Tuesday, June 05, 2007

ஈழத் தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள் அனுப்ப மறுப்பு: இந்திய அரசைக் கண்டித்து பழ. நெடுமாறன் உண்ணாநிலைப் போராட்டம்.!!

[செவ்வாய்க்கிழமை, 5 யூன் 2007]

யாழ்ப்பாணக் குடாநாட்டில் பட்டினியால் வாடும் தமிழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்ப அனுமதியளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பழ.நெடுமாறன் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினார்.

சிறிலங்கா இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல் இடம்பெற்று வரும் யாழ்ப்பாணத்தில் இலட்சக்கணக்கான தமிழர்கள் போதிய உணவுப் பொருட்கள் இன்றி பட்டினியால் வாடி வருகின்றனர்.

பட்டினியால் வாடும் தமிழர்களுக்காக தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் உணவுப் பொருட்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் திரட்டப்பட்டன.




1 கோடி ரூபா மதிப்புள்ள இந்த நிவாரண பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் ஈழத் தமிழர்களுக்கு அனுப்பி வைக்க அனுமதி கோரி பழ.நெடுமாறன் தலைமையில் சேப்பாக்கத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது.

உண்ணாநிலைப் போராட்டத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆரம்பித்து வைத்து பேசிய போது கூறியதாவது:

பழ.நெடுமாறன் தலைமையில் மனித நேயப்பணி நடைபெற்று வருகிறது. யாழ்ப்பாணத்தில் காயம் அடைந்தவர்களுக்கு மருந்து மற்றும் நிவாரணப் பொருட்களை திரட்டி இருப்பது அரும்பணி.





பசி, பட்டினியால் தவிக்கும் தமிழர்களுக்கு வழங்குவதற்காக திரட்டப்பட்ட இந்த இந்த நிவாரணப் பொருட்களை மறுப்பது நியாயமற்றது. மத்திய அரசு மனித நேயத்தை குழிதோண்டி புதைத்து விட்டது.

இது பற்றி கடந்த மார்ச் மாதம் 10 ஆம் நாள் பிரதமரை சந்தித்து முறையிட்டேன். அவர் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். ஆனாலும் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. தமிழர்களுக்கு நிவாரண பொருட்கள் கொடுப்பதை தடுப்பது யார்? தமிழக மக்களிடம் இந்த பிரச்சினை விசுவரூபம் எடுக்கும் என்றார் அவர்.

மூலம்: புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.