[திங்கட்கிழமை, 18 யூன் 2007] ஒரு நெருக்கடியில் இருந்து மறு நெருக்கடிகளுக்கு முட்டாள்த்தனமான வழிகளில் சிறிலங்கா நகர்கிறது என்று மகிந்த அரசாங்கத்தை கொழும்பிலிருந்து வெளியாகும் "சண்டே லீடர்" வார இதழ் சாடியுள்ளது. "சண்டே லீடர்" வார இதழின் அரசியல் பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அனைத்துலக சமூகத்தினால் தனிமைப்படுத்தப்படும் நிலையை அடைந்துள்ளது. அதன் பிரதான காரணம் சிறிலங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களின் தீவிரம் தான். அதேசமயம் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் வாரங்களில் வீதிகளில் இறங்கி போராட உள்ளது. மகிந்த அரசு எல்லா முனைகளிலும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது, அதில் சந்தேகமில்லை. ஒரு நெருக்கடியில் இருந்து மறு நெருக்கடிகளுக்கு முட்டாள்த்தனமான வழிகளில் அரசாங்கம் நகர்ந்து கொண்டு வருகின்றது. இவற்றில் மிகவும் பெரிய முட்டாள்த்தனம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உத்தரவுக்கு அமைய தமிழ் மக்களை கொழும்பில் இருந்து வெளியேற்றியது தான். அதனால் நாட்டுக்கு ஏற்பட்ட சேதத்தினைக் குறைப்பதற்கு பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். ஆனால் அவரின் மீது கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான குழுவினரால் கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்தக் குழுவில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளையும் அடங்குவார். கடந்த செவ்வாய்க்கிழமை கோத்தபாய ராஜபக்சவினால் பிபிசி மற்றும் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நேர்காணலில் அவர் தமிழ் மக்களை கொழும்பில் இருந்து வெளியேற்றியதனை மட்டும் நியாயப்படுத்தவில்லை. அனைத்துலக சமூகத்தையும் கடுமையாக சாடியிருந்தார். அதிலும் குறிப்பாக பிரித்தானியா மற்றும் அமெரிக்காவை அவர் கடுமையாக தாக்கியிருந்தார். ஆனால் எதிர்வரும் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பு பிரித்தானியாவுக்கு செல்லது குறிப்பிடத்தக்கது. பிரதமரின் மன்னிப்பை நிராகரித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தமிழ் மக்களை தடுப்புக்காவலில் வைக்காது வெளியேற்றியது மிக நல்ல அணுகுமுறை என தெரிவித்திருந்தார். இது ஒரு பொறுப்பு வாய்ந்த அறிக்கை அல்ல என்பதனை விட மிகவும் நகைச்சுவை மிக்க அறிக்கையாகும். ஏனெனில் எந்த குற்றமும் செய்யாத மக்களை எவ்வாறு தடுத்து வைக்க முடியும்? சரி மறுபுறமாக சிந்தித்தால் குற்றம் செய்தவர்கள் என சந்தேகபடுபவர்களை எவ்வாறு வவுனியாவுக்கு அனுப்ப முடியும்? பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் நேர்காணலில் இந்த யதார்த்தங்கள் பிழையாகிப் போயுள்ளது. மேலும் ஜெனீவாவுக்கு மகிந்த செல்ல திட்டமிட்டுள்ள வேளையில் தாம் மேற்குலக நாடுகளைச் சார்ந்திருக்கவில்லைஎன கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டது, அரசாங்கத்தை நெருக்கடிக்குத் தள்ளியள்ளது. ஒரு சமயத்தில் கடத்தல்களில் இராணுவத்தினர் ஈடுபடுவதனையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். தமிழ் மக்களை வெளியேற்றியது சரியான முடிவு என பெர்னாண்டோ புள்ளே மீண்டும் கடந்த புதன்கிழமை கூறியுள்ளார். ஆனால், அதேசமயம் ஜெனீவாவிலும், ரொறொன்ரோவிலும் தமிழ் மக்கள் அரசுக்கு எதிராக பெரும் கண்டணப் பேரணிகளை நடத்தியுள்ளனர். எனினும் நீதி அமைச்சர் டிலான் பெரேரா, பிரதமருக்கு சார்பாக பேசியிருந்தார். 24 மணிநேரம் கழித்து ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்ப பிரதமரின் மன்னிப்பு அரசின் உத்தியோகபூர்வ மன்னிப்பாகும் என தெரிவித்திருந்தார். அரசுக்குள் ஏற்பட்ட இந்த பிளவு பசில் ராஜபக்சவின் வருகையுடன் அதிகரித்தது. அவர் எதிர்க்கட்சித் தலைவர் மீதான தனது நடவடிக்கையை மட்டும் தீவிரமாக்கவில்லை, தமிழ் மக்களை வெளியேற்றியதனையும் நியாயப்படுத்த முயன்றுள்ளார். இதற்கு ஆதரவாக அவரால் நன்கு திட்டமிடப்பட்ட ஒரு தகவல் ஒன்று வெளியே விடப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் கொழும்பு நகரத்தை அழிக்க திட்டமிட்டுள்ளதனை புலனாய்வுத்துறை அறிந்து கொண்டதாக வெளியிடப்பட்ட செய்தியே அது. விடுதலைப் புலிகள், கொழும்பு துறைமுகத்தை தாக்கும் அதேசமயம் நகரத்தையும் தாக்கப்போவதாக ஒரு பிரபல தொலைக்காட்சியினால் கடந்த புதன்கிழமை இரவு வெளியிடப்பட்ட தகவல் மறுநாள் நாட்டில் உள்ள எல்லா ஊடகங்களையும் ஆக்கிரமித்திருந்தது. எனினும் இந்த திட்டத்தை வகுத்தவர்கள் ஒன்றை உணரவில்லை. அதாவது இது அனைத்துலக மட்டத்தில் பரவும் போது அது தற்போது தமது காப்புறுதித் தொகைகளை அதிகரித்துள்ள நிறுவனங்களுக்கு தமது நடவடிக்கைகளை நியயப்படுத்த போதுமானது. இது நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும். முதலீட்டார்களை மட்டுமல்லாது, கப்பல் போக்குவரத்து, வானூர்திப் போக்குவரத்து என்பனவும் பாதிக்கப்படும். கடத்தல்காரர்கள் தற்போது முஸ்லிம் வர்த்தகர்களை குறிவைத்திருப்பது நிலைமையை மேலும் மோசமாக்கி உள்ளது. இது தொடர்பாக அமெரிக்கா தூதுவர் றொபேட் ஓ பிளேக்குடன் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ராவூப் ஹக்கீம் கடந்த வியாழக்கிழமை சந்திப்பொன்றை நடத்தியுள்ளார். இச்சந்திப்பின் போது என்ன நடைபெறுகின்றது என்பதனை ஹக்கீம் தெளிவாக விளக்கியுள்ளார். அதாவது கடத்தல்காரர்கள், வர்த்தகர்களின் வரி மற்றும் வங்கி விபரங்கள் தெரிந்து வைத்திருக்கின்றனர். அவர்கள் வீதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் தமது அடையாள அட்டைகளை காண்பித்து விட்டு இலகுவாக செல்கின்றனர் என ஹக்கீம் தெரிவித்துள்ளார். இவற்றை எல்லாம் அனைத்துலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த நெருக்கடிகளை சாமாளிப்பதற்காக மகிந்த ராஜபக்ச, கடந்த ஜூன் 14 ஆம் நாள் ஜெனீவாவுக்கு பயணமாகியுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Monday, June 18, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.