Wednesday, June 06, 2007

தியாகி பொன். சிவகுமாரனின் கனவுகளை நிறைவேற்றியவர் பிரபாகரன்: வெ.இளங்குமரன்

[புதன்கிழமை, 6 யூன் 2007]


தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இளைஞர்கள் ஈடுபட்ட எழுச்சிக்கு வித்திட்ட உரும்பிராய் பொன்.சிவகுமாரனின் கனவுகளை தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் நிறைவேற்றினார் என்று தமிழீழ கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

"புலிகளின் குரல்" வானொலியில் இது தொடர்பாக வெ. இளங்குமரன் பகிர்ந்து கொண்ட தகவல்களின் தொகுப்பு:

உரும்பிராயில் 1950 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 26 ஆம் நாள் பொன். சிவகுமாரன் பிறந்தார். யாழ். இந்துக் கல்லூரியில் உயர்கல்வி கற்றவர். அந்தக் காலகட்டத்தில்தான் தரப்படுத்துதல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்தரப்படுத்தல் திட்டத்துக்கு எதிராகத் தொடங்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையில் தன்னையும் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு சிவகுமாரன் செயற்பட்டார். 1970-களின் தொடக்கத்தில் சிறிமாவோ அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சோமவீர சந்திரசிறீயின் வாகனத்துக்கு குண்டு வைத்தவர் சிவகுமாரன் என்று குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

1971 ஆம் ஆண்டு தொடக்கத்தில் யாழ். நகர மேயராகவும் அப்போது சிறிமா கட்சியின் அமைப்பாளராகவும் இருந்த அல்பிரட் துரையப்பாவுக்கு குறிவைத்து 2 ஆம் குறுக்குத் தெருவில் உள்ள பிரீமியர் கபே என்ற உணவுச் சாலைக்கு அருகே அவரது வாகனத்தில் குண்டு பொருத்தினார். குண்டுவெடித்து சிதறி வாகனத்தின் மேல்பக்கம் எல்லாம் பெருந்தொலைவுக்கு சென்று விழுந்தது. ஆனால் துரையப்பா வருவதற்கு முன்னரே குண்டு வெடித்துச் சிதறியது. இந்தத் தாக்குதல்கள் எமது விடுதலைப் போராட்டத்தில் முதல் தாக்குதல்கள் என்று சொல்லலாம். அவர்களின் முயற்சிகள்- இலக்குகள் வெற்றி பெறாவிட்டாலும் விடா முயற்சியாக அவை இருந்தன. அதன் பின்னர் துரையப்பாவின் வாகனத்துக்கு குண்டு வைத்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டு காலம் சிறையிலே கழித்தார். சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் மீண்டும் அவர் சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். தனியே தாக்குதல் முயற்சி என்பதுமட்டும் அல்ல. குறிக்கோளை வைத்துக் கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் ஈடுபடுத்திக்கொண்டார். இளைஞர் பேரவை அப்போது நடத்திய உண்ணாவிரதம் போன்றவற்றில் பங்கேற்று மதியுரைகளை வழங்கிச் செல்வார்.

தமிழ் மொழி மீது அவர் வைத்திருந்த பற்று அளப்பரியது. அதை நான் நேரில் காணக்கூடியதாக இருந்தது. அப்பொழுதெல்லாம் எழுத்துப் பிழைகள் விட்டு எழுதுவது என்பதை அவர் பொறுத்துக் கொள்ளமாட்டார். அப்போது நடைபெற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றில் மூன்றாம் அல்லது 4 ஆம் நாளில் உண்ணாவிரத அறிவித்தல் பலகையில் தமிழ் ஒழுங்காக எழுதப்படவில்லை என்பதற்காக ஒழுங்கு செய்தவர்களைக் கடிந்து தானே திருத்தி சரியாக எழுதியும் வைத்தார்.

1973-1974 ஆம் ஆண்டு என நினைக்கிறோம் பரிஸ்டர் அம்பலவாணனர் என்பவர் இலங்கை- இந்தியா இணைப்பு என்ற குறிக்கோளை வைத்துக்கொண்டு செயற்பட்டுக் கொண்டிருந்தார். மயிலிட்டியில் இது தொடர்பாக அவர் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்ட சிவகுமாரன், இலங்கை- இந்திய இணைப்பு என்பது எவ்விதத்திலும் பொருத்தமற்றது என்று கடுமையாக வாதாடினார்.

மயிலிட்டியில் அப்போது அவர் தலைமறைவாக இருந்தார். அவர்தான் சிவகுமாரன் என்று யாருக்கும் தெரியாது. இருப்பினும் மக்களிடத்திலே ஒரு தவறான கருத்து பரப்ப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, ஒரு அடிமைத்தனத்தை நீக்க வல்லரசு மாதிரியான நாட்டிடம் அடிமையாக இருக்கக்கூடாது என்பதற்காக வாதிட்டார் சிவகுமாரன். சிவகுமாரனுக்கு இந்தியா பற்றிய அரசியல் ரீதியான தெளிவு, மொழி மீதான பற்று கொண்டவராகவும் தவறான கருத்து ஒன்றுக்கு எதிராக வாதிடக்கூடியவராகவும் அவர் இருந்தார்.

