[ஞாயிற்றுக்கிழமை, 24 யூன் 2007] வவுனியா - மன்னர் எல்லையில் உள்ள விளாத்திக்குளம் பகுதியில் கடந்த 02.06.07 இல் இடம்பெற்ற சமரில் படையினர் கொல்லப்பட்டு, காயமடைந்தது, காணாமற் போனோர் என ஏறத்தாழ ஒரு பற்றாலியன் படையினரை இழந்துள்ளதாக சண்டே ரைம்ஸ் தெரிவித்துள்ளது. சண்டே ரைம்சில் வெளிவந்த பாதுகாப்பு ஆய்வுப் பத்தியின் முக்கிய பகுதிகள்: ஓமந்தை நுழைவுப் பாதைக்கு மேற்காக முன்னகர்வுகள் மூலம் படையினர் தமது முன்னணி நிலைகளை முன்னகர்த்தியிருந்தனர். இந்த பகுதிகளில் மேலதிக பகுதிகளை கட்டுப்பாட்டில் கொண்டு வரும் பொருட்டு ஜூன் 2 ஆம் நாள் காலை இராணுவத்தின் 56 ஆவது படையணியும் (4 பற்றாலியன்கள்) 57 ஆவது படையணியும் (7 பற்றாலியன்கள்) கல்மடுவுக்கு வடக்கு மற்றும் வடக்கு மேற்காக விளாத்திக்குளம் பகுதியில் படை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தன. இதன் போது கடும் மோதல்கள் இடம்பெற்றன. அதன் பின்னர் அதே தினம் இரவு 8.00 மணியளவில் விடுதலைப் புலிகள் பதில் தாக்குதலை தொடுத்தனர். விடுதலைப் புலிகளின் சில குழுவினர் படையினருடன் மிக நெருக்கமாக நின்று சமர் புரிந்துள்ளனர். இந்த உக்கிர சமர் சுமார் 7 மணித்தியாலம் வரை நீடித்தது. அதனைத் தொடர்ந்து படையினர் தமது பழைய நிலைகளுக்கு பின்வாங்கியிருந்தனர். பின்னர் விடுதலைப் புலிகள் 130 மி.மீ பீரங்கித் தாக்குதலை தொடுத்தனர். அதில் ஒரு எறிகணை படையினரின் பம்பைமடுவுக்கு தென் கிழக்காக உள்ள எறிகணைக்களஞ்சியம் மீது வீழ்ந்ததினால் 800-க்கும் மேற்பட்ட 130 மி.மீ எறிகணைகள் வெடித்துச் சிதறின. அது பெரும் வெடியோசைகளையும், தீப்பிழம்புகளையும் உருவாக்கின. இந்த சமரின் போது விடுதலைப் புலிகள் படையினரின் முன்னரங்கத்திற்குள் ஊடுருவ முற்பட்டனர். சமர் பல நாட்கள் நீடித்தது. அந்த பகுதிக்கு மீண்டும் முன்னகர முயன்ற படையினர் கடும் எதிர்ப்பை சந்தித்தனர். தமது இழப்புக்கள் தொடர்பாக படையினர் மௌனமாக உள்ளனர். உயர் படைத்தரப்பு வட்டார தகவல்களின் படி 5 அதிகாரிகளும் 67 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர். இரு அதிகாரிகளும் 24 படையினரும் காணாமல் போயுள்ளனர். 20 அதிகாரிகளும், 298 படையினரும் காயமடைந்துள்ளனர். இந்த சமரில் 800 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், 700 பேர் காயமடைந்துள்ளதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது. இது மிக அதிகமான தரவு. ஏனெனில் அண்மைய மாதங்களில் கொல்லப்பட்டுள்ள மற்றும் காயமடைந்துள்ள விடுதலைப் புலிகள் தொடர்பாக படைத்தரப்பால் கூறப்படும் புள்ளி விபரங்கள் படை உயரதிகாரிகளால் தெரிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் மொத்த எண்ணிக்கையை விட அதிகமாகும். இந்த சமரின் போது காயப்பட்டவர்களை எற்றச் சென்ற பவள் கவச வாகனம் - 1, ஜீப் - 1, ஆயுதங்கள், வெடிபொருட்கள் என்பன இழக்கப்பட்டதுடன், 152 மி.மீ பீரங்கி ஒன்றும் சேதமடைந்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூலம்: புதினம்
Sunday, June 24, 2007
விளாத்திக்குள சமரில் ஒரு பற்றாலியன் படையினர் இழப்பு: சண்டே ரைம்ஸ்.!
Sunday, June 24, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.