[வியாழக்கிழமை, 28 யூன் 2007]
பதவியில் உள்ள அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பிவிட்டு புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்து நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஜே.வி.பி. அனைத்து தரப்பினரையும் இணைத்துக்கொண்டு புதிய தேசிய முன்னணியொன்றை உருவாக்கவுள்ளது. இந்த முன்னணியில் இணைந்துகொள்ளுமாறு நாட்டின் தொழிற் சங்கப் பிரதிநிதிகள் தொழில் நிபுணர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஊடகவியலாளர்கள் இலக்கியவாதிகள் மற்றும் நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம் என்று ஜே.வி.பி. யின் தலைவர் சோமவங்ச அமரசிங்க தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர ஸ்ரீபதி சுரியாராச்சி ஆகியோரையும் இணைந்துகொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றோம். அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள நாட்டை நேசிக்கின்றவர்களும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களும் எமது புதிய தேசிய முன்னணியின் கொள்கையை ஏற்றுக்கொண்டு இணைந்துகொள்ளலாம். மங்கள சமரவீர எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.
மங்கள சமரவீர தலைமையிலான சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவினர் முன்வைத்துள்ள கொள்கைத் திட்டத்தை நாங்கள் முழுமையாக நிராகரிக்கின்றோம். எந்தவகையிலும் தற்போதைய அரசாங்கத்தை தொடரவிட முடியாது. அதேவேளை இந்த அரசாங்கத்துக்கு பதிலாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் அரசாங்கம் அமைவதனையும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது :
நாட்டில் தற்போது அரசியலில் பாரிய மாற்றம் ஏற்படும் சுழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்திலிருந்து மங்கள சமரவீர மற்றும் ஸ்ரீபதி சுரியாராச்சி ஆகியோர் விலக்கப்பட்டமை முக்கிய அரசியல் மாற்றமாக அமைந்தது. அந்தவகையில் மங்கள சமரவீர அனைத்துக் கட்சிகளையும் இணைத்துக்கொண்டு புதிய அரசாங்கத்தை அமைக்கப்போவதாக அறிவித்துள்ளார். ஆனால் அவர் ஐக்கிய தேசிய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஐக்கிய தேசிய கட்சியினால் இந்த நாடு படு குழியில் தள்ளப்படுமே தவிர நாடு கட்டியெழுப்பப்படமாட்டாது. அந்தவகையில் ஐ.தே.க. வுடன் மங்கள பேச்சுவார்த்தை நடத்துவதானது பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும்.
கடந்த 60 வருடங்களாக நாட்டை ஆட்சி செய்த இரண்டு பிரதான கட்சிகளும் நாட்டை அழிவுப்பாதைக்கே இட்டுச்சென்றுள்ளன. 2485 பில்லியன் ரூபாவை நாம் வெளிநாடுகளுக்கு கடனாக கொடுக்கவேண்டியுள்ளது. இந்நிலையில் எமது கட்சியும் கடந்த 2004 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்த்திரக் கட்சியுடன் கூட்டமைப்பை ஏற்படுத்திக்கொண்டது ஒரு கட்டத்தில் சுதந்திரக் கட்சி கொள்கையை மீறியமையினால் நாங்கள் கூட்டமைப்பிலிருந்து விலகிக்கொண்டோம். அதன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் உடன்படிக்கையொன்றை செய்துகொண்டோம். அந்த உடன்படிக்கையும் பாரியளவில் மீறப்பட்டுவிட்டது.
அரசாங்கம் மஹிந்த சிந்தனையை கடுமையாக மீறிவருகின்றது. எனவே இந்த அரசாங்கத்தை பாதுகாக்கவேண்டிய அவசியம் எமக்கில்லை. மக்கள் ஆணையை மீறும்வகையில் அரசாங்கம் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து 17 எம்.பி. க்களை இணைத்துக்கொண்டது.
அரசாங்கம் தன்னை ஸ்திரப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கி இறுதியில் ஸ்திரமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் புதிய முன்னணியை உருவாக்க தீர்மானித்துவிட்டோம். இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பவேண்டிய தேவையுள்ளது. ஆனால் இந்த அரசாங்கத்துக்கு பதிலாக ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தை பதவியில் அமர்த்த முடியாது. அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியுடனோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனோ நாங்கள் ஒன்றிணைந்து செயற்படமாட்டோம். இந்நிலையில் புதிய தேசிய முன்னணியை உருவாக்கும் முயற்சியில் அடுத்த மாதத்திலிருந்து ஈடுபடவுள்ளோம். இவ்விடயம் குறித்து நாட்டின் தொழிற் சங்கப் பிரதிநிதிகள்இ தொழில் நிபுணர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஊடகவியலாளர்கள் இலக்கியவாதிகள் அரசியல்வாதிகள் மற்றும் நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம். இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கின்றோம். தற்போதைக்கும் சில அமைப்புக்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.
நாடு தற்போது தவறான பாதையில் செல்கின்றது. அதனை திருத்தி சரியான பாதையில் அனுப்புவதற்கான முயற்சிகளையே நாம் மேற்கொள்ளவேண்டும். அதற்காக ஜே.வி.பி.யின் தலைமையில் அமைக்கப்படுகின்ற புதிய தேசிய முன்னணி அரசாங்கத்தை உருவாக்கவேண்டும். அந்த அரசாங்கம் சர்வதேச சமூகத்துடன் சரியான முறையிலான உறவுகளையே பேணும். மாறாக நாட்டைக் காட்டிக்கொடுப்பதற்கான உறவுகள் சர்வதேச சமூகத்துடன் பேணப்படமாட்டாது. எமது வெற்றியை நோக்கி செல்லும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. நாம் உருவாக்கும் புதிய தேசிய முன்னணி ஜே.வி.பி. யின் தலைமையிலேயே இயங்கும். அதனால் எதிர்காலத்தில் கொள்கைகள் மீறப்படும் என்று எவரும் சந்தேகப்படவேண்டியதில்லை. தற்போது பதவியில் உள்ள அரசாங்கம் தனது தவறுகளை திருத்திக்கொள்ள நாங்கள் சந்தர்ப்பம் ஒன்றை வழங்கினோம். அதாவது 20 அம்ச யோசனை ஒன்றை கடந்த காலத்தில் அரசாங்கத்துக்கு சமர்ப்பித்தோம். ஆனால் அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.
இந்நிலையில் நாட்டில் மாற்று அரசாங்கத்தை உருவாக்குவதே ஒரேவழியாகும். அதற்கான முயற்சிகளையே நாங்கள் மேற்கொண்டுவருகின்றோம். எமது முன்னணியில் மங்கள சமரவீர மற்றும் ஸ்ரீபதி சுரியாராச்சி ஆகியோரையும் இணைந்துகொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றோம். சரியான பாதையை தெரிவுசெய்யுமாறு கேட்கின்றோம். அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி உட்பட அரசியல் கட்சிகளில் உள்ள நாட்டை நேசிக்கும் உறுப்பினர்களை இணைந்துகொள்ளுமாறு கோருகின்றோம். எமது முன்னணியின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களையும் இணைத்துக்கொள்ளத் தயாராக இருக்கின்றோம்.
இந்த செய்தியாளர் மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச அநுர குமார திஸாநாயக்க கே.டி. லால்காந்த மற்றும் விஜித்த ஹேரத் ஆகியோர் கலந்தகொண்டனர்..
Thursday, June 28, 2007
புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு தேசிய முன்னனி அமைக்க ஜே.வி.பி முடிவு.!!
Thursday, June 28, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.