Sunday, June 10, 2007

கொழும்பில் இருந்து தமிழர்களை வெளியேற்றியமையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் : இந்தியப் பிரதமர்.!!

[ஞாயிற்றுக்கிழமை, 10 யூன் 2007]

கொழும்பிலுள்ள விடுதிகளிலிருந்து ஆயுதமேந்திய பொலிஸாரினால் தமிழர்கள் வெளியேற்றப்பட்டது, அவர்களின் உரிமைகளை மீறும் செயலென இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்களும் வாழ்கின்றார்கள், அவர்களும் அந்நாட்டு பிரஜைகள் என்று குறிப்பிட்டுள்ள இந்தியப் பிரதமர், அவர்களை கொழும்பில் இருந்து வெளியேற்றியமையை தாம் வன்மையாக கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஜேர்மனியில் இடம்பெற்ற ஜி-8 மாநாட்டில் கலந்துகொண்டு நாடு திரும்பிய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் புதுடில்லியில் ஊடகவியலாளர்களிடம் பேசும்போது நேற்று சனிக்கிழமை இதனைத் கூறினார்.

கொழும்பில் இருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டமை குறித்து வெளிநாட்டு தலைவர்களுடன் கலந்துரையாடியதாகவும், சிறிலங்கா அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இலங்கையில் தமிழர்களும் சுதந்திரமாகவும், சுயாதினமாகவும் வாழ்வதற்குரிய உரிமை உள்ளவர்கள், அவர்களை பலவந்தமாக கொழும்பில் இருந்து வெளியேற்றியது சட்டவிரோதமானது என்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.

இதனிடையே கொழும்பில் இருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டதை கண்டித்துள்ள இந்தியாவின் பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சி, இதன் மூலம் தமிழ்ர்களுக்கென்று ஒரு நாட்டை உருவாக்குவதற்கு இலங்கை ஆட்சியாளர்கள் முயற்சிப்பதாக தெரிவித்துள்ளது.

இந்திய அரசாங்கம் சிறிலங்காவுக்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள பாரதிய ஜனதாவின் துணைத் தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசு, அந்த ஆயுதங்களைக்கொண்டு சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களையே அழிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவித்துவித்துள்ள நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம், தமிழர்களை பாதுகாக்க வேண்டிய அரசாங்கமே அவர்களை அழிப்பதாக தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைகளை இந்தியா தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் இல்லாவிட்டால், எமது சகோதரர்களை நாம் இழக்க வேண்டியேற்படும் என்றும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.