடன் அணுக வேண்டும். மனிதாபிமானப் பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் அனைத்து தரப்பினரும் அனைத்துலக மனிதாபிமான விதிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் மனிதாபிமான பணியாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டனம் செய்ய வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.