திருநெல்வேலியில் அமைச்சர்களுக்கு கறுப்புக்கொடி போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட போது அங்கே பங்கேற்றவர்கள் ஆங்கிலத்திலே உரையாடிக்கொண்டிருந்தார். சிவகுமாரன் அந்த இடத்தில் போய் சிங்களத்திலே உரையாடத் தொடங்கினார். தமிழுக்கான ஒரு போராட்டத்தில் பங்கேற்கிறவர்கள் ஆங்கிலத்திலே உரையாடுவதைவிட சிங்களத்திலே உரையாடலாம் என்று கூறி தவறுகளை திருத்தினார். தவறு என பட்டதை தட்டிக் கேட்கக் கூடியவராக அவர் இருந்தார்.

1973 இல் மாணவர் பேரவையின் பொறுப்பாளராக இருந்த சத்தியசீலன் போன்றவர்கள் கைதான காலகட்டம். அதற்கு முதலே சிவகுமாரன் கைதாகி, அனுராதபுரம் சிறையிலே அடைக்கப்பட்டு மல்லாகம் நீதிமன்றில் வழக்குகளும் நடைபெற்றன. சிவகுமாரன் தனித்து இயங்கவில்லைதான். அவருடன் இணைந்திருந்தோர் சரியாக ஒத்துழைப்பு அளிக்காத காரணத்தால் அவரது முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

யாழ். தமிழாராய்ச்சி மாநாட்டுக்குப் பின்னர், அப்படுகொலைக்கு உத்தரவிட்ட சந்திரசேகரவைக் கொல்ல வேண்டும் என்ற முடிவை எடுத்தவர் சிவகுமாரன். மாநாடு நடைபெற்ற 9 நாளும் தன்னை தொண்டராகப் பதிவு செய்து கொண்டு மாநாடு வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தவர். அந்த நிலையில் மாநாட்டுக்கு குழப்பம் விளைவித்த சந்திரசேகரவை அங்கேயே கொல்ல வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறியவர். அதனாலேயே சிவகுமாரன் தேடப்பட்டார். சந்திரசேகரவைக் கொல்வதற்காக சிவகுமாரன் மேற்கொண்ட முயற்சி சூழ்நிலைகளால் தோல்வியடைந்தது.

பொன். சிவகுமாரனும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனும் தமிழீழ மாணவர் பேரவையில் உறுப்பினராகச் செயற்பட்டனர். இருவருமே சத்தியசீலன் தலைமையை ஏற்றிருந்தனர். தலைவரைவிட சிவகுமாரன் 4 வயது மூத்தவர். அந்தந்த பகுதிகளில் இயங்கிய மாணவர்களை வைத்து மாணவர் பேரவையை சத்தியசீலன் வழிநடத்திக் கொண்டிருந்தார். அந்த வகையில் சிவகுமாரன் ஒரு பகுதியிலும் தேசியத் தலைவர் ஒரு பகுதியிலுமாக இயங்கிக் கொண்டிருந்தனர்.

சாவகச்சேரியில் இருவரும் ஒருமுறை நேரில் சந்தித்துப் பேசினர். குறிபார்த்துச் சுடுவதில் தலைவர் தேர்ந்தவர் என்பது அப்போதே தெரிந்திருந்த விடயம். இருவரும் சந்தித்த போதே ஒரு தாக்குதல் முயற்சியை மேற்கொண்டனர். உரும்பிராய் நடராஜா என்பவர் விடுதலைக்குப் போராடிய இளைஞர்களைக் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தவர். அவர்மீது தாக்குதல் நடத்துவதற்கு சிவகுமாரன் தலைமை ஏற்றார். கோப்பாயில் காவல்துறையினர் சுற்றிவளைத்த போது அகப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக சயனைட் அருந்தி வீரச்சாவை தழுவினார். முதன் முதலில் சயனைட் அருந்தி தன்னுயிரை மாய்த்தவர். சிவகுமாரன் முயற்சித்த அல்பிரட் துரையப்பா, உரும்பிராய் நடராஜ் ஆகிய தாக்குதல்களை இயக்கம்தான் நிறைவேற்றியது. அதன்மூலம் சிவகுமாரன் எண்ணம் நிறைவேறியது.

சிவகுமாரனின் வீரச்சாவு இளைஞர்களிடத்திலே ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது. சுடுகாட்டுக்குப் பெண்கள் முதன் முதலில் வந்த நிகழ்வாக அது அமைந்தது.

எமது அமைப்பின் முதல் மாவீரரான லெப். சங்கரின் நினைவாக மாவீரர் நாளை நாம் நினைவுகூர்ந்த அந்த காலகட்டத்தில், இளைஞர்களிடத்திலே எழுச்சியை ஏற்படுத்திய சிவகுமாரனை தொடர்ந்து நினைவுகூரும் வகையிலே மாணவர் எழுச்சி நாள் கடைபிடிக்கப்பட்டது. சுற்றுச் சூழல் நாளும் ஜுன் 5 ஆம் நாள் வருவதால் ஜுன் 6 ஆம் நாள் சிவகுமாரன் நினைவாக "தமிழீழ மாணவர் எழுச்சி நாளாக" கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்றார் வெ. இளங்குமரன்.
மூலம்: புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.