Wednesday, June 13, 2007

தமிழ் மக்களை வெளியேற்றிய கோத்தபாய பதவி விலகவேண்டும்: ஐ.தே.க.

[புதன்கிழமை, 13 யூன் 2007] சிறிலங்கா தலைநகர் கொழும்பில் உள்ள விடுதிகளில் இருந்து தமிழ் மக்களை பலவந்தமாக வெளியேற்றியதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சாவே காரணம் என்பதால் அவர் பதவி விலக வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது. ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறீ ஜெயசேகர இது தொடர்பில் கொழும்பு ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது: கடந்த மே மாதம் 31 ஆம் நாள் பாதுகாப்பு அமைச்சில் கோத்தபாய தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் மூத்த காவல்துறை உதவி ஆணையாளரான மகிந்த பாலசூரியாவினால் சம்மந்தப்பட்ட காவல்நிலைய பெறுப்பதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட சுற்று அறிக்கையில் விடுதிகளில் உள்ள தமிழ் மக்களை வெளியேற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களை வெளியேற்றியது தொடர்பாக விசாரணைகளுக்கு மகிந்த உத்தரவு பிறப்பித்துள்ள அதே சமயம் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க தமிழ் மக்களை வெளியேற்றியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இது மிகச்சிறந்த நகச்சுவை. தாங்கள் என்ன செய்கின்றோம் என்பது அரசுக்கு தெரியவில்லை. பிரதமர் அவசரமான விடுத்த மன்னிப்பின் மூலம் யாரை காப்பாற்ற முனைந்துள்ளார்? நாட்டின் வரலாற்றில் அரசு மன்னிப்பு கோரியது இது தான் முதல் தடவையாகும். தமிழ் மக்களின் இந்த வெளியேற்றத்திற்கு காரணமானவர் மகிந்தவின் சகோதரராவார். எனவே அதற்கு காரணமானவர்கள் மீது மகிந்த உண்மையிலேயே நடவடிக்கை எடுக்க விரும்பினால் முதலில் அவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை தான் பதவியில் இருந்து நீக்குவதன் மூலம் தண்டிக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளதாவது: பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க தமிழ் மக்களை வெளியேற்றியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால் அரசின் மற்றுமொரு வலிமை மிக்க அமைச்சரான ஜெயராஜ் பெர்ணாண்டோபிள்ளை பிரதமரின் மன்னிப்பை கண்டித்துள்ளார். எனவே நாம் யாருடைய கூற்றை கருதுவது. இந்த நடவடிக்கைக்கு மூல காரணமானவர்களையே அரசு தண்டிக்க வேண்டும். அதற்கு துணை போனவர்களை அல்ல. காவல்துறை அதிகாரிகள் மேலிடத்து உத்தரவுகளை நடைமுறைப்படுத்தியவர்கள். எனவே அவர்களை தண்டிப்பதில் அர்த்தமில்லை என தெரிவித்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.